2025 மே 14, புதன்கிழமை

’நெருக்கடி காலத்தில் தேர்தல் நடத்தப்படுமாயின் சுயாதீனமாக வாக்களிக்க முடியாது’’

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

மரண அச்சதோடும் பொருளாதார நெருக்கடியோடும் மக்கள் வாழும் இந்நிலையில், தேர்தல் நடத்தப்படுமாயின், சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும்  மக்கள்  தமது வாக்குரிமையை பயன்படுத்த முடியாமல் போகும் என்று,  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆனைக்குழுவுக்கு மேற்படி கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.எம்.சபீல், இன்று (20) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே,  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், 2020 ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல், உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் பிரச்சினையினால் ஒத்திவைக்கப்பட்டது என்றும்  எனினும் 2020 ஜூன் மாதம் 2ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்த வேண்டுமென்ற காரணத்தை முன்வைத்து, அரசாங்கம் அவசர அவசரமாக தேர்தலை நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதை எம்மால் உணர முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம், 2020 செப்டெம்பர் வரை இருக்கத்தக்கதாகவே, 2020 மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியதுடன், எனவே மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசாங்கத்தைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் சட்டரீதியாக இருக்கத்த நிலையில், அவசரமாக ஏன் தேர்தலை இந்த இக்கட்டான சூழ்நிலையில் நடத்த வேண்டுமென்ற கேள்வி எழுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மரண அச்சதோடும் பொருளாதார நெருக்கடியோடும் மக்கள் வாழும் இந்நிலையில், தேர்தலில் அவர்களை பங்குகொள்ளச் செய்வதானது, சுயாதீனமானகவும் சுதந்திரமாகவும் அவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு சாதகமாக அமையாது என்றும் இதனால் மக்களின் உண்மையான விருப்பத்தையும் தெரிவையும் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தவும் முடியாமல் போகலாம் என்றும் தெரிவித்தார்.

எனவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய தாம் பொறுப்பு வாய்ந்த ஓர் அரசியல் கட்சி என்ற அடிப்படையில், 2020 ஜூன் 2ஆம் திகதியன்று புதிய நாடாளுமன்றம் கூட வேண்டுமென்ற நோக்கில், அதற்கிடையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென்ற ஏற்பாடுகள் இருந்தால் அதனைக் கைவிடுமாறும் நாடும் மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் தேர்தலை நடத்துமாறும் மக்கள் சார்பாக வேண்டிக் கொள்வதாக, அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X