2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

துப்புக் கொடுப்போருக்கு சன்மானம் வழங்கும் சீனா

Freelancer   / 2022 ஜூன் 15 , பி.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் நடவடிக்கைகள் குறித்து தகவல் வழங்கும் பொது மக்களுக்கு 15,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் சன்மானங்களை சீனா வழங்குகிறது.

சன்மானங்களுக்கான அளவுகோல்களை அமைக்கும் புதிய ஒழுங்குமுறை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுக்கு தெரியாத மற்றும் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படும் செயல்களுக்கான தெளிவான இலக்கு அல்லது சரிபார்க்கக்கூடிய தகவல்களை வழங்கும் எவரும், புலனாய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டவுடன் சன்மானத்தைப் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை வழங்க மக்களை இந்த ஒழுங்குமுறை ஊக்குவிக்கும் என்றும், இந்த வருடத்தின் பிற்பகுதியில் இடம்பெறும் கட்சி மாநாட்டுக்கு இதுவோர் உறுதியான பாதுகாப்பு நடவடிக்கை என்றும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சீனாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு எதிர்ப்பு சட்டங்கள் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படும் செயல்களை உள்ளடக்கிய போதும், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புதிய ஒழுங்குமுறையின் கீழ், தகவல் வழங்குவோர் நான்கு அடுக்கு அமைப்பில் ரொக்க சன்மானங்கள் மற்றும் சான்றிதழ்களுக்கு தகுதியுடையவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆகக் குறைந்த மட்டத்தில் தகவல் வழங்குவோர் 10,000 யுவானுக்கும் குறைவான வெகுமதியைப் பெறலாம் என்றும் மிக முக்கிய தகவலை வழங்குபவருக்கு 100,000 யுவானுக்கு மேல் வெகுமதி கிடைக்கும்.  

தகவல் அளிப்பவர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களைப் பயன்படுத்தி அல்லது அநாமதேயமாக தொலைபேசி, மின்னஞ்சல், கடிதம் அல்லது நேரில் தகவல்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தகவல் சரிபார்க்கப்பட்டு அது வெகுமதியைப் பெறுமா மற்றும் அதன் மதிப்பை 30 நாட்களுக்குள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தீர்மானித்து அமைச்சின் கிளைகள் மூலம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தருபவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்புப் பொலிஸாரிடம் இருந்து பழிவாங்கும் அல்லது சாட்சியங்களை மறைக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், தகவலாளிகளின் பணியிடம் அல்லது ஸ்தாபனம் தண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அபராதம் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X