2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

இக்கட்டான பொருளாதாரத்திலும் நம்பிக்கை தரும் நீண்டகால முதலீடு

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போன்ற நாடொன்றில் தற்போதைய நிலையில் பொருளாதார ரீதியான உறுதிப்பாடற்ற நிலையொன்றே காணப்படுகின்றது. இந்த நிலையில், வருமானம் மூலமாக வருகின்ற பணத்தில், எத்தகைய சேமிப்பை மேற்கொள்ள வேண்டுமென்கிற குழப்பம், நம்மிடையே நீடிக்கிறது. இதன்காரணமாக, வருமானம் உழைக்கக் கூடிய மேலதிக வழிகளை நாடாமல், பணத்தை சாதாரண சேமிப்பு, நிலையான வைப்புகளில் வைத்திருக்கின்ற நிலை தொடர்கின்றது.

சேமிப்புக்கு மேலான வருமானத்தை மிகக்குறைந்த இடநேர்வுடன் நமக்குத் தருகின்ற பாதுகாப்பான முதலீடுகளும் நம்மிடையே உள்ளன. ஆனால், அது தொடர்பில் போதுமான அறிவூட்டல்கள் இல்லாமையின் காரணமாக, முதலீடுகளை இழக்கக்கூடிய அதிகூடிய இடநேர்வுகளைக் கொண்ட முதலீடுகளையே நோக்கி நாம் சென்றுகொண்டு இருக்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அப்படியாயின், குறைவான இடநேர்வு அல்லது பூரணமாக இடநேர்வு விலக்கு அளிக்கப்பட்ட முதலீடு எது? 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள்

மிக எளிமையான முதலீட்டு வடிவமும் அனைவராலும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதுமான ஒன்றாகும். உதாரணத்துக்கு, ஒரு அசையாத சொத்தொன்று உள்ளதென வைத்துக் கொள்வோம். அதன் பெறுமதி, மிக அதிகமாக இருக்கின்றது. அதன்போது, உங்களால் அதைத் தனித்துக் கொள்வனவு செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் அந்த சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதனால் பயன்பெற முடியுமென நம்புகிறீர்கள். அப்போது, உங்கள் நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ துணையாகக்கொண்டு, அந்த சொத்தை வாங்கிக் கொள்ளுகிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம். இப்போது, அந்த சொத்தின் பெறுமதி அதிகரிக்கும்போது, அதை விற்பனை செய்து அதன் இலாபத்தை முதலீட்டுடன் சேர்த்து அனைவரும் பங்கு போட்டுக்கொள்ள முடியும்.  

இதே போன்ற செயன்முறைதான் நம்பிக்கைப் பொறுப்பு அலகுகளும் கொண்டு இருக்கின்றது. இதில், நண்பர்கள், உறவினர்களுக்குப் பதிலாக, பல முதலீட்டாளர்களின் பங்களிப்பு இருக்கும். இதன்போது, உங்களது பணம் உங்களின் சார்பாக தனித்து ஒரு பங்கில் முதலிடப்படாமல், வெவ்வேறு நிறுவனத்தின் பங்குகளிலும், அரச பிணையப் பத்திரங்களிலும் திறைசேரி முறி/உண்டியல்களிலும் முதலிடப்படும். இவற்றின் பங்கு அதிகரிக்கும்போது, அதன் பெறுமதி அதிகரிப்பதுடன், உங்களது இலாப அளவும் அதிகரிக்கும். 

பெரும்பாலான மக்களிடத்தேயுள்ள மிகமுக்கியமான சந்தேகங்களில் ஒன்று நம்பிக்கைப் பொறுப்பு அலகுகள் ஒருவகை சேமிப்பா, முதலீடா என்பதே ஆகும். நம்பிக்கை பொறுப்பு அலகுகள் ஒருவகையில் சேமிப்பாகத் தெரிந்தாலும், உண்மையில் அதுவொரு முதலீட்டு மூலமாகும்.  

நீண்டகாலத்தில் முதலீட்டுடன் இணைந்ததாக, முதலீட்டு வருமானமும் கிடைக்கின்றபோது, இதுவொரு சேமிப்பு வடிவமாகத் தோன்றினாலும், உண்மையில் சேமிப்பை விடவும் அதிக வருமானத்தை இந்த நம்பிக்கைப் பொறுப்பு வடிவங்கள் கொண்டுள்ளன. நம்பிக்கை பொறுப்பு அலகுகளின் கடந்தகால வளர்ச்சியை எடுத்துப் பார்க்கின்றபோது, அவை தொடர்ச்சியாக வளர்ச்சியைக்கொண்டுள்ளதாக உள்ளதுடன், அவை, பணவீக்கத்தை விடவும் அதிக வருமானத்தைக் கொண்டுள்ளதாக உள்ளது. குறிப்பாக, இலங்கையின் பங்குச்சந்தை மிக மந்தமாக உள்ள நிலையிலும் அல்லது ஏற்றத்தாழ்வை மிக அதிகமாகக் கொண்டுள்ள நிலையிலும், உங்கள் நம்பிக்கை பொறுப்பு அலகுகளின் மூலமான வருமானத்தில் தொடர்ச்சியான, சீரான வளர்ச்சிநிலை காணப்படுவது முதலீட்டு உத்தரவாதத்தை மறைமுகமாக உறுதிசெய்வதாகவே உள்ளது. 

பணவீக்கம் அதிகரிக்கின்ற நிலையில், பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ள நிலையில், எவ்வாறு நம்பிக்கை பொறுப்பு அலகுகளால் மட்டும் சிறப்பாக செயல்பட முடிகிறது? 

