2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

உய்குர் பெண்ணுக்கு கிலியை உண்டாக்கிய சின்ஜியாங் படங்கள்

Freelancer   / 2022 ஜூன் 05 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்தில், இரகசிய வெகுஜன தடுப்பு அமைப்பின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான உய்குர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் டர்னிசா மட்செடிக் கிராவை பயமுறுத்தியுள்ளன.

தாதியும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உய்குர்களுக்கான பிரச்சாரத்தின் துணைப் பணிப்பாளருமான அவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை இழந்த நிலையில், இப்போது, ​​​​கசிந்த தரவுத்தளத்தில் உறவினர் அல்லது நண்பரின் படங்கள் இருக்குமோ என அவர் பயப்படுகிறார்.

"அவர்கள் அனைவரையும் பார்க்க நான் மிகவும் பயப்படுகிறேன். நிறைய பேர் மிகவும் பரிச்சயமானவர்கள் போல் தெரிகிறது“ என சிபிசி ரேடியோவுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்குத் தெரிந்தவர்களை அல்லது எனது சகோதரர்கள் அல்லது எனது உறவினர்கள் அல்லது எனது மருமகன்களை படங்களில் பார்த்தால், எனக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் பலவீனமாக இருப்பதாக உணர்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

சின்ஜியாங் பொலிஸ் கோப்புகள் கடந்த வாரம் பிபிசி மற்றும் டெர் ஸ்பீகலில் உள்ள ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய குழுவான புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பால் வெளியிடப்பட்டது. 

கோப்புகளில் பல்லாயிரக்கணக்கான படங்கள் உள்ளதுடன், அவை அனைத்தும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

15 முதல் 73 வயதுக்குட்பட்ட 2,800 கைதிகளின் அடையாளப் புகைப்படங்கள் மற்றும் பொலிஸ்  பயிற்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்கள், 2018 மற்றும் அதற்கு முந்தைய திகதியிலிருந்து கசிந்த கோப்புகளின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“முகாம்களில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் எந்த நபரையும் சுட்டுக் கொல்ல உத்தரவு“ போன்ற உத்தியோகபூர்வ கொள்கைகளையும் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

2018 இல் புகைப்படம் எடுக்கப்பட்டபோது 50 வயதுடைய ஒரு பெண், கண்ணீருடன் கமராவைப் பார்த்துக் கொண்டிருந்தார். 2017இல் "மறு கல்விக்காக" அவர் தடுத்து வைக்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்ற போதும் அதற்கான காரணத்தை பிபிசி கூறவில்லை.

ஒன்று முதல் இரண்டு மில்லியன் உய்குர்களும் ஏனைய துருக்கிய முஸ்லீம்களும் 2014 முதல் சின்ஜியாங் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பு முகாம்களில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று 2021 ஆம் ஆண்டின் அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

எனினும், சின்ஜியாங்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சீனா பலமுறை மறுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் சின்ஜியாங்குக்கான அண்மைய வருகையுடன் குறித்த ஆவணங்களின் வெளியீடு  ஒத்துப்போனதுடன், பீஜிங்கை அதன் கொள்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு  ஊடக சந்திப்பு ஒன்றில் பச்லெட் கூறினார்.

இதேவேளை, சின்ஜியாங் பொலிஸ் கோப்புகள் வெளியிடப்பட்டதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனியில் உள்ள அரச அதிகாரிகள் சீனாவைக் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .