2026 மார்ச் 18, புதன்கிழமை

வேகமாக பரவும் நோய்; இருவர் பலி: 30,000 பேருக்கு எச்சரிக்கை

S.Renuka   / 2026 மார்ச் 18 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தில் (University of Kent) பயிலும் மாணவர்கள் இடையே மெனின்ஜைடிஸ் பி (Meningitis B) எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது. 

இதுவரை 15 மாணவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர். 

தற்போது இந்தத் தொற்று எல்லை தாண்டி பிரான்ஸ் நாட்டிற்கும் பரவியுள்ளது. 

கென்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு பிரான்ஸ் சென்ற மாணவர் ஒருவருக்கு இந்நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இது குறித்து விளக்கமளித்த சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting), இந்தத் தொற்று பரவுவது குறித்து ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

மின்-சிகரெட் (Vapes) அல்லது பானங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் நீண்ட நேரம் முத்தமிடுவது (Prolonged Kissing) போன்ற நெருக்கமான தொடர்புகள் மூலம் இந்த பாக்டீரியாக்கள் எளிதாகப் பரவுகின்றன என்று அவர் கூறியுள்ளார். 

குறிப்பாக, கேளிக்கைக் கூடங்கள் மற்றும் விடுதிகளில் மாணவர்கள் இத்தகைய பழக்கங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இது ஒரு உயிருக்கு ஆபத்தான சூழல் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கென்ட் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்கியிருக்கும் சுமார் 30,000 பேருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மார்ச் 5 முதல் 7-ஆம் திகதி வரை 'கிளப் கெமிஸ்ட்ரி' (Club Chemistry) என்ற இரவு விடுதிக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக ஆன்டிபயாடிக் (Antibiotics) மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இந்நோயின் அறிகுறிகள் சாதாரண காய்ச்சல் அல்லது போதை மயக்கம் (Hangover) போலத் தோன்றும் என்பதால், மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கென்ட் பல்கலைக்கழகத்தில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு மெனின்ஜைடிஸ் பி தடுப்பூசிகளை வழங்கும் அதிரடித் திட்டத்தைச் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். 

2015-ஆம் ஆண்டிற்கு முன்னதாகப் பிறந்த பெரும்பாலான மாணவர்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவில்லை என்பதால், அவர்கள் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

இதற்கிடையில், பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் இரத்து செய்யப்பட்டு ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த 'முன்னெப்போதும் இல்லாத' (Unprecedented) தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தத் தீவிர மருத்துவக் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X