2026 ஜனவரி 09, வெள்ளிக்கிழமை

புது சபதங்களை எடுத்து முன்னோக்கி செல்வோம்

Janu   / 2026 ஜனவரி 04 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் புதுபுது சபதங்களை எடுத்துக் கொண்டு எல்லோரும் ஓடிக்கொண்டே இருப்பர். அவ்வருடத்தின் இறுதியில் சிலர் இலக்கை அடைந்துவிடுவர். இன்னும் சிலர், இடையில் விட்டுவிட்டுச் சோர்ந்து விடுவர். சிலர், எடுத்த சபதங்களை விடக் கூடுதலான இலக்குகளை எட்டியிருப்பர்.இவற்றுக்கெல்லாம் முயற்சியே முக்கியமாகும்.

முயற்சி மட்டுமே வெற்றிக்கு வழிசமைக்கும். இலக்கை எட்டுவதற்கு, சோர்ந்து விடாது, இடைவிடாது முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனி திறமைகள் இருக்கும். அதனை இனங்கண்டு, நெலிவு சுலிவுக்கு ஏற்ற வகையில், காய்களை நகர்த்தி கொண்டே சென்றோம் எனில், இலக்கை இலகுவாக எட்டிக்கொள்ள முடியும். அவ்வாறானதொரு முயற்சியை பிறந்திருக்கும் புத்தாண்டில் ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும்.

2026 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் சகலரும் வரவேற்றனர். பட்டாசு கொளுத்தியும் சமய ஆராதனைகளில் ஈடுபட்டும் வரவேற்றனர்.மலர்ந்துள்ள புத்தாண்டில் நம்நாட்டு மக்கள் அனைவரும் நாட்டுப் பற்றுடன் சகல செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்களேயானால் நிச்சயமாக இந்தப் புத்தாண்டு எங்கள் தாய்நாட்டை ஒரு சொர்க்க பூமியாக மாற்றிவிடும் என்பதில் ஐயமே இல்லை. புதிய அரசாங்கமும், அதற்கான வேலைத்திட்டங்களைப் புத்தாண்டில் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

எவ்வாறான திட்டங்களை முன்னெடுத்தாலும், சாதாரண மக்களின் வாழ்க்கை சுமை முதலில் குறையவே வேண்டும். இல்லையேல், திட்டங்களால் எவ்விதமான பயனும் இல்லை. நாட்டில் ஏற்பட்டிருக்கும் ​அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். ஊழல், மோசடிகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மட்டுமன்றி  உருவாகியுள்ள அமைதியான சூழ்நிலையில் மூவின மக்களின் பிரச்சினைகள் என்ன என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டு அவற்றை சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்குத் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை மறந்து நாட்டின் நன்மைக்காக ஒத்துழைப்பது அவசியமாகும்.

அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்படாமல், நாட்டுக்காக தங்கள் பூரண பங்களிப்பை வழங்கினால் நிச்சயம் சகல இன மக்களிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் நல்லிணக்கப்பாட்டையும் நாம் கட்டியெழுப்ப முடியும்.

புரையோடிப் போயிருக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக இவ்வருடத்துக்குள் தீர்வு காண்பதற்கு இயலுமாக இருக்குமாயின், நீண்ட நாள் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டும். அதற்கு ஆளும் கட்சியினர் மட்டுமன்றி, பாராளுமன்றத்துக்குள் இருக்கும் எதிர்க்கட்சிகளும், ஏனைய அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அதனூடாகவே மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

01.01.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .