Mithuna / 2024 ஜனவரி 09 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்து தெரிவித்ததையடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் அந்நாட்டு தூதரை திங்கட்கிழமை (08) அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-ம் திகதி அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அத்துடன் “சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.
இந்நிலையில் மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம் ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர்பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். குறிப்பாக, “மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தலமாகமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார்” என்று குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரம் குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (09) அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்கு பதில் உள்நாட்டில் உள்ள மாற்று இடங்களை பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்தனர். இதனால் ஏற்கெனவே மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் அறை முன்பதிவுகளை ரத்து செய்தனர்.
இதையடுத்து, “வெளிநாட்டு தலைவர்கள் மீது அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவை அவர்களின் தனிப்பட்ட கருத்து” என மாலத்தீவு அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை (08) விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் 3 மாலத்தீவு அமைச்சர்களின் பதவியும் தற்காலிகமாக பறிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மாலத்தீவு தூதர் இப்ராஹிம் ஷாஹீபுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் திங்கட்கிழமை (09) சம்மன் அனுப்பியது. இதன்பேரில் நேரில் ஆஜரான ஷாஹீபிடம், பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, மாலியில் உள்ள இந்திய தூதர் முனு மஹாவருக்கு மாலத்தீவு அரசு சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால், பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்கு இந்தியா தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .