2026 மார்ச் 05, வியாழக்கிழமை

எரியும் பிரச்சினையும் தீர்வைத் தேடும் எரிபொருளும்

Janu   / 2026 மார்ச் 04 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மீண்டும் ஒருமுறை எரிபொருள் தட்டுப்பாடு எனும் நெருப்பு வளையத்திற்குள் சிக்கியுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய நீண்ட வரிசைகளும், பொதுமக்களின் அவலங்களும் மீண்டுமொருமுறை அரங்கேறத் தொடங்கியிருப்பது கவலைக்குரியது.

 உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கின் போர்ச் சூழல் என்பன இறக்குமதியில் தாக்கத்தைச் செலுத்தினாலும், உள்நாட்டு விநியோகக் கட்டமைப்பில் நிலவும் முறையற்ற முகாமைத்துவமே இந்தப் பாதிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தட்டுப்பாட்டைச் சாதகமாக்கி எரிபொருளைப் 'பதுக்கும்' கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. சட்டவிரோத விற்பனைக்காகவும், கறுப்புச் சந்தை இலாபத்திற்காகவும் எரிபொருள் பதுக்கப்படுவதால், அத்தியாவசியத் தேவைகளுக்காகக் காத்திருக்கும் வாகன உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் போக்குவரத்துச் செலவுடன் நின்றுவிடுவதில்லை; அது ஒட்டுமொத்தப் பொருட்களின் விலையுயர்விற்கும், பணவீக்கத்திற்கும் வித்திடுகின்றது. பாவனையாளர்கள் மீது சுமத்தப்படும் இந்த மேலதிக சுமை, நடுத்தர மற்றும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கின்றது.

 அதேபோன்று, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தினால் ஒரு சிலர் பிளாஸ்டிக் கேன்கள், போத்தல்கள் போன்றவற்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முற்படுகின்றனர். எனவே, விவசாய நடவடிக்கைகளுக்காக மாத்திரம் இவ்வாறான உபகரணங்களுக்கு எரிபொருளை வழங்குமாறு எரிபொருள் நிலையங்களின் நிர்வாகத்திற்கு அந்தந்தப் பொலிஸ் நிலையங்கள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

நீண்ட வரிசைகள் தொடர்ந்து நீடிக்குமாயின் எரிபொருள் விநியோகத்தைச் சீர்செய்ய ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட 'QR குறியீடு' (QR Code) முறைமை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியான தீர்வுகளைத் துல்லியமாக நடைமுறைப்படுத்துவதோடு, வெளிப்படையான விநியோகக் கொள்கையை முன்னெடுப்பதே இந்நெருக்கடிக்குத் தீர்வாகும். இல்லையெனில், வரிசைகளில் கழியும் மக்களின் நேரமும் உழைப்பும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.  

கடந்தகாலத்தில் இவ்வாறு எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது, பிளாஸ்டிக் கேன்கள், போத்தல்களில் எரிபொருட்களை நிரப்பி, வீடுகளில் வைத்திருந்தபோது ஏற்பட்ட திடீர் விபத்தில் மரணங்களும் ஏற்பட்டன என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். ஆகையால், தங்களுடைய பயணத்துக்கு தேவையான அளவை மட்டுமே, கொள்வனவு செய்வது நல்லது.

"ஈரானிடம் இருந்து எண்ணெய் கிடைக்காவிட்டாலும் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஈரானை விட ஏனைய நாடுகளிலிருந்தே இலங்கை அதிகளவில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஒருவேளை ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுகளை வீசி, கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால் மாத்திரமே பிரச்சினை ஏற்படும் எனக் குறிப்பிட்டார். எனினும், ஹோர்முஸ் நீரிணையை மூடமாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகையால்,   தட்டுப்பாடற்ற விநியோகத்தை உறுதிப்படுத்துவதிலும், பதுக்கல் நடவடிக்கைகளைக் கடுமையான சட்டங்கள் மூலம் ஒடுக்குவதிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

03.03.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .