2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

உங்களை ஏமாற்றுபவர்கள் இவர்களா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 26 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நம் அன்றாட வாழ்வில், அரசியல் முதல் நம் வருமானச் சேமிப்புவரை ஒவ்வொன்றையுமே விமர்சனம் செய்ய நாம் தயங்குவதில்லை. நமக்கு பிடித்த அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, பிடிக்காதவராக இருந்தாலும், சரி நாம் விமர்சனம் செய்வோம். 

நமது சேமிப்புகளை என்ன செய்வது என்பது தொடர்பிலும் பல கலந்துரையாடல்கள், விமர்சனங்களுக்குப் பின்னே ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால், நமது வருமானங்களை முதலீடு செய்ய யாரேனும் அறிவுரை வழங்குகின்ற போது, அவர்களின் தகுதிநிலையை மாத்திரம் கருத்திற்கொண்டு விமர்சனங்களுக்கு அப்பால் முதலீடுகளைச் செய்கின்ற ஒரு மனநிலை அல்லது வழக்கம் நம்மிடையே காணப்படுகிறது. 

ஒருவேளை, அவர்கள் தருகின்ற முதலீட்டுத் தீர்மானங்கள் தவறாகப் போனாலும்கூட, பெரிதாக நாம் அவர்களை விமர்சிப்பதில்லை. இதற்கு மிகப்பெரும் காரணமே, முதலீடுகள் தொடர்பிலும் முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்வது தொடர்பிலும் காணப்படும் நிதியியல் குறைபாடு, இதற்கு ஒரு காரணமாக அமைகிறது.

முதலீடு தொடர்பான எவ்விதமான முன்னறிவுமற்ற நிலையில், அது தொடர்பில் அறிந்துகொள்ளவும் அவற்றில் சிறந்த முதலீடுகளை தேர்ந்தெடுத்து, அதில் முதலீடுகளைச் செய்யவும் வழிகாட்டு முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்பில் நாம் எவ்வளவு தூரம் கவனமாக இருக்கவேண்டும்? 

அவ்வாறு, நமது நம்பிக்கையும் நமது பணத்தையும் ஏமாற்றாமல் வருமானம் ஈட்டித்தரக்கூடிய முதலீட்டு ஆலோசகர்களை எப்படி இனங்கண்டு கொள்வது? 

இது போன்ற பல்வேறு கேள்விகள் நமக்கு இல்லாமல் இல்லை. ஆனாலும், நாம் ஏனைய விடயங்களில் கேள்வி கேட்பது போல இங்கே செயற்படுவதில்லை என்பதுதான் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. 

உண்மையில், இலங்கையில் முதலீட்டு ஆலோசகர்கள் தொடர்பிலும் அவர்களிடமிருந்து நமது முதலீடுகளைப் பாதுகாப்பது தொடர்பிலும், பல்வேறு வழிமுறைகளும் சட்டதிட்டங்களும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை தொடர்பில் நாம் எத்தகைய விளக்கத்தைக் கொண்டிருக்கின்றோம் என்பதே கேள்வியாகவுள்ளது. இதனாலேயே, இன்றும் நம்மிடையே இருக்கக்கூடிய முதலீட்டு அதிக வருமானம் வேண்டுமென்கிற மனநிலையைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு இலாபங்களைச் சுருட்டி கொண்டு செல்பவர்களிடம் நாம் சிக்கிக்கொள்ளுகிறோம்.

முதலில், நமக்கான முதலீட்டு ஆலோசகரைத் தேடுவதற்கு முன் அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரை தேர்ந்தெடுக்க முன், நமது சூழ்நிலை என்ன, நமது முதலீட்டுத் தேவை என்ன, எத்தகைய முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் தெரிவுகள் நமக்குத் தேவை  என்பது போன்ற அடிப்படையான விடயங்களில் தெளிவுநிலையைக் கொண்டிருங்கள். 

இல்லாவிடின், முதலீட்டு ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனைகள், பல சமயங்களில் பேராசைக்கு வித்திட்டு, உங்கள் முதலீட்டுப் பணத்தையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடும். எனவே, உங்களுடைய தேவையை முழுமையாக வரையறுத்துக்கொள்வது அவசியமாகிறது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள் பல்வேறு எண்ணிக்கையில் இருக்கிறார்கள். முதலீட்டு ஆலோசகர்களுக்கு இலங்கையில் பஞ்சமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அவர்களிலிருந்து உங்களுடைய தேவைகளைச் சரிவர கவனித்துக் கொள்ளக்கூடியவர்கள் மற்றும் உங்களது முதலீட்டு அளவுக்கு சிரத்தை எடுத்து ஆலோசனைகளையும், முதலீட்டு செயற்பாடுகளையும் முன்னெடுக்கக்கூடியவர் யார் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் உங்களது முதலீட்டின் பாதி வெற்றி தங்கியுள்ளது.

உங்களது தேவைகளுக்குச் சரிவர பொருந்திச் செல்லும் முதலீட்டு ஆலோசகர்களைக் கண்டறிந்துகொள்ள இணையதளங்கள் உதவினாலும், அவை பூரணமாக உதவாது. எனவே, பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டு ஆலோசகர்களுடன் ஓர் அறிமுகக் கூட்டத்தைத் தனித்தனியாக ஏற்பாடு செய்து கலந்துரையாட வேண்டும். 

அப்போதுதான், உங்களுக்கான சிறந்த முதலீட்டாளர் தொடர்பிலும் பல்வேறு முதலீடுகள் தொடர்பிலும், ஒரு முடிவினை எடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோல, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், வேலைத்தள சக ஊழியர்கள் ஆகியவர்களிடமும், முதலீட்டு ஆலோசர்களுக்கான சிபாரிசைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் சிபாரிசு செய்த பின்பு, குறித்த முதலீட்டு ஆலோசகர்கள் உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமானவரா என்பதைக்  கலந்துரையாடல்கள் மூலமாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும். 

உங்களுடைய அனுபவம் மற்றும் முதலீட்டு சந்தையில் உங்களுடைய சாதனைகள் அல்லது செயற்பாடுகள் என்ன?

ஒரு முதலீட்டு ஆலோசகர், முதலீட்டுச் சந்தையிலும் முதலீட்டுத் தொழில்முறையில் நீண்டகாலம் இருப்பதாலும் அனுபவம் அதிகம் என்பதாலும், அவரை முதலீட்டு ஆலோசகராகத் தேர்ந்தெடுக்க முடியாது. மாறாக, குறித்த அனுபவ காலத்தில் அவர்கள் மேற்கொண்ட முதலீட்டு வெற்றிகள், அவரது சந்தை தொடர்பான அறிவு ஆகியவற்றின் அடிப்படையிலேயே அவரின் தேர்ச்சியைத் தீர்மானித்து, குறித்த நபரைத் தேர்ந்தெடுப்பதா, இல்லையா என்கிற முடிவுக்கு வரமுடியும்.

உங்களுடைய முதலீட்டுத் தேவை என்ன?

முதலீட்டு ஆலோசகர் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும், குறித்த நபர் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றாற்போல நடந்துகொள்ளக்கூடியவராக அல்லது உங்களது முதலீட்டு தேவையை பூர்த்தி செய்துகொள்ளக்கூடியவராக உள்ளபட்சத்தில் மட்டுமே இணைந்துச் செயற்படக்கூடியதாக இருக்கும்.

முதலீட்டு ஆலோசகருடனான தொடர்பாடல் முறை?

முதலீட்டு ஆலோசகர் உங்களது தேவைகளை பூர்த்தி செய்யக்கூடியவகையில், உங்களுடன் எப்போதுமே தொடர்பில் இருக்கக்கூடியவராக அல்லது இலகுவாகக் தொடர்புகொள்ளக் கூடியவராக இருக்கவேண்டியது அவசியமாகிறது.

இவற்றின் அடிப்படையில், உங்களுக்கு உகந்தவொரு முதலீட்டு ஆலோசகரைத் தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.  அதுபோல, முதலீட்டாளர்களைத் தெரிவு செய்தபின்பு, அவர்களது செயற்பாடுகள் உங்களுக்குத் திருப்தியளிக்காத பட்சத்தில், அவர்களை மாற்றவோ, அவர்கள் சார்ந்த முறைப்பாடுகளை மேற்கொள்ளவோ பின்நிற்கக்கூடாது. 

காரணம், முதலீட்டு ஆலோசகர்கள் சந்தை நிலையைக் கவனத்திற்கொண்டு, ஆலோசனை வழங்குபவர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆனால், நாம்தான் அந்த ஆலோசனைகளுக்கு அமைவாகப் பணத்தை முதலீடு செய்கின்றவர்கள். முதலீட்டுத் தவறு ஏற்படின், நட்டத்தை எதிர்கொள்பவர்கள் நாமே..! எனவே, முடிவுகளை எடுப்பதில் எப்போதுமே பின்னிற்கக் கூடாது.

உங்கள் முதலீட்டு ஆலோகர்களால் நீங்கள் முறையற்ற வகையில் நடத்தப்பட்டதாக உணர்ந்தால் அல்லது சில முறைகேடுகளைச் சந்தித்துள்ளதாக அல்லது ஏமாற்றபட்டுள்ளதாக உணர்ந்துகொண்டால், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற முடியும்.  

-    குறித்த பிரச்சினை நிகழ்ந்த 03 மாதகாலத்துக்கு உங்கள் முதலீட்டு ஆலோசகர் தொடர்பில் இணக்க அலுவலகரிடம் (Compliance Officer) முறைப்பாட்டைச் செய்யமுடியும்.

-    குறித்த இணக்க அலுவலகர் மூலம் உங்களுக்குக் கிடைக்கப்பெற்ற தீர்வில், போதிய திருப்தி அடையாத பட்சத்தில், அது தொடர்பான முறைப்பாட்டை எழுத்துவடிவில் கொழும்பு பங்குசந்தைக்கு அறிவிக்க முடியும்.

-    குறித்த முறைப்பாட்டுக்கு, கொழும்பு பங்குச் சந்தையின் தீர்வுகளும் திருப்தியானதாக அமையாத பட்சத்தில் பிரச்சினைகளைத் தீர்க்கும் குழுவுக்கு (Dispute Resolution Committee) கொண்டுசெல்ல முடியும்.

-    பிரச்சினைகளைத் தீர்க்கும் குழு (Dispute Resolution Committee) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டு, அது சார்ந்த முடிவுகளைக் கொழும்பு பங்குச் சந்தையின் இயக்குநர் சபைக்கு அறிவிக்கும். அவர்கள் முடிவை நடைமுறைபடுத்துவது தொடர்பில் முதலீட்டுத் தரப்பினருக்கு அறிவிப்பார்கள்.

ஆகவே, முதலீட்டு ஆலோசகர்களை நம்பிக்கைக்கு உரியவர்களாகத் தேர்வு செய்யவேண்டிய பொறுப்பும் நமது முதலீட்டை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் ஒரு முதலீட்டாளராக நமக்கு உண்டு. ஆனால், நமது முடிவுகள் எல்லா சந்தர்ப்பத்திலும் நாம் எதிர்பார்த்தது போலவே அமையாது. அத்தகைய சந்தர்ப்பங்கள் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதும், எவ்வாறு பாதிக்கப்பட்ட முதலீட்டளார் ஒருவரை மீட்டெடுக்க முடியும் என்பதையுமே மேலேயுள்ள அறிவுறுத்தல்கள் குறிப்பிட்டு உள்ளன. 

ஒட்டுமொத்தத்தில், முதலீட்டாளராகிய நீங்களும் முதலீட்டு ஆலோசகர்களும் பங்காளர்கள் போன்று உங்கள் நிதிக் குறிக்கோளை அடைந்துகொள்ள இணைந்து இயங்குகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் இருவருக்குமே, உங்கள் குறிக்கோளை அடைந்துகொள்வதற்கு உங்கள் இருவருக்குமே தனித்தனியான பொறுப்புகள் உண்டு என்பதுடன், இருவருமே முதலீட்டு வெற்றி என்கிற புள்ளியில் ஒன்றிணைந்து, ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கைக்குரியவர்களாக செயற்படும்போது மட்டுமே வெற்றியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X