Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2017 மார்ச் 06 , பி.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படும். அக்காலப்பகுதிக்குள் இரண்டு வெற்று வாளிகளே வழங்கப்படுகின்றன. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, தான் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்
எம். பியுமான விமல் வீரவன்ச, நீதிமன்றத்தில் தெரிவித்தார். இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அஞ்சியே, ஒவ்வொருநாளும் இரவு உணவைத் தவிர்த்துவருகின்றேன். குறைவாகவே தண்ணீர் அருந்துகின்றேன் என்றும் நீதிமன்றின் கவனத்துக்கு விமல் கொண்டுவந்தார்.
91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, விமல் வீரவன்சவுக்கு, எதிரான வழக்கு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், நேற்று (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதிகள் கூண்டிலிருந்த விமல் வீரவன்ச, தனது சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் இன்றையதினம் (நேற்று) நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ஆகையால், நான் விசேட தொகுப்புரை செய்யவேண்டும், அது மன்றில் பதிவு செய்யப்படவும் வேண்டும் என்று கோரினார்.
அதற்குப் பதிலளித்த நீதவான், வழக்குடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே கூறவேண்டும். மிகக்குறுகிய காலத்துக்குள் கூறிமுடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தியதுடன், வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு மீண்டும், முற்பகல் 11.30 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தட்டச்சுப் பொறியுடன் தட்டெழுத்தாளர் ஒருவர் வந்து அமர்ந்திருந்ததுடன், விமல் வீரவன்சவின் தொகுப்புரையை பதிவுசெய்வதற்குத் தயாரானார்.
தனக்கு வழங்கப்படும் பாதுகாப்புத் தொடர்பிலும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் தான் கைதுசெய்யப்பட்டமை தொடர்பிலான காரணங்களையும் மன்றில் அறிவிக்கவுள்ளதாக விமல் தெரிவித்தார்.
சுருக்கமாகவும் தெளிவாகவும் மேற்குறித்த இரண்டு விடயங்களை மட்டும் கூறவேண்டும் என நீதவான் பணித்த பின்னர், விமல் எம்.பி தனது தொகுப்புரையைத் தொடங்கினார்.
54 நாட்களாக தான் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தனது பாதுகாப்பு நிலைமை தொடர்பில் சொல்ல முன்பு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரைப் பற்றிக் கூறவுள்ளதாகத் தெரிவித்தார்.
பொதுச் சொத்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ், ஒருவரைக் கைது செய்த பின்னர், அல்லது மோசடி தொடர்பில் ஒருவர் சரணடைந்த பின்னரே, உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் கையெழுத்திடப்பட்ட சான்றிதழ் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
எனினும், தான் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அந்தச் சான்றிதழ் சமர்பிக்கப்பட்டதாகவும் அறிவித்தார்.
“அரச நிறுவனமொன்றில் நட்டம் ஏற்படும் போது அது தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியது அந்த நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி மற்றும் நிறைவேற்று அதிகாரிகளாவர்.
என்னை நீண்ட காலத்துக்கு விளக்கமறியலில் வைப்பதற்கு, நீதிபதிகள் வழங்கிய ஆலோசனைக்கு அமையவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஆஷு மாரசிங்க இருந்த காலப்பகுதியில், வாடகைக்கு அமர்த்தப்பட்ட 11 வாகனங்களை எனது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட இந்தப் பிரிவு, தமது நீதிபதிகளின் ஆலோசனைக்கு அமையச் செயற்படுகிறது.
நான் முன்பு கூறிய ஆஷு மாரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அப்போது, எனக்குப் பிரதியமைச்சராக இருந்த லசந்த அழகியவண்ண தற்போதும் பிரதியமைச்சராக இருக்கிறார்.
லசந்த அழகியவண்ண, வாகனங்கள் 4ஐப் பயன்படுத்தியமை தொடர்பில், ஒரு வாகனத்தின் சாரதியிடமே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
எனக்கு முன்னர், நான் கடமையாற்றிய அமைச்சின் அமைச்சராகவிருந்த ராஜித சேனாரத்ன, வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றாரா, எவ்வாறு இத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் இலகுவாக இருக்கும்.
எனக்குப் பிணை வழங்குமாறு ஏற்கெனவே கோரப்பட்டிருந்த விசேட காரணங்களைக் கொண்டு பிணை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பாதுகாப்பு
சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு காலை 6 மணிக்கே திறக்கப்படுவதாகவும் இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு தான்; சிரமங்களை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் இரவு உணவைத் தவிர்ப்பதாகவும் குறைவாகத் தண்ணீர் அருந்துவதாகவும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். தட்டச்சுசெய்து முடித்தபின் அவற்றை சரிபார்த்து கையெழுத்திடுவதற்காக ஒத்திவைக்கப்பட்ட அமர்வு, மீண்டும் 15 நிமிடங்களின் பின்னர் ஆரம்;பித்தது.
தனது தொகுப்பை சரிபார்த்த விமல் எம்.பி அதில் கையெழுத்து இட்டபின்னர், அது நீதவானிடம் ஒப்படைக்கப்பட்டது.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே, சிறைச்சாலை அதிகாரிகள் செயற்படுகின்றனர்.
இதுதொடர்பில் உத்தரவிடுவதற்கு, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. சந்தேகநபரின் பிணை தொடர்பில், எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என அறிவித்த நீதவான், அவரது விளக்கமறியலை எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.
இந்த இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பிலும் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்து விட்டன என்று மன்றுக்கு அறிவித்த நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினர், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர். அது தொடர்பில் உடனடியாக சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன், இரண்டாவது சந்தேகநபரின் பிணை மனுவுக்காக சமர்ப்பிக்கப்பட்ட விசேட காரணிகளில், அவரது பிள்ளையொன்றுக்கு நோய் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், அதற்குரிய மருந்துச் சிட்டையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
மேலதிக வைத்தியசிகிச்சைகளுக்காக, அந்தச் சிட்டையை மீண்டும் வழங்குமாறு, சட்டத்தரணி ஷவீந்திர பெர்ணான்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசித் சிரிவர்தன கேட்டுக் கொண்டமைக்கு அமைய அச்சிட்டை விடுவிக்கப்படுவதாக நீதவான் அறிவித்தார். தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
4 hours ago