2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட சிவில் பாதுகாப்புக்குழு உறுப்பினர்களுக்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பான ஒன்றுகூடல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஆசிய மன்றத்தின் அனுசரணையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்   அஜித் ரோஹன உரையாற்றுகையில்,

'எமது நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸ் அதிகாரிகளால் மாத்திரம் முடியாது. பொதுமக்கள் அதாவது சிவில் சமூகத்தின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமாகும். அந்த அடிப்படையிலே தான் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நாம் இன்று இருக்கும் நிலையிலிருந்து 4 வருடங்களை பின்னோக்கி பார்ப்போமாயின் பயங்கரவாதம் என்னும் கொடிய செயற்பாட்டினால் நிம்மதி இழந்து, சொந்தபந்தங்களை இழந்து காணப்பட்டோம். மேலும், வயல்களுக்குச் செல்ல முடியாது, போக்குவரத்துச் செய்ய முடியாது, தொழிலுக்கு செல்ல முடியாது, பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலையில்; நாளந்தம் பல உயிர்கள் இழக்கப்பட்டதை நாம் அறிவோம்.  நாங்கள் இன்று அந்த இருண்ட யுகத்திலிருந்த விடுவிக்கப்பட்டு நிம்மதியாக வாழ்ந்து வருகின்றோம்.

அந்த நிலை மீண்டும் வருவதை நாம் ஒருவரும் விரும்பமாட்டோம். ஆனால் இன்று இரண்டாவது பயங்கரவாதமாக வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டு செல்கின்றன. இதனால் பெறுமதிமிக்க மனித உயிர்கள் இழக்கப்படுவதுடன், பலர் அங்கவீனமடையும் நிலைக்கும் செல்கின்றனர். வீதி விபத்துக்களிலிருந்து  பெறுமதிமிக்க மனித உயிர்கள்; பாதுகாக்கப்பட வேண்டும்.

கடந்த வருடம் இலங்கையில் காணப்படுகின்ற 433 பொலிஸ் நிலையங்களில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்திலே தான் ஆகக் கூடுதலான விபத்துக்கள் பதியப்பட்டுள்ளன.  அதேபோன்று இவ்வருடத்திலும் இதுவரைக்கும் ஆகக் கூடுதலான விபத்துக்களும் உயிரிழப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், அட்டப்பள்ளம், காரைதீவு, மாவடிப்பள்ளி, நெல்லுப்பிடிச் சந்தி போன்ற இடங்களில் கூடுதலான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

இது இவ்வாறிருக்க, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாடு தமிழர், முஸ்லிம், சிங்களவர் சகலருக்கும் சொந்தமான நாடாகும். சகலருடைய பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் எந்தவெரு செயற்பாடுகளையும் நாம் அனுமதிக்க முடியாது. சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். தங்களது பிரிவிலுள்ள மக்களிடத்தில் சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X