2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடிக்க முயற்சி

Freelancer   / 2021 ஒக்டோபர் 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூடலூரில் 9 நாட்களாக வனத்துறையினரின் பிடியில் சிக்காமல் இருந்த ஆட்கொல்லிப் புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது என்றும் புலியை உயிருடன் பிடிக்கவே முயற்சி செய்கிறோம் என்றும் தமிழ்நாடு முதன்மை தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் தெரிவித்துள்ளார்.

டி.23 என்ற அடையாளம் காணப்பட்ட ஆட்கொல்லிப் புலி இதுவரை நான்கு பேரை  கொன்றுள்ளதால், வனத்துறையினர் புலியைப் பிடித்துச் செல்ல முடிவு செய்து தனிப்படை அமைத்துக் கண்காணிக்கத் தொடங்கினர்.

வெள்ளிக்கிழமை காலை டி.23 என்ற அடையாளம் காணப்பட்ட ஆட்கொல்லிப் புலி, முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் தென்பட்டபோது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரைத் தாக்க முயன்றது.

இதுதொடர்பில் அறிந்த வனத்துறையினர்  வெளியில் யாரும் நடமாட வேண்டாம் என ஒலிப்பெருக்கி மூலம் உடனடியாக எச்சரித்தனர். 

இந்நிலையில், கல்குவாரி என்ற இடத்தில் மசினகுடி அருகேயுள்ள குறும்பர்பாடியைச் சேர்ந்த பசுவன் (65) என்ற பழங்குடியின முதியவரை அடித்து வனத்துக்குள் இழுத்துச் சென்றது.

புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் வனத்துறையினருடன், கேரள அதிவிரைவுக் குழு மற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு பொலிஸாரும் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும், புலியின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகளில் ட்ரோன் கமெராவும் பயன்படுத்தப்பட்டது.

புலிக்கு மயக்க ஊசி போட்டுப் பிடிப்பதற்காக வனப்பகுதிகளில் செல்வதற்கு வசதியாக முதுமலையில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .