2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தையிட்டியில் போராட்டத்திற்கு அழைப்பு (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் மே முதலாம் திகதி அன்று தமிழ் தேசியக் கட்சிகளும், பொது அமைப்புகளும் தாங்கள் மேற்கொள்ளும் வழமையான மே தின எழுச்சி கூட்டங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தையிட்டியில் நடத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (20) வடமராட்சி கிழக்கில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

"எதிர்வரும் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாகவும், சித்திரை பௌர்ணமியாகவும் அமைகின்ற ஒரு முக்கிய நாளாகும். அன்றைய தினத்தில் வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் தமிழ் தேசியக் கட்சிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புகள் முன்னெடுக்கும் மே தினப் போராட்டங்களைத் தையிட்டி விகாரைக்கு எதிராக ஒன்றிணைத்து, ஒரு பாரிய எதிர்ப்பு நடவடிக்கையாக வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தையிட்டியில் காணி விடுவிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி ஒரு ஆச்சரியமான விடயமாகும். பொதுவாகக் காணிகள் விடுவிக்கப்படும் போது, அவை நில அளவீடு செய்யப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால், இம்முறை தையிட்டியில் காணி அளவீடு செய்ய முற்பட்ட போது, மக்கள் அதனை எதிர்த்துத் தடுத்தால், 'மக்களே காணி விடுவிப்பைத் தடுத்தார்கள்' என்ற காரணத்தைக் கூறி அக்காணிகளை அபகரிப்பதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாக இருந்தது.

இருப்பினும், மக்கள் காணி அளவீட்டிற்குச் சம்மதித்த நிலையில் அந்தச் சூழ்ச்சி பலிக்கவில்லை. இதனால், தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஊடாகப் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து, காணி அளவீட்டைத் தடுக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டது" என முரளிதரன் குற்றம் சாட்டினார்.

பூ.லின்ரன்
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .