2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தொழில் முனைவோராக முத்திரை பதிக்கும் காஷ்மீர் பெண்கள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 18 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டு, அரசியல், கல்வி, சுகாதாரம், கலை, இலக்கியம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஜம்மு - காஷ்மீர் பெண்கள் முத்திரை பதித்துள்ளதுடன், வெற்றிகரமான தொழில்முனைவோராக வலம் வருகின்றனர்.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான உமர் ஹீர் பிஜ்போராவைச் சேர்ந்த சையத் மெஹ்தாப் (வயது 27) பொறியியல் படித்துள்ளதுடன், வெற்றிகரமான பெண் தொழில்முனைவோராக, வீட்டு பேக்கிங் மீதான தனது ஆர்வத்தை வணிகமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளார்.

குழந்தைப் பருவத்திலிருந்தே, பல்வேறு சமையல் வகைகள், குறிப்பாக வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் சுவைகள் கொண்ட கேக் செய்யும் ஆர்வம் சையத் மெஹ்தாப்பை பேக்கிங் தொழிலில் ஈடுபட வைத்தது.

பொறியியல் படிப்பை முடித்த சையத் மெஹ்தாப், தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்துடன் பெற்றோரின் ஆதரவைப் பெற்று, தனது பேக்கிங் திறமையை மேலும் செம்மைப்படுத்தவும், முழுமையான தேர்ச்சி பெறவும், டெல்லியில் பேக்கிங் பயிற்சியை மேற்கொண்டார். 

துரதிர்ஷ்டவசமாக, கொவிட் கட்டுப்பாடுகளின் போது அவர் தனது தொழிலைத் தொடங்குவதில் பல சிரமங்களை எதிர்கொண்ட போதும் மனம் தளராத அவர், தைரியத்துடன் எல்லா தடைகளையும் வென்றார்.

இப்போதெல்லாம் ஸ்ரீநகர் நகரம் மட்டுமின்றி தொலைதூரப் பகுதிகளில் இருந்தும் சையத் மெஹ்தாபுக்கு பல்வேறு சுவைகள் மற்றும் டிசைன்களில் கேக் தயாரிப்பதற்கான கோரிக்கைகள் தினமும் வருகின்றன.

சையத் மெஹ்தாபின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கேக்குகள் சுவை, வடிவமைப்பு மற்றும் அமைப்பு ஆகியவற்றில் தனித்துவமானவை, ஏனெனில் அவர் தயாரிப்புகளின் தரத்தில் சமரசம் செய்யவில்லை. 

தனது வீட்டின் ஒரு சிறிய அறையில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தொழிலைத் தொடங்கிய அவர் நகரின் ஹவால் பகுதியில் தனது சொந்த தொழிற்சாலையை வைத்திருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த மற்ற பெண்களுக்கும் அவர் வேலை வாய்ப்பு அளித்து வருகிறார்.

சையத் மெஹ்தாப் பிறந்த நாள், திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகளிளுக்கான முற்பதிவுகளை பெறும் அதே நேரத்தில் சாதாரண நாட்களில் மக்கள் 'சன்னி ஸ்மைல் பேக்ஸ்' இன் சுவையான கேக்குகள் மற்றும் இனிப்புகளை விரும்பி உண்கின்றனர். எதிர்காலத்தில் தனது தொழிலை விரிவுபடுத்த அவர் விரும்புகிறார்.

ஜம்மு காஷ்மீரில், குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகின்றனர். கல்வியிலும் திறமையை மேம்படுத்துவதிலும் ஆண்களை விட பெண் குழந்தைகளுக்கு குறைந்த கவனம் செலுத்தப்பட்ட காலம் இருந்தது.

இப்போது பெற்றோர்களும் பெண் குழந்தைகளை ஆண்களுக்கு இணையாகக் கருதி அவர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற முழு ஆதரவை வழங்குகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சையத் மெஹ்தாப் முனீர் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியது மட்டுமல்லாமல், அவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

இதேவேளை, மிஷன் யூத்தின் கீழ் தங்கள் சொந்த தொழில்களை அமைக்க விரும்பும் பெண் தொழில்முனைவோர் மற்றும் ஏனைய பெண்களுக்கு அரசாங்கம் ஆதரவை வழங்குகிறது. 

நடப்பு நிதியாண்டில் ஜம்மு காஷ்மீரில் 2,000 பெண் தொழில்முனைவோரை உள்ளடக்கியதாக மிஷன் யூத் இலக்கு நிர்ணயித்துள்ளடன், இத்திட்டத்திற்கு அரசு மானியமாக மிஷன் யூத் மூலம் ரூ.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டமானது, வட்டியில்லா நிதியுதவி வழங்கும் திட்டங்களில் முதன்மையானது என்ற பெருமையைப் பெற்றுள்ளதுடன், இளம் பெண்களால் நிறுவப்பட்ட வணிகங்கள் சாத்தியமான மற்றும் செழிப்பான நிறுவனங்களாக மாறுவதை உறுதி செய்வதற்காக இது செய்யப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X