2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

உள்வீட்டு நெருக்கடிகளைத் தவிர்க்க வேண்டும்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரத்தின் பிற்பகுதியில் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்ட விடயம், பிரதமர் ஹரிணி பாராளுமன்றத்தில் ஆற்றிய ரொக்கட் சம்பந்தப்பட்ட பதில் உரை மற்றும், அதனைத் தொடர்ந்து மறுநாள் அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள அமைச்சர் ஒருவர் அதில் காணப்பட்ட தவறை சுட்டிக்காட்டி திருத்தியமை மற்றும் வார இறுதியில் இந்த விடயம் பற்றிக் குறித்த செய்மதி நிறுவனமும், அரசாங்கத்தின் சுகாதார மற்றும் ஊடகத் துறை அமைச்சரும் ஆற்றிய உரைகள்.

உண்மையில் பிரதமர் ஆற்றிய உரையின் போது, குறித்த செய்மதியினால் இதுவரையில் எய்தப்பட்டுள்ள வருமானம் தொடர்பில் தவறான புள்ளி விபரம் முன்வைக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட வேண்டும். வழமையாக உயர்ந்த பெறுமதிகளைக் கொண்ட இலக்கங்களை வாசிக்கும் போது, கற்றவர்களுக்கும் தடுமாற்றம் வருவதைக் கடந்த காலப் பாராளுமன்ற அமர்வுகளிலும் காண முடிந்தது.

எனவே, இது தற்போதைய பிரதமருக்கு மாத்திரம் புதிய விடயமல்ல.
பிரதமரின் உரையைத் தொடர்ந்து, பல வருடங்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட ராஜபக்சர்களின் ரொக்கட் அரசாங்கத்தினால் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது போன்ற ஏளனம் செய்யும் சமூக வலைத் தளப் பதிவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்த நிலையில்,

மறுநாள் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஒன்றறை மணிநேர உரையாற்றியிருந்த போதிலும், இந்த விடயம் தொடர்பில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. அவர் ஒரு சில நிமிடங்களை ஒதுக்கி, இந்த விடயத்தைத் தெளிவுபடுத்தியிருக்கலாம்.
மாறாக, அரசாங்கத்தில் சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்து வரும் ஓர் அமைச்சர் இந்த விடயத்தைத் தெளிவுபடுத்த முன்வந்திருந்தமை எரியும் விளக்கல்எண்ணெய் ஊற்றியிருந்ததை போல, சமூக வலைத்தள பதிவாளர்களுக்குத் தீனியூட்டியிருந்தது.

பிரதமர் என்பவர் நாட்டின் இரண்டவது நபர். அவரின் உரையில் தவறைக் குறிப்பிடுவதானால் அதனை ஜனாதிபதி மேற்கொண்டிருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும்.

அதைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கத் தவறிவிட்டது போலும். குறித்த செய்மதி செயலில் இருப்பதாக அந்தச் செய்மதியை விண்ணில் ஏவிய நிறுவனத்தின் பேச்சாளர் அறிக்கை வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து,

வார இறுதியில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிடுகையில், இந்த விடயம் உண்மையாக இருக்குமானால், ராஜபக்‌ஷர்கள் கண்டிப்பாகப் பலன்பெறுவார்கள் என்ற தொனியில், விசாரணைகள் தொடரும் என தெரிவித்திருந்தார். விசாரணைகளை முடித்துவிட்டு இந்த விடயம் பற்றி தெளிவான முறையில் பதில்களை வழங்கியிருக்கலாம். பிரதமரும் அதற்கான காலத்தைப் பாராளுமன்றத்தில் கோரியிருக்கலாம்.

இது போன்ற நெருக்கடிகளைத் தேடி வாங்கிக் கொள்ளும் செயற்பாடுகளை அரசாங்கம் தவிர்ப்பதனூடாக, அதன் மீது மக்கள் கொண்டுள்ள ஆதரவு மற்றும் நம்பிக்கை தொடர்வதற்கு வழிகோலப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .