2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.சேகருக்கு தடை!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் தொகுதி, அண்ணா திராவிட முன்னேற்ற கழக எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் எஸ்.வி.சேகர். தற்போது, பாரதிய ஜனதாவில்  உள்ளார். எம்.ஜி.ஆர்., சிலைக்கு காவி நிறத்திலான துண்டு அணிவிக்கப்பட்டதற்கு, அப்போதைய முதலமைச்சர்  பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

 

இதுகுறித்த, எஸ்.வி.சேகரின் பேச்சு, 'யூ டியூப்' சானலில் வெளியானது. 'காவி டிரஸ் போட்டா களங்கம் என்கிறார்; அப்போது, தேசிய கொடி நமக்கு களங்கமா; தேசிய கொடி களங்கம் என்றால் முதலமைச்சர்  சொல்லுங்க; களங்கமான தேசிய கொடியை தான் ஆகஸ்ட் 15ஆம் திகதி  ஏற்ற போகிறீர்களா' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

 

இதையடுத்து, தேசியக் கொடியை அவமரியாதை செய்வதாக, எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர், 2020ஆண்டு  ஆகஸ்ட்டில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது சைபர் கிரைம் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவில், 'தேசிய கொடிக்கு எப்போதும் மரியாதை செலுத்துபவன். அரசியல் உள்நோக்கத்துடன், இந்த புகார் அளிக்கப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .