2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

அழ வைத்த ‘வெங்காய பெட்டி’

Editorial   / 2021 மே 27 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாய்ப்புகளும், வரப்பிரசாதங்களும் சிலருக்கு கதவைத் தட்டும், இன்னும் சிலர், வேண்டாதவற்றை தேடிச்சென்று கதவைத் தட்டி, வம்பை விலைக்கு வாங்கிக்கொள்வர்.

அப்படியான சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறுகின்றன., புதிய, புதிய சூட்சுமங்களை உருவாக்கி, அந்த வலைக்குள் பலரையும் வீழ்ந்துவிடச் செய்துவிடுவர்.

“குறைந்த விலையில், பெறுமதியான பொருள்கள்” என வாயைப் பிளப்பவர்களே பலரும் உள்ளனர்.

கொரோனா காலமென்பதால், ஒன்லைனில் எல்லாமே வீடு வந்து சேர்க்கின்றன. அதன் நாட்டமும் அதிகரித்துகொண்டே செல்கிறது.

பக்கத்து பெட்டிக்கடைகளில் வௌ்ளைப்பூடு இருந்தாலும், ஒன்லைனில் ஓடர் செய்து வீட்டுக்கு வருவதையே ​பலரும் பெருமையாக நினைக்கின்றனர்.

வெங்காயத்தை பலரும் பலதுக்கும் பயன்படுத்துவர், “மண்ணுக்குள் மயிராண்டி உரிக்க, உரிக்க தோலாண்டி” என்ற பழமொழியும் உள்ளது.

அதாவது, வெங்காயத்தை உரிக்க, உரிக்க, தோலாகவே வரும், இறுதியில் ஒன்றுமே இருக்காது என்பதுதான் அர்த்தம்.

சரி, கதைக்கு வருவோம்.

இந்தியாவில், இமாசலபிரதேச மாநிலம், ஹமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த சசி தாக்கூர் என்பவர், ஒன்லைன் வாயிலாக தொலைபேசி ஒன்றை,  ஓர்டர் செய்திருந்தார். அதற்கான கட்டணத்தை, கடனட்டையின் (கிரடிட் கார்ட்) ஊடாக முழுமையாக கட்டிவிட்டார்.

இதனையடுத்து சில நாள்களின் பின்னர் அவரது வீட்டுக்கு பொதியொன்றை ஒருவர் எடுத்து வந்துள்ளார். பரிசு பொதியைப் ​போல பொதிசெய்யப்பட்டிருந்த அந்தப் பெட்டியை கையளித்தவர், கையொப்பமொன்றை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து விருட்டென பறந்துவிட்டார்.

வீட்டுக்குள் சென்று, ஜிகினா தாள்களை அகற்றிவிட்டு, திறந்துபார்த்தபோது, அவருடைய கண்களிலிருந்து கண்ணீர், மலமலவென கொட்டத் தொடங்கியது.

சமையலறையில் வெங்காயம் நறுக்கும் போது, கண்களிலிருந்து தண்ணீர் வராதவர்கள் ஒருசிலராகவே இருப்பர். ஆனால், அந்தப் பெட்டியை திறந்தவுடனே சசி தாக்கூர் கண்ணீர் விட்டுவிட்டார். அவர், வெங்காயத்தை நறுக்கவில்லை, பெட்டிக்குள் இருந்த வெங்காயத்தை பார்த்தே கண்ணீர்விட்டழுதுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சசி தாக்கூர், குறித்த தொலைபேசி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு இதனைத்  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமாக ஒரு புகார் அனுப்பிவையுங்கள், 10 நாட்களில் உங்களுக்கு புதிய தொலைபேசி அனுப்பப்படும் என்று குறித்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சசி தாக்கூரும் புகார் அனுப்பிவிட்டு, புதிய தொலைபேசிக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்பவர்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவமும் ஒரு பாடமாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .