2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

சிசிர எம்.பி கேள்வியெழுப்பியிருக்காவிடில் 'வற் சட்டமூலம் நிறைவேறியிருக்கும்'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

அரசியலமைப்பின் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் சபையில் அறிவித்ததும், பிரதமர் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தன எம்.பி உரையாற்றினார்.

'அரசியலமைப்புக்கு ஏற்ப, சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். எந்த அமைச்சரும், அதை மீற முடியாது. அரசியலமைப்புக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், அது தொடர்பாக உயர்நீதிமன்றம் தலையிடும்' என, தினேஷ் எம்.பி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உரிய நடைமுறைகளின்றி இச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அது குறித்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம், என்ன காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வியெழுப்பினார். அத்தோடு, சிசிர ஜயக்கொடி எம்.பி கேள்வியெழுப்பியிருக்கவில்லை என்றால், அரசியலமைப்பின் சான்றுரைப்பு இல்லாத இச்சட்டமூலம், நிறைவேறியிருக்கும் எனவும் தினேஷ் எம்.பி குறிப்பிட்டார்.

பிரதமரை நோக்கிய அவர், 'தோல்வியடைந்திருப்பீர்கள். ஆனால், இங்கு தோல்வியென்பது பிரச்சினையில்லை. அமைச்சர் கொண்டுவந்தது, சட்டபூர்வமான ஒன்றல்ல. இவ்விடயத்தில் (அமைச்சின்) செயலாளர் தவறிழைத்திருந்தால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப நடக்க வேண்டுமெனவும், அதுகுறித்து வேறு தெரிவுகள் கிடையாது எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது, தினேஷ் எம்.பியுடன் மூண்ட பிரதமர், நல்லாட்சி உருவானதன் காரணமாகத் தான், இச்சட்டமூலத்தை வழக்குத் தொடர்ந்து, நிறுத்த முடிந்தது என்றார். இதனையடுத்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கேலியாகச் சிரித்ததோடு, பின்னர் 'ஹூ' எனவும் ஒலியெழுப்பினர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், பிரதம நீதியரசரை நிறுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் போன்றதல்ல இது என்றார். இதன்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேசையில் தட்டி, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X