2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தாயை மீட்டுத்தாருங்கள்: சிறுவன் மன்றாட்டம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 01 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தனது தாயை மீட்டுத்தருமாறு 7 வயது சிறுவனொருவன் உருக்கமான வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.

சர்வதேச சிறுவர்கள் தினமான இன்றை தினத்திலேயே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு வருகை தந்த  7 வயது சிறுவனொருவனே சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்றிருந்த தனது தாயை மீட்டுத்தருமாறு  எழுத்து மூலம் கேட்டுள்ளார்.

அம்பாரை மாவட்டம் பெரியநீலாவணை தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை வதிவிடமாக கொண்ட  தியாகராஜா  அனுலகஷன்       தனது   பேத்தியுடன்  சென்று       அலுவலக  பொறுப்பதிகாரிஎம்.ஐ. நாஸரிடம்  கடிதத்தினை கையளித்துள்ளார்.

எழுத்து மூலம்  அவர் முன்வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
எனது தாயான கணபதி சுகந்தினி (வயது 29)       சவூதி அரபியாவிலுள்ள டமாம் நகருக்கு 2010.10.16 ஆம் திகதி வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிவதற்கு சென்றிருந்தார். அப்போது எனக்கு  3 வயது இருக்கும். எனது உறவினர்களிடம் என்னை ஒப்படைத்து விட்டுத்தான் அவர் சென்றிருந்தார்.

சவூதி அரேபியாவில்  இருந்து இரு வருடங்கள்  என்னுடனும் உறவினர்களுடனும்  தொடர்பு கொண்டிருந்த இருந்த என் தாய் கடந்த ஒரு வருடமாக  எவ்வித தொடர்புகளும் இல்லாமல் இருக்கின்றார்.

எனது தாயின் விடயம் தொடர்பாக வெளிநாட்டிற்கு அனுப்பிய உள்ளூர் முகவருடன் தொடர்பு கொண்டால். அவர் தாய் வேலை செய்த வீட்டு எஜமானிடம் தொடர்பை ஏற்படுத்திய போது தாய் நாடு திரும்பி விட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே தாயை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை மேசன்  தொழிலாளியான குறித்த சிறுவனின் தந்தை 2007 ஆம் ஆண்டு; மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் அவ்வேளை செயல்பட்ட ஆயுத குழுவொன்றினால் கட்டிட வேலைக்கு என அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் துப்பாக்கி  சூட்டு  சம்பவமொன்றில்  மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கணவன் மரணமடையும் போது குறித்த பெண் 3-4 மாத கர்ப்பினியாக இருந்தார் என்றும் ஏழ்மை காரணமாக குறித்த சிறுவனை 3  வயதில் தன்னிடம் ஒப்படைத்து விட்டு அவர் வெளிநாடு சென்றதாக பேத்தியாரான கதிர்காமர் யோகேஸ்வரி கூறுகின்றார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு சபையின் கல்முனை பிராந்திய பொறுப்பதிகாரி  எம். ஐ. நாஸரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்ட போது

குறித்த சிறுவனால்  தனது தாய் தொடர்பாக சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களும் விபரங்களும் மேலதிக நடவடிக்கைகாக உடனடியாகவே தலைமையக்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .