2025 ஜூலை 23, புதன்கிழமை

காதலியை 35 துண்டுகளாக வெட்டி:நாய்களுக்கு வீசி அழிப்பு

Editorial   / 2022 நவம்பர் 15 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலியை கொலைச் செய்த காதலன், அந்தப் பெண்ணின் உடற் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, ஒவ்வொருநாளும் நள்ளிரவுக்குப் பின்னர் ஒவ்வொரு துண்டுகளாக, நாய்களுக்கு வீசியெறிந்துள்ளார்.

இந்த சம்பவம் புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் பால்கர் பகுதியை சேர்ந்தவர் ஷிரத்தா (26). இவர் மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ‘கால்சென்டரில்' பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டில் அஃப்தாப் அமீன் பொன்னவாலா என்பவருடன் ஷிரத்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்களாக மாறினர்.

வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதை ஷிரத்தாவின் பெற்றோர் விரும்பவில்லை. மகளின் காதலுக்கு அவர்கள் ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலனுக்காக பெற்றோரை உதறித் தள்ளிய ஷிரத்தா, மும்பையின் வாசி பகுதியில் அஃப்தாப் உடன் தனி வீட்டில் வாழத் தொடங்கினார். மும்பையில் வசித்தால் பெற்றோர், உறவினர்கள் தொந்தரவு செய்வார்கள் என்று கருதிய காதலர்கள் யாருக்கும் தெரியாமல் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.

டெல்லியில் பன்னாட்டு நிறுவனத்தின் கால் சென்டரில் ஷிரத்தா பணியாற்றினார். காதலன் அஃப்தாப் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் சமையல்காரராக வேலை செய்தார். டெல்லியின் மஹரவுலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருவரும் வசித்தனர். திருமணம் செய்யாமல் ‘லிவிங் டுகெதர்’ முறையில் வாழ்ந்த அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.

திருமணத்துக்கு வற்புறுத்தல்

காதலன் அஃப்தாபுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பது ஷிரத்தாவுக்கு தெரியவந்தது. தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு அஃப்தாபிடம் அவர் வற்புறுத்தினார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. நாள்தோறும் இரவில் ஷிரத்தாவை, அஃப்தாப் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

நண்பருக்கு தகவல்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் வாழ்ந்ததால் தனது துயரத்தை குடும்பத்தினரிடம் ஷிரத்தா கூறவில்லை. எனினும் மும்பையில் வசிக்கும் தனது பள்ளிப் பருவ நண்பர் லட்சுமணன் நாடாரிடம், ஷிரத்தா தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். வாழ்வின் துயரங்களை அவருடன் பகிர்ந்து வந்துள்ளார்.

கடந்த 2 மாதங்களாக லட்சுமணனால், ஷிரத்தாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஷிரத்தாவின் சமூக வலைதள பக்கங்களும் எவ்வித பதிவுகளும் இன்றி முடங்கி இருந்தன. சந்தேகமடைந்த லட்சுமணன், ஷிரத்தாவின் அண்ணன் ஸ்ரீஜெய் விகாஸிடம் தகவல் தெரிவித்தார்.

புதுடெல்லி வந்த பெற்றோர்

இதைத் தொடர்ந்து ஷிரத்தாவின் தந்தை விகாஸ் மதன் மகாராஷ்டிராவின் மாணிக்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கடந்த 8-ம் தேதி மகளை தேடி விகாஸ் மதன் நேரடியாக டெல்லி சென்றார். மகள் வசித்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. இதைத் தொடர்ந்து டெல்லி மஹரவுலி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

டெல்லி போலீஸார் விரைந்து செயல்பட்டு ஷிரத்தாவின் காதலன் அஃப்தாபை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

வாக்குமூலம்

போலீஸாரிடம் அஃப்தாப் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது: ‘‘நானும் ஷிரத்தாவும் ‘லிவிங் டுகெதர்’ அடிப்படையில் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். திருமணம் செய்து கொள்ளுமாறு ஷிரத்தா வற்புறுத்தினார். திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த மே 18-ம் தேதி இரவில் எங்களுக்குள் மிகப்பெரிய அளவில் சண்டை ஏற்பட்டது. நான் அவளை அடித்தபோது கூக்குரலிட்டாள். அவளது வாயையும் மூக்கையும் தலையணையால் நீண்ட நேரம் அழுத்தினேன்.

இதில் மூச்சுத் திணறி அவள் துடிதுடித்து உயிரிழந்தாள். யாருக்கும் தெரியாமல் கொலையை மறைக்க திட்டமிட்டேன். உடனடியாக 300 லீட்டர் கொள்ளளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வாங்கினேன். நான் வேலை செய்யும் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று இறைச்சியை வெட்ட பயன்படுத்தும் கத்திகளை எடுத்து வந்தேன். அந்த கத்திகள் மூலம் ஷிரத்தாவின் கைகளை 3 துண்டுகளாகவும் கால்களை 3 துண்டுகளாகவும் வெட்டினேன். ஒட்டுமொத்தமாக அவளது உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தேன்.

நாள்தோறும் நள்ளிரவில் 2 மணிக்கு வெளியே சென்று ஒவ்வொரு துண்டாக நாய்களுக்கு வீசி எறிந்தேன். தொடர்ச்சியாக 18 நாட்கள் நள்ளிரவு 2 மணிக்கு ஆள்நடமாட்டம் இல்லாத வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று அனைத்து உடல் பாகங்களையும் வீசியெறிந்தேன். அவற்றை நாய்கள் கவ்வி சென்றுவிட்டன.

வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக நாள்தோறும் ஊதுபத்திகளை கொளுத்தி வைத்தேன். யாருக்கும் என் மீது சந்தேகம் எழவில்லை. வழக்கமாக பணிக்கு சென்றுவந்தேன். பொலிஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகிவிட்டேன். ஆனால் பொலிஸார் என்னை கைது செய்துவிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .