Editorial / 2026 மார்ச் 24 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு கோரி, பொத்துவில் கனகர் கிராம மக்களால் திங்கட்கிழமை (23) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்த கனகர் கிராம மக்கள், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வசமுள்ள தமது காணிகளை மீட்டுத் தருமாறு கோரி ஐந்தாண்டுகளாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் பலனாக, கடந்த 2018ஆம் ஆண்டு இப்பகுதி மக்களின் மீள்குடியேற்றத்திற்காக அரசாங்கத்தால் 202 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதாகப் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.
அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட காணியைப் பகிர்ந்தளிப்பதற்காக 202 பேரின் விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் பொத்துவில் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2023ஆம் ஆண்டு முதற்கட்டமாக 73 குடும்பங்கள் மட்டுமே அங்கு மீள்குடியேற்றப்பட்டனர். எஞ்சியுள்ள தமக்குக் குடியிருப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
"அரசாங்கம் விடுவித்த எமது காணியில் நாம் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்படுவது ஏன்?" என்ற கேள்வியுடன், அக்காணிகளைத் தம்மிடம் கையளிக்குமாறு கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக மீள்குடியேற்றப்பட்ட 73 குடும்பங்களுக்கு, மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்வித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. அவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்திற்காக விண்ணப்பித்த எஞ்சிய 129 பேரில் சிலருக்கு கடந்த ஆண்டு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை. சேனைப் பயிர்ச்செய்கையை வாழ்வாதாரமாகக் கொண்ட தமக்கு, அடிப்படை வசதிகளுடன் கூடிய மீள்குடியேற்றத்தை விரைவாக வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அக்கரைப்பற்று - பொத்துவில் பிரதான வீதிக்கு முன்பாக காலை 10 மணியளவில் பதாதைகளை ஏந்தியவாறு இப்போர் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள்:
"விடுவிக்கப்பட்ட 202 ஏக்கர் காணிப் பகுதியில் எமக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் கடற்கரை காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதனால் எமது வாழ்வாதாரப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளோம். தற்போதைய அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி எமது வாழ்வாதாரக் காணிகளை விடுவிக்க வேண்டும்."
போராட்டத்தின் நிறைவில், ஒரு குழுவினர் பொத்துவில் பிரதேச செயலகத்திற்குச் சென்று பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் நசீலிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர்:
"கனகர் கிராம மக்களின் மகஜர் இன்று என்னிடம் கையளிக்கப்பட்டது. இடம்பெயர்ந்த 176 பேருக்காக 202 ஏக்கர் காணியை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து மீட்டு, தலா ஒரு ஏக்கர் 20 பேர்ச் வீதம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 73 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்டத்திற்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தெரிவு செய்யப்படுபவர்களுக்கான வீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன," எனத் தெரிவித்தார்.








6 minute ago
12 minute ago
12 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
12 minute ago
31 minute ago