2026 மார்ச் 21, சனிக்கிழமை

தீக்க முடியாவிட்டால் 2022இல் பதவி விலகுவேன்

Editorial   / 2021 டிசெம்பர் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

காட்டு யானைகளின் தாக்குதலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க முடியாது போனால், தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

யானைகளின் தாக்குதலால் தற்போது ஏற்படும் சேதங்களை அடுத்த வருடத்துக்குள் 50 சதவீதத்தால் குறைக்க முடியுமென இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவ்வாறு முடியாவிட்டால், அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தான் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

யானைகளால் தேசிய உணவு உற்பத்தியில் 20 சதவீதமானவை அழிக்கப்பட்டு வருவதாகவும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது என்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் அனேக மாவட்டங்களில் யானைகள் - மனித மோதல்கள் உருவாகி, மக்கள் பல இழப்புகளை சந்தித்து வருகின்றனர் என தேசிய காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா, பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், காடுகளும் யானைகளும் அவசியமானது தான். ஆனால், அவைகள்  நாட்டில் உள்ள காடுகளின் அளவுக்கு ஏற்ப யானைகளின் எண்ணிக்கையை முறையாக  பாதுகாத்து, மக்களையும் வாழ வைக்க அமைச்சு ஒரு சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X