உண்மையில், நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனங்கள் ஒரு முதலீட்டாளரின் இடநேர்வை குறைக்கும் வகையில் அவரது முதலீட்டை பல்வேறு மூலங்களில் முதலீட்டாளர் சார்பாக முதலீடு செய்கிறது. உதாரணத்துக்கு, 100 ரூபாய் பெறுமதியான நம்பிக்கை பொறுப்பு அலகொன்றை நீங்கள் கொள்வனவு செய்கின்றீர்கள் எனில், அதில் உங்கள் வருமானத்துக்குள்ள இடநேர்வை சமப்படுத்தக்கூடிய வகையில் உங்கள் சார்பாக, உங்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனம் பங்குகள், அரச பிணைய பத்திரங்கள், திறைசேரி பத்திரங்களில் அந்த 100 ரூபாயைப் பிரித்து முதலீடு செய்திருக்கும். எனவே, அதற்கேற்ப உங்களது மூலதன இலாபமும் உங்களை வந்து சேர்வதால், ஒப்பீட்டளவில் ஏனைய முதலீட்டு மூலங்களுடன் ஒப்பிடுமிடத்து மிகச்சிறந்த வருமானத்தைக் கொண்டதாகவும் பாதுகாப்பைக் கொண்டதாகவும் நம்பிக்கை பொறுப்பு அலகுகள் உள்ளது. 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள் ஒப்பீட்டளவில் வங்கி வட்டிவீதங்களைவிடவும் அதிக வருமானத்தைத் தருவதுடன், பங்குச்சந்தை உட்பட ஏனைய இடநேர்வு அதிகமான முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து குறைவான அல்லது பூச்சிய இடநேர்வைக் கொண்டதாகவே இருக்கிறது. 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள் குறைந்தது 100ரூபாய் அல்லது 1,000 ரூபாயுடன் ஆரம்பிக்கப்படக் கூடியது. ஏனைய முதலீட்டு வருமானங்களுக்கு சில பல ஆயிரங்களோ, இலட்சங்களோ தேவையாக உள்ள நிலையில் முதலீடு செய்து பரீட்சித்து பார்க்கவும் நம்பிக்கை பொறுப்பு அலகுகள் இலகுவானவை. 

 

நம்பிக்கை பொறுப்பு அலகுகளின் மிகப் பிரதான நன்மையே, உங்களிடம் பணம் உள்ளபோது முதலீடு செய்ய முடிவது போல, விரும்பிய சமயத்தில் எதற்காகவும் காத்திராமல் பணத்தை மீளப் பெறவும் முடியும். இதுவே, ஏனைய பங்குகள், அசையாத சொத்துகளுடன் ஒப்பிடுமிடத்து இது மிக அதிகமான திரவத்தன்மையைக் கொண்டதாக உள்ளது. 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள் ஏனைய முதலீடுகளுடன் ஒப்பிடுமிடத்து வரிவிதிப்பில் சலுகைகளைக் கொண்டதாக உள்ளது. தற்போதைய நிலையில், வட்டிவீதங்களுக்கும் வரி விதிப்புகள் உள்ள நிலையில், குறித்த அளவுவரை நம்பிக்கை பொறுப்பு அலகுகளின் வருமானத்துக்கு வரிச்சலுகை உண்டு. 

நம்பிக்கை பொறுப்பு அலகுகள் ஒவ்வொரு முதலீட்டாளர்களின் விருப்பத்தெரிவுகளுக்கு அமையவும் வெவ்வேறு வகைப்படுத்தல்களாக உள்ளது. பெரும்பாலும், நம்பிக்கை பொறுப்பு அலகுகள் அவற்றின் வருமானம் மற்றும் இடநேர்வு அவற்றை அடிப்படையாகக்கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. 

உதாரணத்துக்கு, முதலீட்டு பாதுகாப்பு உங்களின் வருமானத்திலும் மிகமுக்கியமான விடயமாக ஒரு முதலீட்டாளருக்கு உள்ளபோது, அவர் திறைசேரி, இடநேர்வு அற்ற அரச பிணையப் பத்திரங்களை உள்ளடக்கிய நம்பிக்கை பொறுப்பு அலகுகளை தனது முதலீட்டுக்கு தேர்வு செய்ய முடியும். 

அதுபோல, குறைவான இடநேர்வுடன் அதீத வருமானத்தை எதிர்பார்க்கும் ஒருவராக இருப்பின், அவர்கள் சரிசமமாக இடநேர்வு கூடிய, குறைந்த பங்குகள், அரச பிணைய பத்திரங்களை உள்ளடக்கிய நம்பிக்கை பொறுப்பு அலகுகளைத் தேர்வு செய்ய முடியும். பெரும்பாலும், இவ்வகையான நம்பிக்கை பொறுப்பு அலகுகள் 60 சதவீத அதீத வருமானத்தைத் தரும் முதலீடுகளையும் 40 சதவீத பூச்சிய இடநேர்வுகளைக் கொண்ட முதலீடுகளையும் உள்ளடக்கிய நம்பிக்கை பொறுப்பு அலகுகளாக இருக்கும். 

எனவே, ஒரு முதலீட்டாளர் தனது நிலையையும், தனது முதலீட்டையும் அடிப்படையாகக்கொண்டு தனக்குப் பொருத்தமான நம்பிக்கை பொறுப்பு அலகுகளை கொழும்பு பங்குப்பரிவர்த்தனை ஆகியவற்றினால் அங்கிகாரம் அளிக்கப்பட்ட தரகர்கள் ஊடாக கொள்வனவு செய்துகொள்ள முடிவதுடன், தமது எதிர்காலத்தையும் பாதுகாப்புடன் கூடியதாக அமைத்துக்கொள்ள முடியும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .