Janu / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு 200 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தேசிய விமான சேவையை, தொடர்ந்தும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை உருவாக்கியுள்ளது. பல தசாப்தங்களாக வரி செலுத்து வோரின் பில்லியன் கணக்கான பணத்தை விழுங்கி வரும் ஒரு நிறுவனத்தை, அரசுடைமையாகவே வைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதா என்ற கேள் வி எழுந்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து துறையில் 10 ஆண்டுகால அனுபவம் கொண்ட ஒருவரையே புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது. கடந்த காலங்களில் பீட்டர் ஹில் மற்றும் ரிச்சர்ட் நட்டல் போன்ற பிரித்தானிய பிரஜைகள் இந்த பதவியை வகித்தபோது, அரசியல் தலையீடுகளின்றி தொழில்முறை ரீதியாக நிறுவனம் இயங்கியது. குறிப்பாக, கொவிட்-19 பரவல் மற்றும் 2022 பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் ரிச்சர்ட் நட்டல் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. ஆனால், அனுபவம் வாய்ந்த அத்தகைய நிபுணர்களின் ஒப்பந்தங்களை நீடிக்காமல் விடுவது, நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு பின்னடைவாகவே அமையும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு அதிகாரிகளின் கீழ் நிறுவனம் இருந்தபோது ஏற்பட்ட ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகமே அதன் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாகும். முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மீதான லஞ்ச ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் இதற்கு ஒரு கசப்பான உதாரணமாகும். நிதியியல் ரீதியாகப் பார்க்கையில், 2025 ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் நிறுவனம் 10.7 பில்லியன் ரூபாய் நட்டத்தைச் சந்தித்துள்ளதுடன், மொத்தத் திரண்ட நட்டம் 628.3 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. 2025 வரவு செலவுத் திட்டத்தில் மாத்திரம் கடனை மீளச் செலுத்த 20 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் திறை சேரியானது 100 பில்லியன் ரூபாயை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அண்டை நாடான இந்தியா தனது ஏர் இந்தியாவை டாட்டா குழுமத்திடம் ஒப்படைத்ததும், பாகிஸ்தான் தனது விமான சேவையைத் தனியார்மயப்படுத்த எடுத்த முடிவுகளும் இலங்கைக்கும் ஒரு பாடமாகும். முதலீட்டாளர் வாரன் பபெட் கூறியது போல, விமானத் துறை என்பது முதலீடுகளை உள்வாங்கும் ஒரு "அடியற்ற ஆழமான குழி" போன்றது. எனவே, நிதி மறுசீரமைப்புக்குப் பின்னர், இந்த அரசாங்கம் தனது பிடிவாதமான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேசப்பற்று என்ற போர்வையில் நட்டமடையும் பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாப்பதை விட, மக்களின் வரிப்பணத்தை நாட்டின் நீண்டகால பொருளாதார உறுதித் தன்மைக்காகப் பயன்படுத்துவதே காலத்தின் தேவையாகும்.
23.02.2026
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago