Janu / 2026 ஜனவரி 11 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தித்வா புயல் காரணமாக இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் பல உயிர்கள் காவு கொண்டு, உடைமைகள் பல இழந்துள்ள நிலையில், தற்போது தித்வா போய் இன்னுமொரு புயல் இன்று அல்லது எதிர்வரும் சில தினங்களுள் ஏற்படலாம் என உள்நாட்டு மற்றும் இந்திய வானிலை அவதானிப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது இயற்கை சார்ந்த நிகழ்வு என்பதால், அதன் நகர்வின் அடிப்படையிலேயே புயலாக மாறுமா இல்லையா என்பது பற்றி உறுதியாக குறிப்பிட முடியும்.
நேற்று காலை 10.30 மணிக்கு இலங்கை வானிலை அவதானிப்பு நிலையம் வெளியிட்ட 24 மணி நேரத்திற்கான முன்னெச்சரிக்கை அறிவித்தலின் பிரகாரம், மத்திய மாலைநாடு, கிழக்கு மற்றும் வட மாகாணத்திற்கும், தென் மாகாணத்தின் சில பகுதிகளுக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் கடும் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எதிர்வுகூரப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆபத்தான பகுதிகளில் வசிப்போர் சமூக வலைத்தளங்கள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் பொது அறிவிப்புகள் பற்றிய செய்திகளை கேட்டு தமது பகுதியில் எவ்வாறான நிலை நிலவுகிறது என்பது பற்றி தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், சூழலில் ஏற்படும் வித்தியாசமான மாற்றங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
தித்வா புயலின் போது ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற நிலைகளின் போது, ஆபத்தான பகுதிகளில் வசித்தவர்களுக்கு வெளியேறுமாறு பணிக்கப்பட்ட போதிலும், பலருக்கு வெளியேறி எங்கு செல்ல வேண்டும் என்பது தொடர்பில் எவ்விதமான தெளிவும் இருக்கவில்லை என்பதை அனர்த்தம் ஏற்பட்டதன் பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது.
இவ்வாறான நிலையை எதிர்வரும் காலங்களில் தவிர்த்துக் கொள்வதற்கு, தம்மைச் சூழ காணப்படக்கூடிய பாதுகாப்பான பகுதிகளை முன்கூட்டியே இனங்கண்டு வைத்திருப்பது மிகச் சிறந்தது. அத்துடன், தம்மிடம் காணப்படும் பெறுமதி வாய்ந்த உடைமைகள், சான்றிதழ்கள் போன்றவற்றை தம்முடன் கொண்டு செல்லக் கூடிய வகையில் தயார் நிலையில் வைத்துக் கொள்வதனூடாக, ஆபத்தின் போது, அவற்றை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ள குடும்பங்கள், அவர்களை முன்கூட்டியே தமது உறவினர்கள் இருக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைப்பது சிறந்தது. நிலைமை சீரடைந்ததன் பின்னர் அவர்களை மீண்டும் தமது இருப்பிடங்களுக்கு அழைத்து வரலாம். உள்ள போது முன்னெச்சரிக்கையாக பாதுகாத்துக் கொள்வது முக்கியம், எதிர்பாராத விதமாக துர்பாக்கியமான சம்பவங்கள் ஏற்பட்ட பின்னர், கண்ணீர்விட்டு பதறி அழுவதால் பறிபோனவை மீளப் போவதில்லை. எனவே, இறுதி நேரம் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே அவதானிப்பு எச்சரிக்கைகளை அவதானித்து, வரும் முன் காத்துக் கொள்வது அனைவருக்கும் சிறந்தது!. எம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
09.01.2026
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago