Thipaan / 2015 ஜூலை 11 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மொஹமட் பாதுஷா
முன்னாள் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியை நோக்கி நடந்து வருவதற்கான தடைகளை அகற்றுவதன் மூலம், நல்லாட்சிக்கான மக்கள் போராட்டத்தை மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு வழிவகுக்கின்றாரா?என்ற நியாயமான அச்சம் குறிப்பாக சிறுபான்மையினரை இன்றைய நாட்களில் வாட்டி வதைக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை சரித்திரத்தில் மிக மோசமான அரச தலைவர் அல்ல. என்றாலும் அவருடைய அதிகார தோரணையிலான அரசியலையும் இனவாதத்தை வளர விட்ட போக்கையும் மக்கள் பெரிதும் விரும்பவில்லை. இதனாலேயே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நல்லாட்சி உருவாகிய பின்னர் மக்களுக்கு ஓர் ஆறுதல் கிடைத்தது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுமதி வழங்கப்படாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கொரு தடவை கூறிவந்தனர்.
ஆனால், பொது மக்கள் யாரும் எதிர்பாராத விதமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மஹிந்த போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பானது, சிறுபான்மை மக்களை தூக்கி வாரிப் போட்டுள்ளது. 19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரான, அதிகாரமுள்ள பிரதமர் பதவி ஒன்றில் அவர் போன்ற ஒருவர் அமர்வதை ஜனநாயக விரும்பிகளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதிருக்கின்றது.
ஆயினும், இந்த அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரை மறுதலிக்கவும் இல்லை, வழிமொழியவும் இல்லை என்பது இவ்விடத்தில் கவனிப்புக்குரிது. இவ்வாறான ஒரு தீர்மானத்தை எட்டுவதற்கு பல்வேறு அழுத்தங்கள், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இருந்ததாக கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த முடிவு சிறுபான்மை மக்களிடையே மட்டுமன்றி நல்லாட்சியில் பங்காளியாகவுள்ள கட்சிகளிடையேயும் கருத்து மோதலை தோற்றுவித்திருக்கின்றது.
குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் கடுமையாக அதிருப்தியுற்றுள்ளனர். எனவே, ஐ.ம.சு.கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மாற்றுத் தீர்மானமொன்றை எடுப்பதற்கான சாத்தியம் இன்னுமிருக்கின்றது.
இவ்வாறானதோர் அரசியல் புறச் சூழல் காரணமாக தமிழர் அரசியல் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை எதிர்கொள்ளவில்லை என்றே கூறினாலும், முஸ்லிம் அரசியல் கடுமையான சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. மஹிந்த, குழுத் தலைவர் (பிரதமர்) வேட்பாளராக களமிறங்கினால் முஸ்லிம் கட்சிகள் எடுக்கின்ற தீர்மானமும் அவர் போட்டியிடாவிட்டால் முஸ்லிம் கட்சிகள் எடுக்கின்ற நிலைப்பாடுகளும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருக்கும்.
ஆனால், சாதுவான முகத்தை வைத்துக் கொண்டு அதிரடியான நடவடிக்கைகள் பலவற்றை நிகழ்த்திக் காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடைசிநேரத்தில் அதிரடி அறிவிப்பு எதையும் வெளியிடலாம் என்ற ஓர் எதிர்பார்ப்பில் தமது இறுதி முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கின்றன.
முஸ்லிம் கட்சிகள்! மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.ம.சு.கூ., சு.க. போன்ற பிரதான கட்சிகளில் இடம் கிடைக்காவிட்டாலும் தனது ஆசைக்காக, ஒரு சிறிய அரசியல் கட்சியின் ஊடாகவேனும் களத்துக்கு வருவார் என்ற அடிப்படையில், எதிர்வரும் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லிம் அரசியல்வாதிகளுள் ஒரு பிரிவினர் இருக்கின்றனர்.
அவர்கள் உண்மையில், முஸ்லிம் அரசியலை செய்வதே கிடையாது என்றே சொல்ல வேண்டும். அவ்வாறானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்வதன் மூலமே அரசியல் பிழைப்பை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களில் அநேகருக்கு தனிப்பட்ட கட்சியோ, அடையாளமோ இல்லை. இப்படியான அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் வாக்குகளை கணிசமாக நம்பியிருப்பதும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை விட்டும் தொலைவில் இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவே, இவ்வாறான அரசியல்வாதிகள் இம்முறை தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பது ஒன்றும் இமயமலை ரகசியமல்ல.
முஸ்லிம் கட்சிகளை வைத்து நடத்திக் கொண்டு இருக்கின்ற தலைவர்களும் அவர்களது கட்சிகளின் நகர்வுகளும் எடுக்கும் தீர்மானம் மிக முக்கியமானதாக அமையும். 'காங்கிரஸ்' என்ற பெயர் வரும் விதத்தில் தம்முடைய கட்சிகளுக்கு பெயரிட்டுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும் தேசிய ஐக்கிய முன்னணி போன்ற ஓரிரு உதிரிக் கட்சிகளும் இதில் உள்ளடங்கும்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ§க்கு முக்கிய இடமுள்ளதை மறுக்க முடியாது. இந்த இடம் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமினால் உருவாக்கப்பட்டதல்ல, அக்கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் கட்டியெழுப்பப்பட்டது.
அவரைப் போல ஒரு தலைவர் முஸ்லிம்களுக்கு இன்று இருந்திருந்தால் அம்மக்களின் நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும். எவ்வாறிருப்பினும் இலங்கையில் முஸ்லிம் அரசியல் என்பது கணிசமாக முஸ்லிம் காங்கிரஸை சார்ந்ததாகவே நோக்கப்படுகின்றது.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு ஆதரவளித்த மு.கா., பிற்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்திருந்தது. மு.கா.வின் விருப்பத்துக்கு மாறாக 20ஆவது திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டமை உச்சக்கட்ட அதிருப்தியை ஏற்படுத்தியது. நல்லாட்சியில் எதிர்பார்த்தது எல்லாம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த மு.கா.வினருக்கு கடைசிக்கட்டத்தில் மனம் வெறுத்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமது பரிந்துரைகளை உள்ளடக்காமல் 20ஆவது திருத்தத்தினை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தால் எதிர்ப்போம் என்று மு.கா. பகிரங்கமாக அறிக்கை விடுமளவுக்கு விரிசல் ஏற்படத் தொடங்கியிருந்தது.
இவ்வாறு மைத்திரி அரசாங்கத்தின் மீது மு.கா. நம்பிக்கை இழந்திருந்த சமயத்திலேயே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதியின் மீள் பிரவேசத்துக்கும் அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றது.
இவ்வாறான ஒரு பின்புலத்தில், சுதந்திரக் கட்சியுடனோ அல்லது ஐ.ம.சு.கூட்டமைப்புடனோ கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிடும் முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்க இயலாது.
மு.கா.வை பொறுத்தமட்டில் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று - தலைவர் ரவூப் ஹக்கீம் எங்கு போட்டியிடுவது என்பது பற்றியது. மற்றையது - கட்சி தனித்தா கூட்டுச் சேர்ந்தா களமிறங்குவது என்பது பற்றியது. கிட்டத்தட்ட 14 வருடங்களாக கட்சித் தலைவராக இருந்து கொண்டு அதில் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்த போதிலும் தனக்கென ஒரு நிலையான வாக்கு வங்கியை இன்னும் உருவாக்காத ஓர் அரசியல்வாதி என்று ஹக்கீமை சொல்லலாம். அந்த வகையில், தலைவர் எங்கு போட்டியிடுவது என்ற பிரச்சினை வழக்கம் போல இம்முறையும் ஏற்பட்டிருக்கின்றது.
ஒருவேளை, மஹிந்த உள்ளே வந்தால் முஸ்லிம்கள் ஐ.ம.சு.கூ.வுக்கு வாக்களிப்பது மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், நல்லாட்சிக்கு வித்திட்ட ஐ.தே.க.வுடன் சேர்ந்தால் மட்டுமே மக்களின் வாக்குகளை கணிசமாக பெற முடியும்.
மாறாக கட்சி தனியே போட்டியிட்டால், கடந்த காலத்தில் மு.கா. என்ற கட்சி தனியே எதனைச் சாதித்தது என்று மக்களிடம் விளக்கிக் கூற வேண்டியிருக்கும்.
அபிவிருத்தி அரசியலில் பக்குவமற்ற செயற்பாடுகள், ஒருசில தொழில்களை வழங்கியதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள் என போராளிகளின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஹக்கீமினால், தனித்து போட்டியிடும் முடிவுக்கு வர முடியாதுள்ளதாக தோன்றுகின்றது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸை உண்மையாக நேசிப்பவர்கள் அக்கட்சியின் தனித்தன்மையையும் பிரத்தியேக அடையாளத்தையுமே விரும்புகின்றனர்.
எனவே, ஐ.தே.க.வுடன் சில இடங்களில் சேர்ந்தும் கிழக்கு மாகாணம் போன்ற சில இடங்களில் தனித்தும் போட்டியிடும் முடிவுக்கு மு.கா. உயர்பீடம் வந்திருக்கின்றது. இதற்கான இறுதித் தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை மாலைநேர தேனீருடனேயே எட்டப்படும் என்ற போதும், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரையும் இது நீடிக்கவும் வாய்ப்பிருக்கின்றது.
இதேவேளை, ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அண்மைக் காலங்கயளில் முஸ்லிம் அரசியலில் முன்னோக்கி காலடி எடுத்து வைத்திருக்கின்றது. மு.கா.வின் இடத்தை ம.கா. பிடிப்பதற்கு காலமெடுக்கும் என்றாலும் அதனை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக வில்பத்து பிரச்சினையை அக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தனி ஆளாக நின்று முகம் கொடுத்தார். இதில் அவரது சொந்த இலாபம் இருக்கின்றது என்ற கருத்து விவாதத்துக்குரியது என்றாலும் அரசியல் என்ற அடிப்படையில் அவர் முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், இம்முறை பொதுத் தேர்தலில் தேசிய அளவில் தமது ஆட்களை நிறுத்துவதற்கு
ரிஷாட் உத்தேசித்திருக்கின்றார். வன்னியிலும் கிழக்கிலும் அவரது பார்வை விழுந்திருக்கின்றது. ஆனால், நாடளாவிய ரீதியில் பிரதேச வாரியான அரசியலில்; மக்கள் காங்கிரஸ் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கின்றது.
தேசியப் பட்டியல் எம்.பி.யாவது கிடைக்கட்டும் என்ற கனவோடு இருக்கின்ற வை.எல்.எஸ். ஹமீட் போன்ற ஓரிருவரை தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியான செயற்பாட்டாளர்கள் கிழக்கில் இக் கட்சிக்கு இல்லை.
இதுவரை கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேச சபை தேர்தலில் கூட போட்டியிடவும் இல்லை, இப்படியிருக்கையில் திடுதிடுப்பென பெரியதொரு தேர்தலில் களமிறங்க கட்சித் தலைமை திட்டங்களை தீட்டுகின்றது. அது தொடர்பான முடிவு இன்று காலை வேளையிலேயே வெளியாகும் சாத்தியமுள்ளது. எவ்வாறாயினும் இத்தீர்மானமானது, இருக்கின்ற முஸ்லிம் வாக்குகளையும் சிதறடிக்கும் விதத்தில் அமையுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இது இவ்வாறிருக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அஞ்சாவாசம் இருந்த தேசிய காங்கிரஸ் கட்சி, இத்தேர்தலில் வழக்கமான வியூகத்தை புதுவடிவில் வகுத்திருக்கின்றது. முன்னாள் ஜனாதிபதியின் விசுவாசியான அக்கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, மைத்திரி அரசில் சேர்வதற்கு ஆரம்பத்தில் சிறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருப்பினும் மஹிந்த மீண்டும் பலம்பெறும் சாத்தியம் இருந்ததால் அந்த ஆசையை அப்படியே அடக்கி வைத்து விட்டு காலம் கனியும் வரை காத்திருந்தார்.
இப்போது மஹிந்த ராஜபக்ஷ களமிறங்குவதால் அதாவுல்லாவுக்கு காலம் கனிந்திருக்கின்றது. சுதந்திரக் கட்சியின் சார்பிலோ அல்லது ஐ.ம.சு.முன்னணியிலோ அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தில் போட்டியிட அவரது அணியை விட்டால் வேறு முஸ்லிம் அமைச்சர்கள் இல்லை.
இதனால் தேசிய காங்கிரஸ் சார்பில் மூவரை களமிறக்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபிவிருத்தி அரசியலில் நிறைய சேவை புரிந்துள்ள அதாவுல்லா, உரிமை அரசியலில் மிகவும் மிளிரவில்லை என்பதால் இந்த தேர்தல் அவருக்கு சற்று சவாலாக அமையக் கூடும்.
எவ்வாறிருப்பினும், அவரது சேவைகளும் நூற்றுக்கணக்கானோருக்கு அவர் வழங்கிய தொழில்வாய்ப்புக்களும் குறைந்தபட்சம் அவருடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாக்கும் என்று எதிர்பார்;க்கலாம். போகின்ற போக்கைப் பார்த்தால் சுதந்திரக்கட்சிக்கு அல்லது ஐ.ம.சு.கூ.வுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டால் ஜனாதிபதியின் ஆசீர்வாதம் அதாவுல்லாவுக்கு கிடைத்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
எது எப்படியோ மாற்றத்துக்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த தடுமாற்றம் அடங்க இன்னும் காலமெடுக்கும். அந்த தடுமாற்றத்தில் தங்கள் கட்சிகளுக்கு இடையிலான போட்டி, பொறாமையின் காரணமாக ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக மக்களை பிளவுபடுத்தும் கைங்கரியத்தை எந்த நல்ல முஸ்லிம் தலைமையும் செய்யாதிருக்கும் வகையில் இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும்.
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago