2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

இறந்த பின்னர் யாருமே தூற்றாமல் இருக்கவேண்டும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம், ஒவ்வொரு மாதமும் இரண்டாவது கிழமையும், நான்காவது கிழமையும் கூடும், அதன் இறுதி வெள்ளிக்கிழமைகளில் அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும். மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாப பிரேரணைகள் முன்வைக்கப்படும்.

அனுதாப பிரேரணையை பெரும்பாலும் பிரதமர் ஆரம்பித்து வைப்பார், எதிர்க்கட்சித் தலைவர் அதற்கடுத்ததாக உரையாற்றுவார். இல்லையேல் ஆளும்கட்சியின் பிரதம கொறடா ஆரம்பித்து வைக்க, எதிர்கட்சியின் பிரதம கொறடா அதற்கடுத்ததாக உரையாற்றுவார். ஏனைய உறுப்பினர்களும் மறைந்த உறுப்பினர்களின் சேவைகளைப் பாராட்டுவர்.

ஜனாதிபதி, பிரதமர் அல்லது எதிர்க்கட்சி தலைவர்கள் இன்றேல் முக்கிய அமைச்சர்களாக பணியாற்றியவர்களின் மீதான அனுதாப பிரேரணைகளின் போது, ஜனாதிபதியும் பங்கேற்றுள்ளார். அனுதாப பிரேரணைகள் இடம்பெறும் நாளன்று மறைந்த அந்த உறுப்பினரின் உறவினர்கள் சபாநாயகரின் கலரியில் பிரசன்னமாய் இருப்பர்.

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான அனுதாப பிரேரணைகள் இன்னும் எடுத்துக்கொள்ளாமலே இருக்கின்றன.இதற்கிடையே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் காலமாகி விட்டனர். அவர்கள் மீதான அனுதாப பிரேரணைகளும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மறைவு அந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்குப் பேரிழப்பாகவே அமையும். இன்னும் சிலரின் இழப்பு முழு நாட்டு மக்களுக்கும் பேரிழப்பாகவே அமையும்.

மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் மனங்களை நல்ல செயல்களால் வென்றிருக்கவேண்டும். எனினும், அண்மையில் மறைந்த கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தையின் மறைவுக்குப் பின்னர் சமூக வலைத்தளங்கள் மிகக் கடுமையான முறையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

அதிகாரம் இருக்கும்போது செய்த அட்டூழியங்கள் புட்டுபுட்டு வைத்துள்ளனர். தான் உயிருடன் இருக்கும் வரையிலும் அனுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக விடமாட்டேன் என்று லொஹான் ரத்வத்தவின் உரையையும், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியைக் கண்கூடாகக் காண்பதற்கு லொஹான் போன்றவர்கள் உயிருடன் இருக்கவேண்டும் என அமைச்சர் லால் காந்தவும்,  ஆற்றிய உரைகள் ஒப்பிட்டுப் போடப்படுகின்றன. 

ஒரு தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டம் சகலருக்கு சமமானது என்றால் லொஹான் ரத்வத்த வெளியில் இருக்கமுடியாது எனக் கூறியிருந்தார்.

உண்மையில், உடதலவின்ன முஸ்லிம் இளைஞர்கள் 10 பேர் படுகொலைச் செய்யப்பட்டமை தொடர்பில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர், அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று, அங்கு தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, முழந்தாலிடச் செய்து, நெற்றிப்பொட்டில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியமை மற்றும் திகனை வன்முறை உள்ளிட்டவை தொடர்பில் லொஹான் ரத்வத்தைக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஒருவர் மறைந்து விட்டால் அவரது மறைவுக்குப் பின்னர் யாரும் தூற்றாமல் இருக்கவேண்டுமாயின் இருக்கும் போது யாருக்கும் தீங்கிழைக்காது வாழவேண்டும். இது யாவருக்கும் பொதுவானதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .