2025 மே 10, சனிக்கிழமை

புதிய முதல்வர் மோகன் யாதவ்

Mithuna   / 2023 டிசெம்பர் 12 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபாலில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவின் முகமாக அறியப்பட்டவர் சிவராஜ் சிங் சவுகான். பாஜக இம்முறை முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தோ்தல் களத்தை எதிர் கொண்டது. தற்போது 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத் தோ்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தில் உஜ்ஜைனியின் தெற்கு எம்எல்ஏ மோகன் யாதவ் (58 வயது) முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் துணை முதல்வர்களாக  ஜெகதீஷ் தேவ்ரா , ராஜேஷ் சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் மூன்று முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து மோகன் யாதவ் கூறும்போது, “நான் கட்சியில் உள்ள கடைமட்ட ஊழியர். மாநிலத் தலைமைக்கும், மத்திய தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்புடனும் ஆதரவுடனும் என் பணியை மேற்கொள்வேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக அமோக வெற்றி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 3 மாநிலங்களிலும் கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலைவிட தற்போது அதிக இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில், 164 தொகுதிகளில் ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. காங்கிரஸுக்கு 65 தொகுதிகள் கிடைத்துள்ளன. பாரதிய ஆதிவாசி கட்சி ஓரிடத்தை கைப்பற்றி உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்த முறை காங்கிரஸ் 49 தொகுதிகளை இழந்துள்ளது. பாஜகவுக்கு கூடுதலாக 55 இடங்கள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X