Janu / 2026 மார்ச் 18 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் 2022 ஆம் ஆண்டு ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறிவிடவில்லை. அந்நியச் செலாவணித் தட்டுப்பாட்டினால் நாடு ஸ்தம்பித்துப்போனபோது, எரிபொருள் வரிசைகளில் நாட்கணக்கில் காத்திருந்து மக்கள் பட்ட துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அந்த நெருக்கடியைச் சமாளிக்க 'தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்' (QR முறைமை) ஒரு தற்காலிகத் தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. வீதிகளில் நீண்டு கிடந்த வரிசைகளை அந்த டிஜிட்டல் முறைமை கட்டுப்படுத்தியது உண்மைதான் என்றாலும், அதுவே நிரந்தரத் தீர்வாகிவிடுமா? என்பதுதான் இன்றைய பிரதான கேள்வி.
எரிபொருளுக்கான QR முறைமை ஞாயிற்றுக்கிழமை (15) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், வாராந்தம் வழங்கப்படும் 15 லீட்டர் அல்லது 40 லீட்டர் எரிபொருள் என்பது ஒரு சாதாரணப் பயணத்திற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், அந்த வாகனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு, அதன் மூலம் வரும் வருமானத்தில் பிள்ளைகளின் கல்வி, உணவு மற்றும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்டும் ஒரு ஏழைச் சாரதிக்கு இது எவ்வகையில் போதுமானதா? என்றும் வினவுகின்றனர்.
QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்த சூழல் இன்று ஓரளவிற்கு மாறியுள்ளது. எரிபொருள் இறக்குமதியில் நிலவிய சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும், உழைக்கும் வர்க்கத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு மட்டும் இன்னும் பழைய நிலையிலேயே தேங்கிக் கிடப்பது வேதனைக்குரியது. ஒரு முச்சக்கர வண்டிச் சாரதிக்கு வாரத்திற்கு 30 லீட்டர் எரிபொருள் வேண்டும் என்ற கோரிக்கை, ஆடம்பரத்திற்கானதல்ல; அது அவர்களின் அடுப்பு எரிவதற்கான அடிப்படைத் தேவையாகும்.
எனவே, சம்பந்தப்பட்ட அமைச்சும் அதிகாரிகளும் பின்தங்கிய பகுதிகளின் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து தீர்மானிக்கப்படும் 'கோட்டா' (Quota) அளவுகள், களத்தில் உழைக்கும் மக்களின் வியர்வைக்கு மதிப்பளிப்பதாக அமைய வேண்டும். எரிபொருள் விநியோகத்தை மேன்மேலும் சீர்செய்வதுடன், தொழில் நிமித்தம் வாகனங்களைச் செலுத்துவோருக்கு விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது காலத்தின் கட்டாயமாகும்.
இதேவேளை, பதிவு செய்வதிலும் பலர் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அவர்களுடைய பிரச்சினைகளையும் இனங்கண்டு தீர்வை வழங்கவேண்டும். இதேவேளை, வீட்டில் இருந்து வேலை எனும் முறைமையை அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தற்காலிக தீர்வாக இருக்கலாம். எனினும், அதிலும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
மக்களை வரிசைகளில் இருந்து விடுவித்தது மட்டும் அரசின் சாதனையல்ல; அவர்கள் நிம்மதியாகத் தொழில் செய்து வாழ வழிவகை செய்வதே உண்மையான வெற்றியாகும்.
16.03.2026
42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
5 hours ago
9 hours ago