2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஊடகங்களை தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம்

Editorial   / 2021 மே 04 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா: கொரோனாத் தொற்றுப் பரவலின் போது தேர்தலை நடத்தியதற்காக கொலைக் குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதை தடுக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது தொகுதியில் கோரோனாத் தொற்றுக்கான சுகாதார  விதிமுறைகளை அமுல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இவ்  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி அமர்வு பிறப்பித்த உத்தரவில்,’’தேர்தல் நேரத்தில் கடுமையான கொரோனா விதிமுறை மீறல்கள் ஏற்பட்டபோதும் அதனை தடுக்க தேர்தல் ஆணைக்குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதனை அமுல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஆணைக்குழு எடுக்கவில்​லை.

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இவ்வளவு அதிகமாக கட்டுக்கடங்காமல் இருப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவின்  அசமந்த போக்கு தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதற்காக கொலைக் குற்றம் கூட அவர்கள் மீது சுமத்தலாம் என கருத்து தெரிவித்தனர்.

இதற்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 1ஆம் திகதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,’’உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து என்பது தேர்தல் ஆணையத்திற்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது’’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன் போது தேர்தல் ஆணைக்குழுவின் தரப்பு வாதத்தில்,” உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு என்பது எங்களை வேதனை அடைய செய்தது மட்டுமல்லாமல், மிகவும் புண்படுத்தியுள்ளது.

இதில் தேர்தலை நடத்தியது என்பது கொலைக் குற்றம் செய்தமைக்கு சமம் என்பதை கண்டிப்பாக ஏற்க முடியாது. ஏனெனில் அனைத்தும் சரியான முறையிலும், கொரோனா பாதுகாப்பை நடைமுறை பின்பற்றப்பட்டும் தான் நடத்தப்பட்டது. எந்தஒரு விளக்கம் மற்றும் கருத்தை கேட்காமல் எங்கள் மீது உயர்நீதிமன்றத்தின் மூலமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனால் உயர்நீதிமன்றங்கள் எங்கள் மீது சாடுவதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஒரு பொதுவான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். இதைத்தவிர இதில் குறிப்பாக வழக்கு விசாரணைகளின் போது நீதிபதிகள் கூறும் அனைத்து வாய்மொழி கருத்துக்களையும் ஊடகங்கள் வெளியிடுகின்றன. அதனை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் கவலைகளை நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. ஆனால், நீதிபதிகள் கூறும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடுவதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது. அது அவர்களின் சுதந்திரமாகும்.

மேலும் உயர்நீதிமன்றங்கள் என்பது ஜனநாயகத்தின் தூணாக இருப்பதால் அவர்களை தொந்தரவு செய்ய முடியாது. அதற்கு நாங்களும் விரும்பவில்லை. அது எப்படி சாத்தியமாகும். மேலும் தேர்தல் ஆணைக்குழு என்பது தனி அதிகாரம் கொண்டது. அப்படி இருக்கும்போது கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தியது ஏன்?, அதற்கான அவசர அவசியம் என்பது ஒன்றும் கட்டாயமாக இல்லையே? இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

அதனை ஆணைக்குழுதான் சரியானக் கோணத்தில் புரிந்து கொண்டு, தனக்கான தவறை சரிசெய்துக்கொள்ள முன்வர வேண்டும். அதற்காகத்  தான் உயர்நீதிமன்றங்கள் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கின்றன. அதனால் இந்த விவகாரத்தில்  வார இறுதிக்குள் ஒர் உத்தரவை பிறப்பிக்க நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறி ஒத்திவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .