2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை மேயர் சிராஸும் ஜெமீலும் பகைமை களைந்து செயற்பட முடிவு

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒரே கட்சிக்குள் இரு துருவங்களாக செயற்பட்டு வந்த கல்முனை மாநகர சபை மேயர் சிராஸ் மீராசாஹிபும் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் தமக்குள் இருந்து வந்த பகைமை உணர்வைக் களைந்து ஒற்றுமைப்பட்டுள்ளார்கள்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளும் ஊர்ப் பிரமுகர்களும் மேற்கொண்ட முயற்சி காரணமாகவே இவர்கள் இருவரும் தமக்கிடையான முரண்பாடுகளையும் பகைமை உணர்வையும் களைந்து விட்டு, முழு மனதுடன் ஒன்றிணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உடன்பட்டிருக்கின்றனர்.

இதன் பிரகாரம் மேயர் சிராஸ் மீராசாஹிபும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலையும் நேரடியாக சந்திக்க வைத்து சமரசப்படுத்துவதற்கான ஒரு முக்கிய பேச்சுவார்த்தை சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியார் இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபா, மரைக்காயர் சபை உறுப்பினர் எம்.எம்.ஜெமீல், வர்த்தக சங்க உறுப்பினர் எம்.எம்.ஜஹான், மு.கா.முக்கியஸ்தர் அன்வர் ஹாஜியார், மேயர் சிராஸ் மீராசாஹிபின் ஆலோசகர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் சாய்ந்தமருது பிரதேசத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்து, இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுகின்ற அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரான ஏ.எம்.ஜெமீலை ஆதரித்து வெற்றி பெறச் செய்வதன் அவசியம் குறித்து பிரமுகர்கள் அனைவரும் ஏகோபித்து வலியுறுத்தியுள்ளனர்.

ஆகையினால் சாய்ந்தமருதைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிபும் இத்தேர்தலில் ஊர் நலன் கருதி வேட்பாளர் ஜெமீலை முழுமையாக ஆதரித்து அவரது வெற்றியை உறுதிப்படுத்தி மாகாண சபையில் ஊரின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலின் போது சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகள், கசப்புணர்வுகள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவான பகைமையுணர்வு தொடர்பிலும் அவற்றை எல்லாம் ஊர் நலன் கருதி முற்றாக களைந்து விட்டு இருவரும் புரிந்துணர்வுடன் ஒன்றிணைத்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மேயர் சிராஸ் மீராசாஹிபும் வேட்பாளர் ஜெமீலும் இக்கலந்துரையாடலின் போது மனம் திறந்து பேசியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் பிரதேச அபிவிருத்தி மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் கூட்டிணைந்து செயற்படுவது என இருவரும் உடன்பாடு கண்டதோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜெமீலை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கும் அவரது வெற்றிக்காக முழுமையாக உழைப்பதற்கும் மேயர் சிராஸ் மீராசாஹிப் இதன்போது உறுதியளித்ததாக வர்த்தக சங்கத் தலைவர் குயின்ஸ் கலீல் ஹாஜியார் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X