2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்

Princiya Dixci   / 2021 ஜூலை 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

சிறுவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பின்மை தொடர்பான பல விடயங்களை வீட்டுவேலைத் தொழிலாளர் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“டயகம சிறுமியின் மரணம் இலங்கைக்கு  அதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கையில் சிறுவர்களை பணிக்கு அமர்த்தல், துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராகக்  கடுமையான சிறுவர் சட்டம் இருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சிறுமியை வீட்டுவேலைக்கு அமர்த்தியிருப்பது முதலாவது குற்றமாகும்.

“அத்தோடு, அச்சிறுமி சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை பாரிய குற்றச் செயல்களாகும்.

“இச்சிறுமியின் இழப்பு  ஈடுசெய்ய முடியாத ஓர்  இழப்பு என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இச்சிறுமியின் மரணமானது இலங்கைக்கான கடைசிப் படிப்பினையாக அமைய வேண்டும்.

“அதுமட்டுமன்றி,  இதற்கு காரணமானவர்கள் உடனடியாக குற்றவியல் சட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தி, அவர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதுடன், சிறுமியின் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்கச் செய்தலும் அரசின் பாரிய பொறுப்பாகும்.  
“இதன் முதற்படியாக  வீட்டுவேலைத் தொழிலுக்கான வயதெல்லை, கொடுப்பனவு, விடுமுறை மற்றும் பாதுகாப்பு உட்பட மேலும் இவ்வாறான சம்பவங்கள் வீட்டுவேலைத் தொழிலில்  நிரந்தரமாக ஏற்படாமல் இருப்பதற்கான பொறிமுறைகளையும்  அரசு உடனடியாக கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .