2025 ஜூலை 26, சனிக்கிழமை

இந்தியாவுடன் சரக்கு ரயில் மூலம் வர்த்தகம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 04 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ் முதல் முறையாக சரக்கு ரயில்கள் மூலம் இந்தியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவுள்ளது.  இது எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு பெரும் ஊக்கமளிப்பதாக பலராலும் தெரிவிக்கப்படுகிறது.

மூடிய கொள்கலன்களைக் கொண்ட சரக்கு ரயில்களின் பயணம் ஆரம்பமானதும், பங்களாதேஷ் வர்த்தக நிறுவனங்களால், சில இந்திய துறைமுகங்கள் மூலம் பிற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், பங்களாதேஷில் இருந்து ரயில்கள் வழியாக பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை இந்தியா நீக்கியதுடன், பங்காளதேஷ் நிறுவனங்களை ஏனைய நாடுகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல தனது துறைமுகங்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியது.

இந்தியாவில் இருந்து ரயில்வே மூலம் சரக்குகளின் வருகை கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், தற்போது, ​​பங்களாதேஷில் பொருட்களை இறக்கிவிட்டு ரயில்கள் காலியாகத் திரும்புகின்றன.

​​பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சரக்கு ரயில் போக்குவரத்து 1972 பெப்ரவரியில் புதுப்பிக்கப்பட்டதுடன், பயணிகள் ரயில் சேவை 2008ஆம் ஆண்டு ஏப்ரலில் மீண்டும் ஆரம்பித்தது.

2021-22 நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், இந்தியாவிலிருந்து 29.92 லட்சம் தொன் பொருட்களைக் பங்களாதேஷ் ரயில்வே கொண்டு வந்ததாகவும் முந்தைய நிதியாண்டில் இந்த அளவு 36.93 லட்சம் தொன்களாக இருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. 

2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கப்பல் கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் ரயில்கள் மூலம் இந்தியாவிலிருந்து பொருட்கள் கொண்டுசெல்லப்பட்ட போதும் இந்திய கட்டுப்பாடுகளால் பங்களாதேஷினால் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

பங்களாதேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த வருடம் மே மாதம் தடையை நீக்கிய இந்தியா, வெளியுறவு அமைச்சகம் மூலம் பங்களாதேஷ் ரயில்வேயிடம் அறிவித்தது.
 
சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியாவுக்கு ரயில்கள் மூலம் ஏற்றுமதி ஆரம்பிக்கப் போவதாகவும் இது பெரிய விடயம் என்றும் பங்களாதேஷ் ரயில்வே அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

சில சுங்க நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மூலம் ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தனது எல்லை வழியாக இலவச போக்குவரத்தை வழங்கும் இந்தியா, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அண்மைய விஜயத்தின் போது இந்த வாய்ப்பை வழங்கியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X