2025 ஜூன் 25, புதன்கிழமை

’போதைவஸ்து வியாபாரிகளை காட்டிக் கொடுப்போம்’

Freelancer   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம் ஸாகிர்

நீங்கள் விழிப்புடன் இருங்கள்; நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து போகாதீர்கள். எங்களுடைய தலைமுறையை காப்பாற்றுவோம். போதைவஸ்து வியாபாரிகளை காட்டிக் கொடுப்போம்; அவர்களை அழித்தொழிப்போம் என  அறிவிஷப்பாளர் பி.எச் அப்துல் ஹமீத் ​அழைப்புவிடுத்துள்ளார். 

இளைய தலைமுறையினருக்காக நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (10)  ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் வழிகாட்டல் மாநாட்டில் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொண்டு, இளைய தலைமுறையினர் மத்தியில்  பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ. அப்துல் கபூரின் பங்களிப்புடன் அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,  மர்ஹும் ஏ.ஆர்.எம் ஜிப்ரி நடத்திய ‘அறிவுக்களஞ்சியம்’ நிகழ்ச்சி தொகுப்பின் நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பி.எச் அப்துல் ஹமீத்  மேலும் அங்கு உரையாற்றும்போது கூறியதாவது; பொறுப்புக் கூற வேண்டிய நாங்கள்; அந்த பொறுப்பைத் தட்டிக் கழித்து, கடந்து போகின்றோம். பொறுப்பு கூற வேண்டியவர்கள் அனைவரும் இதனைப் பொறுப்பேற்று இருந்தால், இன்று இந்தத் துர்ப்பாக்கிய நிலை வந்திருக்காது. 
இதற்குப் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார் யார்? முதலில் பெற்றோர்கள்! பெற்றோரை நோக்கித்தான் எனது சுட்டு விரலை நீட்டுவேன்.

நான் போதைப் பொருளுக்கு அடிமையாகாமைக்குக் காரணம் என் அன்னை. அன்னை இதுபற்றி எந்த அறிவுரையும் எனக்குச் சொல்லவில்லை. ஆனால், என் மீது அன்னை கொண்டிருந்த அன்பு தான் காரணமாகும். பெற்றோர்களே! உங்கள் பிள்ளையின் மீது வைக்கின்ற அன்பு, அரணாக நின்று அவர்களைக் காப்பாற்றும்.
பிள்ளைகளே! அன்னை உங்கள் மீது வைக்கும் அன்பை எந்த அளவு பெறுமதியாக நினைக்கிறீர்கள் என்று நினைத்தால், இது போன்ற தீய பழக்க வழக்கங்களிருந்து உங்களை காப்பாற்றும். இதைவிட முக்கியமான ஒன்று நண்பர்கள்! நண்பர்கள்தான் உங்கள் சிந்தனைகளை திசை திருப்பக் கூடியவர்கள். எல்லாப் போதை பழக்கமும் நண்பர்களைத் திருப்திபடுத்துவதற்காகத்தான் நீங்கள் ஆரம்பிக்கின்றீர்கள்.

நீங்கள் விழிப்புடன் இருங்கள். நமக்கு எதற்கு வம்பு என்று கடந்து போகாதீர்கள். எங்களுடைய தலைமுறையை காப்பாற்றுவோம். போதைவஸ்து வியாபாரிகளை காட்டிக் கொடுப்போம்: அவர்களை அழித்தொழிப்போம் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .