Thipaan / 2015 ஜூலை 01 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்தை கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் கலைப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(26ஆம் திகதி) இரவு நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.
உண்மையிலேயே, அவர் அன்றும் அதனை கலைக்க நினைத்திருக்கவில்லை. தேர்தல் சீர்திருத்தத்துக்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டு நாடாளுமன்றத்தை கலைப்பதாகவே அவர் கூறியிருந்தார். ஆனால், அந்தத் திருத்தத்துக்கு சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து நாடாளுமன்றத்தை கலைக்க அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அந்த வகையில் பார்த்தால், 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதிலும் சிறுபான்மை மக்கள் முக்கிய பங்காற்றினர். அதேபோல் 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்தை கலைத்துவிடுவதிலும் சிறுபான்மையினர் பெரிதும் பங்காற்றியுள்ளனர்.
தாம் பதவிக்கு வந்து முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதிகளில், தற்போதைய தேர்தல் முறையை சீர்திருத்துவதும் முக்கிய வாக்குறுதியாகும். ஆனால், அதற்காக மைத்திரிபாலவை பதவிக்கு கொண்டு வந்த ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏனோ அக்கறை இருக்கவில்லை. அதனால், ஜனாதிபதி பெரும் இக்கட்டான நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
அதேவேளை, 2005ஆம் ஆண்டு முதல் கடந்த ஜனவரி 9ஆம் திகதி வரையிலான தமது பதவிக் காலத்தில் இந்த சீர்திருத்தத்தைப் பற்றி நினைத்தும் பார்க்காத
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஏதோ பெரும் ஆவலுடன் இந்த சீர்திருத்தத்தை சட்டமாக்க பெரு முயற்சி எடுத்தது. அதற்காகவென அக் கட்சி ஓர் ஆலோசனையையும் முன்வைத்தது.
அதேவேளை, தற்போது ஜனாதிபதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஜாதிக ஹெல உறுமயவும் அதனை ஒத்த ஆலோசனை ஒன்றை முன்வைத்தது.
ஆனால், ஐ.தே.க.வும் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளும் அதனை எதிர்க்கவே, ஜனாதிபதி செய்வதறியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை பலமில்லாததால் அரசாங்கம் ஸ்தம்பித்துவிட்டது. அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் எதுவும் நடைபெறாத நிலை உருவாகியது.
கடந்த வாரமளவில், ஜனாதிபதிக்கு முன் மூன்று மாற்றுத் தீர்வுகள் இருந்தன. 20ஆவது திருத்தம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிட்டு, தாம் அந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக கூறி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தை கலைப்பது ஒன்றாகும். அல்லது பெரும்பான்மை பலம் கொண்ட ஐ.ம.சு.கூவுக்கு ஆட்சியை கையளிக்கவும் முடியும். மூன்றாவதாக 20ஆவது திருத்தத்தை கைவிட்டுவிட்டு நாடாளுமன்றத்தை கலைக்கலாம்.
முதலில் ஜனாதிபதி, 20ஆவது திருத்தம் என்ற பெயரில் ஏதாவது ஒன்றை நிறைவேற்றிவிட்டு நாடாளுமன்றத்தை கலைக்கத் தான் முயற்சி செய்தார். அதற்காக கடந்த 12ஆம் திகதி அமைச்சரவைக்கு ஓர் அரசியலமைப்பு நகலை அவரே சமர்ப்பித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை விடயத்தில் ஐ.தே.க. நிலைப்பாட்டுக்கு கூடுதலாகவும் ஸ்ரீ.ல.சு.க. நிலைப்பாட்டுக்கு குறைவாகவும் உள்ள நடுநிலை எண்ணிக்கை அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், அது சகல கட்சிகளினதும் எதிர்ப்புக்குள்ளாகியது. குறிப்பாக சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகள் அதனை கடுமையாக எதிர்த்தன. எனவே, ஜனாதிபதியால் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாது போயிற்று.
இரண்டாவது மாற்றுத் தீர்வான, ஐ.ம.சு.கூ.விடம் ஆட்சியை கையளிப்பதை அக் கட்சியின் தவிசாளரும் தலைவருமான ஜனாதிபதியே விரும்பவில்லை. ஏனெனில், அவர் அதன் தலைவராக இருந்த போதிலும் அதனுள் அவரது பரம எதிரியான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. எனவே, அவரிடம் எஞ்சியது கடைசி மாற்றுத் தீர்வாகும்.
அதாவது, தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான வாக்குறுதியை மறந்துவிட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதாகும். அதனைத் தான் அவர் கடந்த வெள்ளிக்கிழமை செய்தார். அவர், மேற்படி முதலாவது தீர்வை அடைய முற்பட்ட விதத்தில் அடைந்து இருந்தால், அதனால் நாட்டில் சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கும்.
இந்த முயற்சியின் போது ஜனாதிபதியின் பின்னால் ஹெல உறுமயவே செயற்பட்டு இருக்கிறது என ஊகிக்கலாம். அதனைத் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடாளுமன்றத்தில் மிக காரசாரமாக கூறியிருந்தார்.
ஜனாதிபதியைச் சுற்றி 'சமையலறை குழு' ஒன்று இயங்குவதாகவும்; ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து ஜனாதிபதியாவதற்கு கனவு காணும் ஓர் அமைச்சரே அக் குழுவை இயக்குவதாகவும் அவர் கூறியிருந்தார். மஹிந்த ராஜபக்ஷவை பதவியிலிருந்து தூக்கியெறிய நடவடிக்கை எடுத்த தாம், அதனால் இப்போது மற்றொரு சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த 'சமையலறை குழு' பற்றிய செய்தி அரசியல் வட்டாரங்களில் சில வாரங்களாக அடிபட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அந்த தகவல்களின் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன, ஹெல உறுமயவின் ஆலோசனையின் படியே நடந்து கொள்கிறார்.
அது எந்தளவுக்கு என்றால் தாம் தலைமை தாங்கும் கட்சியில் 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அரசியலமைப்புப் பேரவையின் தமது பிரதிநிதியாக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மின் வலு மற்றும் எரி சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவையே ஜனாதிபதி நியமித்தார்.
சிறிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்ட
20ஆவது அரசியலமைப்புத் திருத்த நகலை எதிர்க்கும் போது மற்றொரு சிறிய கட்சியான ஹெல உறுமய மட்டும் அதனை எப்படியோ நிறைவேற்றிக் கொள்ள பெரு முயற்சி எடுத்தது.
உண்மையிலேயே, வர்த்தமானியில் வெளியிடப்பட்ட தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடந்து ஹெல உறுமய தனித்து போட்டியிட்டால்; ஏனைய சிறிய கட்சிகளுக்கு நேரும் கதியே அக் கட்சிக்கும் நேரும். அவ்வாறாயின் ஹெல உறுமய ஏன் அம் முறையை அமுலுக்கு கொண்டு வர இவ்வளவு முயற்சிக்க வேண்டும்?
சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை தட்டிவிட்டு, குறிப்பாக சிறுபான்மை கட்சிகளை தட்டிவிட்டு ஸ்ரீ.ல.சு.க.வில் இணைந்து அதனை வெற்றிபெறச் செய்து பிரதமர் பதவியை கைப்பற்றிக் கொள்வதற்காகவே அந்த முயற்சி என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதைத் தான் ஹக்கீம் கூறுகிறார் போலும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாகவே மைத்திரிபால தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறப்பிட்டிருந்தார். அவரது
நூறு நாட்கள் வேலைத் திட்டத்திலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டு இருந்தது. கடந்த வருடம் நவம்பர் 21ஆம் திகதி தாம் எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவிப்பதற்காக அவர் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போதும் அவர் அவ்வாறே கூறினார்.
ஆனால், அவரது தேர்தல் பிரசார காலத்தின் இறுதியில் அது நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்து செய்வதாக அன்றி, நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றை குறைப்பதாக மாறிவிட்டது.
மைத்திரிபாலவை ஆதரித்த 49 கட்சிகள் மற்றும் குழுக்களில் ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக ஜனாதிபதியின் சில அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹெல உறுமய மட்டுமே இருந்தது. எனவே, ஹெல உறுமயவின் நெருக்குதலின் காரணமாகவே தேர்தல் வாக்குறுதி மாறியதாக கருத முடியும். அந்தளவுக்கு அக் கட்சிக்கு ஜனாதிபதி மீது செல்வாக்கு செலுத்த முடியும்.
தாம் எதிர்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதியாக வர வேண்டும் என்பதற்காக, சம்பிக்க ரணவக்கவே இந்த மாற்றத்தை செய்தார் என அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கூறியிருந்தார். அதே நபர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து பிரதமராகி ஜனாதிபதி கதிரையை பிடிக்க முயற்சிப்பதாக ஹக்கீம் இப்போது குற்றஞ்சாட்டுகிறார்.
அதற்காக சிறிய மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை ஒதுக்கித் தள்ளிவிடவும் முயற்சிப்பதாக ஹக்கீம் மேலும் கூறுகிறார்.
அவர் அவ்வாறு பிரதமரானாலும் ஜனாதிபதியாவதற்கு சகல சமூகங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும். எனவே, ஒரு புறம் இவ்வாறு சிறுபான்மை கட்சிகளை ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, தமிழ் மக்களை பகைத்துக் கொள்ளும் வகையில் முன்னர் போல் அவர் அண்மைக் காலமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிகிறது. மைத்திரிபால பதவிக்கு வந்தவுடன் புதிய அரசாங்கம் வட பகுதிக்கு அனுப்புவதற்கு தடை செய்யப்பட்ட சில பொருட்களின் அத் தடையை நீக்கியது.
புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஹெல உறுமய இந்த விடயங்களின் போது முன்னர் போல் கூச்சலிடவில்லை.
ஹெல உறுமயவின் திட்டம் பற்றிய இந்த வாதங்கள் உண்மையாக இருப்பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த திட்டங்கள் தற்காலிகமாக முறியடிக்கப்பட்டு இருக்கும். அதேவேளை, அவ்வாறானதோர் திட்டம் இருப்பின் அது மஹிந்தவிடம் செல்லாது இன்னமும் மைத்திரிவுடன் இருக்கும் ஸ்ரீ.ல.சு.க.காரர்களை உஷார்படுத்தும். தாம் புறந்தள்ளப்படுவோம் என்று அவர்கள் உணர்ந்தால் அவர்களும் மஹிந்தவின் பக்கம் செல்லலாம்.
இப்போது மைத்திரிபால பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார். அவர் பதவிக்கு வந்தவுடன் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராகவும் கட்சி ஒழுக்கத்தை மீறி மஹிந்தவுக்கு ஆதரவளித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் ஒருவித தயக்கம் காணப்பட்டது.
இதன் காரணமாக நிறைவேற்று ஜனாதிபதியினாலும் ஸ்ரீ.ல.சு.க.காரர்களிடம் மைத்திரி விடயத்தில் இருந்த பயம் அற்றுப் போய், ஸ்ரீ.ல.சு.க.வுக்குள் மஹிந்தவின் செல்வாக்கு பெருகி பகிரங்கமாகவே மஹிந்தவுக்கு ஆதரவாக பேசும் நிலை இப்போது உருவாகியிருக்கிறது. இப்போது மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுக்க வேண்டும், அவரை பிரதமராக்க வேண்டும் என்ற கருத்து அக்கட்சிக்குள் வலுப்பெற்றுள்ளது.
அந்த வாதத்தில் உண்மை இல்லாமலும் இல்லை. ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தாலும் அத் தேர்தலிலும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வெளியே பல மாவட்டங்களில் மஹிந்தவுக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. ஸ்ரீ.ல.சு.க. பிளவுபடாமல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அந்த வாக்குகளை அக் கட்சி மீண்டும் பெறும்.
நீண்ட காலமாக தேர்தல்களில் தோல்வியடைந்து வந்த காரணத்தால் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்புக்கள் அவ்வளவு பலமானதாக இருக்கும் என நம்ப முடியாது. எனவே, ஸ்ரீ.ல.சு.க. ஒற்றுமையாக போட்டியிட்டால் ஐ.தே.க கஷ்டமானதோர் நிலைமையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
ஆனால், ஸ்ரீ.ல.சு.க. ஐக்கியப்படுமா? மஹிந்தவை உள்வாங்குமாறு நாளுக்கு நாள் அதிகமாக ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்படுகிறார். அவர் அதனை புறக்கணித்தால் கட்சி பிளவு படும். கட்சியை பிளவுபடுத்தியதாக அவருக்கு எதிராக குற்றமும் சுமத்தப்படும். இவற்றுக்கு அவர் வளைந்து கொடுத்தால் கட்சி வெற்றிபெறக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
ஆனால், மைத்திரி தம்மை பதவி நீக்கம் செய்ததை மஹிந்த மறந்துவிட்டு இருப்பார் என்று கருத முடியாது. எனவே, மஹிந்த பிரதமராவது தமது உயிருக்கே ஆபத்து என்பது மைத்திரிக்குத் தெரியும். ஜனாதிபதித் தேர்தலில் தாம் தோல்வியடைந்திருந்தால் இப்போது தாம் ஆறடி நிலத்தடியில் தான் இருப்பேன் என மைத்திரி பல முறை கூறியிருக்கிறார். அண்மையிலும் கூட மஹிந்தவை பிரதமராக்கினால் ஜனாதிபதியாவதற்கு அவருக்கு ஒரு ரவை வீச்சின் தூரம் மட்டுமே இருக்கும் என்றும் மைத்திரி கூறியிருக்கிறார்.
இந்த பாரதூரமான குற்றச்சாட்டுக்களை மஹிந்தவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ இதுவரை மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதாவது, மஹிந்த பிரதமராக இருக்கும் போது மைத்திரிபால இறந்தால் அல்லது கொல்லப்பட்டால் சட்டப்படி மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாவார். 19ஆவது அரசியலமைப்பின் காரணமாக தேர்தல் மூலம் ஜனாதிபதியாவதற்கு மஹிந்தவுக்கு சட்டத்தில் இடமில்லாவிட்டாலும் இவ்வாறு அவர் ஜனாதிபதியாகலாம்.
இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியானால் மஹிந்த தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியாகக் கூடிய முறையில் அரசியலமைப்பை மீண்டும் திருத்திக் கொள்வார்.
இவ்வாறானதோர் அபாயம் இருப்பதாக தாமே கூறும் மைத்திரிபால, மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்குவாரா? அதேவேளை, கட்சிக்குள் இருந்து வரும் நெருக்குதலின் காரணமாக வழங்காமல் இருக்க முடியுமா? அவர் இந்த விடயத்தில் எடுக்கும் முடிவு நாட்டின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago