Janu / 2026 மார்ச் 10 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூகோள அரசியலின் ஆழமான உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல், சர்வதேச அளவில் ஏற்படும் நெருக்கடிகள் இலங்கை போன்ற நாடுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடியாது. தற்காலத்தில் சர்வதேச அரசியல் போக்குகளை மிக எளிமையான அல்லது மேலோட்டமான கண்ணோட்டங்களில் அணுகி, பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தைத் தூண்டும் ஒரு அரசியல் கலாசாரம் உருவாகி வருவதைக் காணமுடிகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நெருக்கடிகள், குறிப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் நிலைமையானது, உலக பூகோள அரசியலில் ஒரு புதிய கட்டத்தின் ஆரம்பமாகும். இதனை ஒரு சாதாரண யுத்தமாக மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாது. இது அதிகாரம், எரிசக்தி, பாதுகாப்பு, வர்த்தகப் பாதைகள் மற்றும் பிராந்திய வல்லாதிக்க சமநிலை சார்ந்தது. இத்தகைய அரசியல் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் இதனை அணுகுவது அபத்தமானது.
மிக எளிமையாகக் கூறுவதானால், உலக வல்லரசுகளின் தீர்மானங்கள் ஊடாக சிறிய மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் அரசியல், பொருளாதார மற்றும் கலாசார எதிர்காலத்தை நேரடியாகக் கட்டுப்படுத்தும் ஒரு அரசியல் நகர்வே தற்போது அரங்கேறி வருகின்றது.
பூகோள அரசியல் என்பது வெறும் புவியியல் இருப்பிடம் அல்லது வளங்கள் தொடர்பான போட்டி மட்டுமல்ல; அது உலக அதிகாரக் கட்டமைப்பைத் திறக்கும் ஒரு திறவுகோலாகும். எரிபொருள், இயற்கை எரிவாயு, கடல்சார் வர்த்தகப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு வலயங்களைக் கட்டுப்படுத்துவதே 21ஆம் நூற்றாண்டின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் பிரதான காரணிகளாகும். ஆகவே, இது ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது நடத்தும் ஆக்கிரமிப்பு என்ற எல்லைக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தை உலக அதிகாரப் போட்டியின் இதயமாகக் கருதுவது மிகச் சரியானது. ஈராக், சிரியா, ஏமன் மற்றும் வளைகுடா பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நீண்டகால மோதல்கள் அனைத்தும், உண்மையில் எரிசக்தி மற்றும் வளங்களைக் கைப்பற்றுவதற்கான போட்டியின் விளைவுகளே ஆகும்.
மத்திய கிழக்கின் இந்த நெருக்கடி அந்நாடுகளுடன் மட்டும் நின்றுவிடப்போவதில்லை. இலங்கையைப் போன்ற இறக்குமதிகளில் தங்கியிருக்கும் சிறிய பொருளாதாரங்களுக்கு இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். எரிபொருள் விலை உயர்வு, அந்நியச் செலாவணித் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன உள்நாட்டு சமூக மற்றும் பொருளாதாரச் சமநிலையைச் சீர்குலைக்கும்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது நாம் அனுபவித்த எரிபொருள் தட்டுப்பாடும், அன்றாட வாழ்வின் முடக்கமும் உலகளாவிய எரிசக்தி நிலையற்றதன்மை ஒரு சிறிய நாட்டை எவ்வளவு கடுமையாகப் பாதிக்கும் என்பதற்குச் சிறந்த சான்றாகும். மத்திய கிழக்கு நாடுகளில் யுத்தம் மேகம் சூழ்கொண்டதை அடுத்தே, உள்ளூரில் எரிபொருளுக்கான வரிசை ஆரம்பிக்கதொடங்கிவிட்டது. பதுக்கலும் அதிகரித்துவிட்டது. இதனால் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் செயற்கையாகவே தட்டுப்பாடு ஏற்பட்டது.
இன்னும் சிலர், போத்தல்கள், கேன்களில் சட்டவிரோதமான முறையில் பெட்ரோலை நிரப்பி வீடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒருபுறம் யுத்தம் மறுபுறம் பதுக்கல் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.
10.03.2026
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago