Thipaan / 2015 ஜூன் 10 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் பூராவும் பரந்திருக்கின்ற ஈழத்தமிழர்கள் தங்களை யூதர்களோடு ஒப்பிட்டு பெருமைப்படுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதுண்டு. அழிவுகளிலிருந்து மீண்டெழுந்த சமூகம் என்கிற அளவில் 'யூதர்கள்' முன்னோடியாக கொள்ளப்படக் கூடியவர்கள். அதில் மாற்றுக்கருத்துக்கள் பெரிதாக இல்லை.
ஆயினும், யூதர்கள் (வெளிச்சக்திகளின் ஆதரவோடு) கட்டியமைத்த இஸ்ரேலின் பலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு என்பது, சிங்கள பௌத்த தேசியம், தமிழ்த் தேசியத் தளத்தில் செய்யும் ஆக்கிரமிப்புக்கு ஒப்பானது. பல நேரங்களில் அதனையும் தாண்டியது.
'ஈழத்தமிழர்கள்- யூதர்கள்' ஒப்பீடு எப்படி, எவரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், இந்த ஒப்பீட்டினை முதலில் செய்தவர், ஈழத்தமிழர்களும் உலகம் பூராவும் பரந்து வாழும் இனக்குழுமம் அல்லது சமூகம் என்கிற அடிப்படையில் அதனை முன்வைத்திருக்கலாம்.
அல்லது, பரந்து வாழ்தலினூடு கிடைக்கும் பொருளாதார, சமூக, இராஜதந்திர அறிவு மற்றும் தொடர்புகளினூடு இஸ்ரேல் போன்றதொரு தேசத்தை இலங்கையில் கட்டமைத்துக் கொள்ள முடியும் என்கிற குறுகிய புரிதலின் போக்கில் உருவாகியிருக்கலாம்.
இந்த ஒப்பீடு எப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தாலும், ஈழத்தமிழர்கள் தளத்தில் அது, திரும்பத் திருப்ப உச்சரிக்கப்படுகின்றது. அதனை, போலியாகவேனும் திருப்தி கொள்வதற்கான வெற்றிப் புள்ளியாகவும் பலரும் கருதுகின்றார்கள்.
பேரழிவுகளுக்குப் பின்னரும் யூதர்கள் எப்படி தங்களை வெற்றிக்கான புள்ளியில் ஒருங்கிணைத்தார்கள் என்பதை புரிந்து கொள்தல் என்பது ஈழத்தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பெரும் பாடம். ஆனால், அதனைப் புரிந்து கொள்வதில் ஈழத்தமிழர்கள் அக்கறை கொள்வதில்லை. மாறாக, போலி பெருமைப் பீத்தல்களில் அக்கறையாக இருந்து காலத்தை வீணடிக்கின்றனர்.
ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து முடக்கப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துவிட்டது. யார் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்துக்கான இறுதித் தருணம் அது. மீண்டு வருவார்கள், ஆயுத ரீதியில் மீண்டெழுவோம் என்று நம்பிக்கை(?) கொள்வது இன்னும் இன்னும் பேரிழப்பையே கொடுக்கும்.
ஆக, அது தொடர்பில் இப்போது பேசிக் கொண்டிருப்பது வீணானது. சுமார் மூன்று தசாப்தங்களாக ஆயுதப் போராட்டம் மாத்திரம் கூர்மைப்படுத்தப்பட்டிருந்த சமூகம் என்கிற ரீதியில் ஈழத்தமிழ்ச் சமூகம் இப்போது, உள்ளக முரண்பாடுகள், சமூகப் பிறழ்வுகளின் போக்கிலான சமநிலையற்ற தன்மை, கல்வியிழப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போர் ஆட்கொண்டிருந்த சமூகமொன்று எதிர்கொள்ளும் உள்ளக முரண்பாடுகளின் போக்கிலும் அணுகப்பட வேண்டியது. வித்தியா படுகொலையோடு நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதோடு அந்தப் பிரச்சினை முடிந்து போவதில்லை. அத்தோடு நாம் திருப்திப்பட்டுக் கொள்கின்றோம் என்றால், எமக்குள் இருக்கும் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயங்குகின்றோம் என்று அர்த்தம்.
வித்தியா மீதான வன்புணர்வுக்கு ஒப்பான சம்பவங்கள் எமது சமூகத்துக்குள் நாளாந்தம் இடம்பெறுகின்றன. அதில், வெளியில் தெரிவன சொற்பமானவை. பெண்கள்- சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறைகளும், வன்புணர்வுகளும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நீண்ட நாட்களாகிறது.
வித்தியா மீதான வன்புணர்வுப் படுகொலையை பெண்களுக்கு எதிரான பிரச்சினை என்கிற அளவில் மாத்திரம் அடையாளப்படுத்துவதிலும், நாம் பாரிய தட்டிக்கழிப்பினைச் செய்கின்றோம். ஏனெனில், போருக்குப் பின்னரான சமூகமொன்றைப் பீடித்துள்ள பெரும்நோயின் வெளித்தெரியும் ஒரு கூறாக வன்புணர்வு, பாலியல் வன்முறைகளைக் கொள்ள முடியும்.
வெளித்தெரியும் ஒரு நோய்க்கூறினை மாத்திரம் குணப்படுத்துவதுடன் நோயினை முழுமையாக குணப்படுத்தி விட்டதாக கற்பிதம் கொள்ள முடியாது. நோயினை அதன் ஆணி வேர் வரை சென்று அழித்து, சமூகத்தை குணப்படுத்த வேண்டும். அதுதான், எதிர்காலத்தில் வித்தியாக்களைக் காப்பாற்றும்.
தாழ்ந்து விடாத தீரமும், யதார்த்தங்களை அதிகம் உள்வாங்காத அர்ப்பணிப்புமே ஈழத்தமிழர்களின் பலமும் பலவீனமும். ஆனால், அந்த அர்ப்பணிப்பு என்பது சில தருணங்களில் அடுத்தவர்களினால் செய்யப்பட வேண்டும் என்கிற சுயநலவாதம் ஈழத்தமிழனை பேரழிவின் பக்கத்தில் கொண்டு சேர்த்தது. தமிழ்ச் சமூகம் கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் சீராக ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம் அல்ல. வர்க்க ரீதியிலான போக்கிலேயே அதனை அணுகி வந்திருக்கின்றது.
இது, உலகம் பூராவுமுள்ள பிரச்சினைதான். ஆனால், யூதர்களோடு தங்களை ஒப்பிடும் ஈழத்தமிழர்கள் முதலில் கல்வி- பொருளாதாரம் ஆகிய புள்ளிகளில் ஒருங்கிணைய வேண்டும். அது, சமூக ரீதியிலான முன்னேற்றத்துக்கு அவசியமானது.
கல்வி என்பது எமக்கிடையில் அந்தஸ்து மற்றும் பணமீட்டலுக்கான கருவி என்கிற அளவிலேயே ஆரம்பம் தொட்டு கையாளப்பட்டு வந்திருக்கின்றது. அதன் விளைவுதான் எங்களை வெற்றிகரமான சமூகமாக முன்னிறுத்துவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
ஏனெனில், எம்முடைய கல்வி முறைமை வைத்தியர்கள், பொறியாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் என்கிற தனி மனித தரநிலையின் போக்கிலேயே அணுகப்பட்டது. அப்படியான நிலையில், அதனை சமூகத்தின் வெற்றிக்கான புள்ளியாக ஒருங்கிணைக்கின்ற போது பாரிய சிக்கல் தோன்றும். இன்னொரு பக்கம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாள்வதற்கான புரிதலை இந்த கல்வி முறை கொடுக்கவில்லை.
உலகம் பூராவும் பாரிய ஆயுத மோதல்கள்- போரினை எதிர்கொண்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிக தருணங்களில் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால், அதனை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்களும், வளங்களும் வேறுபடுகின்றன.
அந்த வகையில், ஈழத்தமிழர்கள் போருக்குப் பின்னரான பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், தனிமனிதன் முன்னிலைப்படுத்தப்படும் கல்வியும், அதன் வழிவரும் பொருளாதாரமும் அந்த வெற்றியை நிறைவே தள்ளி வைத்திருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையென்பது தீர்க்கப்பட வேண்டியது. அதற்கான முயற்சிகளை யாரும் கைவிடவும் முடியாது.
ஈழத்தமிழ்ச் சமூகத்தில் காணப்படும் வரட்டுத்தனமான சிந்தனைகளில், தாம் கற்றறிந்தவர்கள் என்பதும் சமூக ஒழுக்கத்தில் மேலானவர்கள் என்பதுவும் முக்கியமானவை.
எமது கல்வியை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் நாம் பிழைத்துக் கொள்வோம் என்பது பெரும் இறுமாப்பாகவே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால். அதன் உண்மை நிலை எவ்வாறு இருக்கின்றது என்பது கேள்விக்குரியது.
இன்னொரு பக்கம் சமூக ஒழுக்கத்தில் மேலானவர்கள் என்கிற வரட்டு வாதம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஏனெனில், தங்களை எவ்வளவு புலமையாளர்களாக கருதிக் கொண்டாலும், செய்திகளை அறிவதற்காக இன்னமும் இரண்டாம் தர இணையத்தளங்களில் காத்திருப்பவர்கள் எம்மத்தியில் அதிகம். இதில், கற்றவர்கள், கல்லாதவர் என்கிற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது.
ஈழத்தமிழ்ச் சூழலில் மஞ்சள் பத்திரிகைகளுக்கு ஒப்பான இணையத்தளங்களில் கோலொச்சுகை அதிகம். அடுத்தவனின் அந்தரங்கத்தைப் படம் பிடித்து சமூக ஒழுக்கத்தைக் காக்கின்றோம் என்கிற ரீதியில் பதிவுகளைச் செய்யும் இணையத்தளங்களையே நம்மவர்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அந்தத் தளங்களில் வழி வரும் செய்திகளை நம்பிக் கொண்டு சமூகத்தைப் புரிந்து கொண்டால், அவர்களின் புரிதல் எப்படியிருக்கும் என்று நாம் விளங்கிக் கொள்ள முடியும். சமூகத்தைப் அப்பட்டமாக புரிந்து கொள்ளுதல் என்கிற நிலையை எம்மவர்களில் அதிகமானோர் இப்படித்தான் உணர்ந்து வைத்திருக்கின்றார்கள்.
இதனைவிட இன்னொரு பாரிய பிரச்சினை பொருளாதாரம். ஈழத்தமிழர்களின் பொருளாதாரம் என்பது புலம்பெயர் வாழ்வினை பிரதானப்படுத்தி நீண்ட காலமாகின்றது. ஆனால், அதற்கான வாய்ப்புக்களும், வழிகளும் அடைக்கப்பட்ட பின்னரும் அதனையே முன்னிறுத்திக் கொண்டிருப்பவர்களே இங்கு அதிகம். இந்த நிலை, இங்கு வேலையற்றவர்களை நாளாந்தம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
ஏற்கெனவே போருக்குப் பின்னரான பிரச்சினைகளோடு இருக்கின்ற சமூகத்தின் பெரும் பிரச்சினையாக வேலையற்ற பிரச்சினைகளையும் கொள்ள முடியும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்தில் இங்கு அதிகமான தொகை விரயமாக்கப்படுகின்றது. அவை, சரியான பொருளாதார முதலீடுகளாகவே, முன்னேற்றத்துக்கான வழிகளாகவே கையாளப்படுவதில்லை. அது தொடர்பில் யாரும் அக்கறை கொள்வதும் இல்லை.
ஆனால், ஈழத்தமிழர்களின் மீள் எழுச்சியில் புலம்பெயர் சமூகம் பொருளாதார ரீதியில் பங்களிக்க வேண்டிய பாரிய கடப்பாடு இருக்கின்றது. அது, பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு பணம் அனுப்புதல் என்கிற நிலையில் இருந்து அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.
அது, நலிந்து போயிருக்கின்ற உள்ளக பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதுடன், வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கான சாத்தியங்களை உருவாக்கப்பட வேண்டும். அதுவே, எம்மிடையே குடும்பத்தலைவர்கள் இன்றி நாளாந்தம் அல்லாடும் ஒரு இலட்சத்துக்கும் அண்மித்த பெண்களையும், வேலை வாய்ப்புக்களின்றி தொடர்ந்தும் பிரச்சினைகளாகவும், பிரச்சினைக்குள்ளும் சிக்கும் இளைஞர்களையும் மீட்டெடுக்க உதவும்.
அப்படியான, முயற்சி என்பது எமது அடுத்த கட்டத்துக்கான அவசரமான நகர்வாகவும் கொள்ளப்பட வேண்டியது. மாறாக, அந்தப் பொறுப்பினை புலம்பெயர் சமூகமும், இங்குள்ளவர்களும் தட்டிக்கழித்தால் தோற்றுப்போன சமூகமொன்றின் அசலான உதாரணமாக ஈழத்தமிழர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள்.
போருக்குப் பின்னரான சமூகமாக நாம் தொடர்ந்தும் எம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. ஏற்கெனவே உலக வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லாடும் நாம், இன்னும் இன்னும் வீழ்ச்சிக்கான பாதையில் செல்ல வேண்டியிருக்கும்.
அப்படியான நிலையில், கல்வியும்- பொருளாதாரமும் ஒருங்கிணைக்கப்பட்டு முழு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
அதனூடு சமூக சமநிலைத்தன்மையை மீட்டெடுத்து சமூக ஒழுக்கத்தின் பக்கமும் நாம் நகரலாம். அதுதான் உண்மையான வெற்றியாகவும் இருக்கும்!
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago