2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சின்ஜியாங் துஷ்பிரயோகங்கள்: ஐ.நாவில் 47 நாடுகள் கவலை

Freelancer   / 2022 ஜூன் 18 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் துஷ்பிரயோகங்கள் நடப்பதாக 47 நாடுகள் கவலை தெரிவித்ததுடன், உய்குர்களின் அடக்குமுறை குறித்த நீண்ட கால தாமதமான அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

"சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நாங்கள் தொடர்ந்து கவலை கொண்டுள்ளோம்" என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான நெதர்லாந்து தூதுவர் பால் பெக்கர்ஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்ததாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களும் ஏனைய முஸ்லிம் சிறுபான்மையினரும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிக்கும் பல நம்பகமான அறிக்கைகளை 47 நாடுகளின் சார்பாக விடுத்த கூட்டறிக்கையில் பால் பெக்கர்ஸ்,  சுட்டிக்காட்டினார்.

முகாம்கள் உள்ளன என்றும் அவை தொழில் திறன் பயிற்சி மையங்கள் என்றும் தீவிரவாதத்தை சமாளிக்க அவசியமானவை என்றும் பீஜிங் ஒப்புக்கொண்டதாக தெரிவித்த அவர், உய்குர்கள் மற்றும் சிறுபான்மையினரைச் சேர்ந்த பிற நபர்களுக்கு எதிராக பரவலான கண்காணிப்பு, பாகுபாடு காட்டப்படுவதாக செய்திகள் உள்ளன என்றும் கூறினார்.

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனை, கட்டாய கருத்தடை, பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, கட்டாய உழைப்பு மற்றும் அதிகாரிகள், குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்தல் பற்றிய அறிக்கைகள் குறித்தும் கூட்டறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டது.
 
சின்ஜியாங் நிலைமையை சுதந்திரமாக அவதானிக்க ஐ.நா புலனாய்வாளர்கள் மற்றும் நிபுணர்களுக்கு தடையற்ற அணுகலை வழங்குமாறு பீஜிங்கிற்கு குழு அழைப்பு விடுத்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

பல மாதங்களாக சின்ஜியாங்குக்கு தடையற்ற அணுகல் கோரிய பின்னர், ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்செலெட் இறுதியாக கடந்த மாதம் சீனாவுக்கு விஜயம் செய்தார். 

இது, ஐ.நா உயர்ஸ்தானிகர் ஒருவரின் 17 வருடத்தின் பின்னரான சீன பயணம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால், சீன அதிகாரிகளால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பயணத்துக்கு முன்னும் பின்னும் சீனாவின் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக இன்னும் வலுவாக பேசாததற்காக பச்செலெட் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .