2025 மே 05, திங்கட்கிழமை

‘அங்கிள்’ அரசியல்

Johnsan Bastiampillai   / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

 

 

 

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை - 05

 

சுதந்திர இலங்கையின் பிரதான அரசியல் கட்சியாக அறியப்படும் ஐக்கிய தேசிய கட்சியை, ‘அங்கிள்’ அரசியல் நடத்தும் கட்சி என்று கேலி செய்வதுண்டு. அக்கூற்று நியாயமானது என்பதை நிறுவும் வகையிலேயே, அக்கட்சியின் வரலாறு அமைந்துள்ளது.

சேனாநாயக்காக்கள், கொத்தலாவலகள், ஜெயவர்தனாக்கள் என்று மூன்று குடும்பங்களுக்கும் உள்ளேயே கட்சியின் அதிகாரம் சுற்றிச் சுழல்கிறது. அதன் பொருள், இம்மூன்று குடும்பங்களுக்குள்ளும் முரண்பாடுகள் இல்லை என்பதல்ல. இம்மூன்று குடும்பங்களுக்கும் இடையிலான அதிகார மோதலே, ஐ.தே.கவின் வரலாறு என்பதுதான் துயரம்மிகு உண்மை. இலங்கை அரசியல் ‘மாமனார்-மருமகன்’ அரசியலில் இருந்து, குடும்ப அரசியலாக இன்று வளர்ச்சி கண்டுள்ளது.

இந்த நோய் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளையும் பீடித்துள்ளது.
1970க்குப் பின்னர், ஆர். பிரேமதாஸவின் எழுச்சியே ஐ.தே.கவில் இக்குடும்பங்களின் அதிகாரத்தைக் கேள்விக்கு உட்படுத்தியது. மேட்டுக்குடி உயர்வர்க்க அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இக்குடும்ப அரசியல் தலைவர்களுக்கு நேர்மாறாக, அடித்தட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரேமதாஸ, தனது அரசியலைக் கட்டியெழுப்பினார். அதனாலேயே அவரால் மேட்டுக்குடிகளுடன் போட்டியிட்டு வெல்ல முடிந்தது.

ஐ.தே.கவின் உருவாக்கம், இலங்கையில் வளர்ந்து கொண்டிருந்த தொழிற்சங்க, இடதுசாரி அரசியலுக்கு எதிரான, மேட்டுக்குடிகளின் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கான ஒரு செயற்பாடாகவே நோக்க வேண்டியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் பின்னரான பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் சரிவு, மூன்றாமுலக நாடுகள்  பலவற்றில் தொடங்கிய கொலனியாதிக்கத்துக்கு எதிரான விடுதலைப் போராட்டங்கள், இலங்கையையும் பாதிக்கும் என்பதை மேட்டுக்குடிகள் அறிந்திருந்தார்கள். இந்நிலையிலேயே ஆட்சியதிகாரத்தை பிரித்தானியர்களிடமிருந்து தங்கள் கைகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு வசதியாகவே ஐ.தே.க உருவானது.

1919ஆம் ஆண்டு, இலங்கைக்கான முதலாவது அரசியல் குழுமமாக இலங்கை தேசிய காங்கிரஸ் உருவானது. இதன் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் பொன். அருணாச்சலம். அவரே, இதன் முதல் தலைவராகவும் இருந்தார். முற்போக்கான சிந்தனை கொண்ட இவர், அனைத்து இன மக்களுக்கான ஓர் அமைப்பாக இலங்கை தேசிய காங்கிரஸை வளர்த்தெடுக்க விரும்பினார்.

இதன் உருவாக்கத்தை மிகுந்த அச்சத்துடன் நோக்கிய ஆளுநர் வில்லியம் மனிங், பிரித்தாளும் தந்திரத்தின் ஒரு பகுதியாக, அரசியலமைப்புத் திருத்தத்தில் பிரதிநிதித்துவத்தை இனத்துவ அடிப்படையில் முன்மொழிந்தார். கண்டிய சிங்களவர்களில் ஒரு பகுதியினரும் தமிழரில் ஒரு பகுதியனரும் இதை விரும்பினர். ஆனால், இதை அருணாச்சலம் விரும்பவில்லை; ஆதலால் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், 1921ஆம் ஆண்டு தேர்தலில் அருணாச்சலம் தோற்கடிக்கப்பட்டார். இதை, சிங்கள - தமிழ் இனத்துவ முரண்பாட்டின் முதன்மையான தொடக்கப்புள்ளி என்று கொள்ளவியலும்.

தோல்வியைத் தொடர்ந்து, இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்து அருணாச்சலம் விலகினார். இது, இலங்கை தேசிய காங்கிரஸின் முடிவின் தொடக்கமாயிற்று. இலங்கை தேசிய காங்கிரஸ், கொலனியாதிக்கவாதிகளுடன் பெயரளவிலேனும் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை தேசிய காங்கிரஸில் டி.எஸ்.சேனாநாயக்க  இருந்த போதும், அதில் முதன்மையான பாத்திரத்தை வகிக்கவில்லை. ஒருவேளை சுதந்திரம் கிடைத்தால், அதிகாரக் கைமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், இலங்கை தேசிய காங்கிரஸ் உடனேயே நிகழும் என அவர் அஞ்சினார். இதனால், இதிலிருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்கி, பிரித்தானியருடன் ஊடாட விரும்பினார்.

ஆனால், இலங்கை தேசிய காங்கிரஸூக்கு இருந்த செல்வாக்கு காரணமான, அவரால் அதைச் செய்ய முடியவில்லை. இந்நிலையில், இலங்கை தேசிய காங்கிரஸ் இதுவரைக் கோரி வந்த, ‘இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்து’  என்ற நிலையில் இருந்து, பூரண சுதந்திரத் கோரிக்கையை முன்வைப்பது என்று முடிவுசெய்தது. இதை டி.எஸ் சேனாநாயக்க எதிர்த்தார்.

இதை எதிர்ப்பது, பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் தனக்கு நற்பெயரை உருவாக்கும் என அவர் அறிந்திருந்தார். ஆனால், இதை வெளிப்படையாக அறிவிக்காமல், இலங்கை தேசிய காங்கிரஸில் கம்யூனிஸ்டுகளை உள்ளீர்க்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து, தான் காங்கிரஸில் இருந்து விலகுவதாக 1943 டிசெம்பர் மாதம் 21ஆம் திகதி அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாகவே, டி.எஸ். சேனாநாயக்க ‘‘சிங்கள மகா சபை’ என்ற அமைப்பை வைத்திருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, முஸ்லிம் லீக் அமைப்பை வைத்திருந்த டி.பி. ஜெயா ஆகியோருடன் இணைந்து, 1946இல் ஐக்கிய தேசிய கட்சியை உருவாக்கினார்.

அப்போது, டி.எஸ்ஸூக்கு  அடுத்தபடியாக, கட்சியின் தலைமைப் பதவி தனக்கே என பண்டாரநாயக்க எதிர்பார்த்தார். காலப்போக்கில் கட்சியில் பதவிகள், சேனாநாயக்க குடும்பத்தாரைச் சுற்றியே இருப்பதை உணர்ந்து கொண்டார். ஐ.தே.கவில் பண்டாரநாயக்க சேரும்போது, சிங்கள மகா சபையைக் கலைக்கும்படி டி.எஸ் கேட்டிருந்தார். அதற்கு உடன்பட்டபோதும், அவர் அதைக் கலைக்கவில்லை. கட்சியில் தனக்கான இருப்பு கேள்விக்குறியாவதை உணர்ந்த நிலையில், சிங்கள மகா சபையை மீள ஒழுங்குபடுத்தத் தொடங்கினார்.

தனக்கு மறைமுகமான சவால் உருவாவதை அறிந்த டி.எஸ், இதைக் கையாளத் தனது மருமகனான ஜோன் கொத்தலாவலவை பயன்படுத்தினார். 1949ஆம் ஆண்டு ஓகஸ்ட் எட்டாம் திகதி இரவு, கட்சியின் செயற்குழுக் கூட்டம் அலரிமாளிகையில் டி.எஸ் தலைமையில் தொடங்கியது. அதில், நிகழ்ச்சி நிரலின் முதல் அம்சமாக, அன்று ‘Times of Ceylon’ பத்திரிகையில் வெளியான செய்திக்குறிப்பு பற்றிய கவனத்தை கொத்தலாவல வேண்டினார்.

அச்செய்தியில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக, சிங்கள மகாசபைக் கூட்டத்தில் பண்டாரநாயக்க பேசினார் என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார். அன்றைய கூட்டத்துக்கு பண்டாரநாயக்க தாமதமாகவே வந்தார். குறித்த விடயம் விவாதிக்கப்படும் போது, அவர் அங்கிருக்கவில்லை. இவ்வாறு தொடங்கிய மோதல்கள், 1951ஆம் ஆண்டு ஜூலையில் பண்டாநாயக்கவின் வெளியேற்றத்துக்கு வழியமைத்தன. 

இவ்வெளியேற்றம், கொத்தலாவலவை கட்சியின் இரண்டாவது நிலைக்குக் கொண்டுவந்தது. டி.எஸ்க்குப் பின்னர் அடுத்த தலைவராக, தனது மாமனைத் தொடர்வதற்கு தயாராக இருந்தார் ஜோன் கொத்தலாவல.

ஆனால், 1952இல் டி.எஸ்ஸின் மரணத்தைத் தொடர்ந்து அரங்கேறிய காட்சிகள், ஒரு திரைப்படத்தை ஒத்தவை. டி.எஸ் இறக்கும்போது, ஆளுநர் நாயகமாக  இருந்த விஸ்கவுண்ட் சோல்பரி, இலங்கையில் இருக்கவில்லை. அவர் இலங்கையில் இருந்து புறப்பட்டபோது, பதில் கடமையாற்றும் அலன் ரோஸிடம் ஒரு செய்தியைத் தெரிவித்திருந்தார். “ஒருவேளை நான் திரும்புவதற்கிடையில் பிரதமர் பதவி வெற்றிடமானால், நான் திரும்பும்வரை எதுவித நடவடிக்கையும் நடைபெறக் கூடாது. பிரதமர், நான் இல்லாதவிடத்து அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை, டட்லி சேனாநாயக்கவிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கிறார்” என்பதுவே அச்செய்தியாகும்.

டி.எஸ்ஸின் மரணத்தைத் தொடர்ந்து அவசர கூட்டமொன்றைக் கூட்டி, குறித்த செய்தியை அலன் ரோஸ் தெரிவித்தார். இத்தகவலைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிடுவதாக அறிவித்தார். இச்செய்தியை, பத்திரிகைகளுக்கு அறிவிப்பதை கொத்தலாவல எதிர்த்தார். கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தது. அதைத் தொடர்ந்து நடந்தவை, இலங்கை அரசியல் வரலாற்றின் மறைக்கப்பட்ட சில முக்கியமான பக்கங்கள். இறுதியில் டி.எஸ்ஸின் நெருங்கிய நண்பரான ஆளுநர் நாயகம் சோல்பரி, ஆட்சியமைக்க டட்லியை அழைத்தார்.

1952ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வாராந்தப் பத்திரிகையான Trine தொடராக ஓர் ஆவணத்தை வெளியிட்டது. ‘Premier Stakes  1952’ என்று தலைப்பிடப்பட்ட ஆவணம், இலங்கை அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இவ்வாவணம், டி.எஸ்ஸின் மறைவையொட்டி நிகழ்ந்த அதிகாரப் போட்டியை காலவரிசைப்படியும் முழுமையாகவும் பதிவிடுகிறது. தனக்குப் பின்னர், தனது மகனுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு என்னென்ன திட்டங்களையெல்லாம் டி.எஸ். தீட்டியிருந்தார் போன்ற பல தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தனது மாமாவால் வஞ்சிக்கப்பட்ட கொத்தலாவல, 1953இல் டட்லி பதவி விலகிய பின்னர் பிரதமரானார். கட்சியின் தலைமைப் பதவியும் இவருக்குக் கிடைத்தது. 1956இல் ஐ.தே.க தேர்தலில் தோல்வியடைந்தது.

ஆனால், கொத்தலாவல தனது ஆசனத்தைப் பெற்றிருந்தார். அரசியலுக்கு மீண்ட டட்லிக்கு, கட்சியின் தலைமைப் பதவியைக் கொடுத்த கொத்தலாவல, அரசியலில் இருந்து ஒதுங்கி, பிரித்தானியா வில் உள்ள தனது பங்களாவுக்குச் சென்றுவிட்டார்.

1967இல் ஆளு‌நர் நாயகமாக இருந்த வில்லியம் கொபல்லவாவின் முதலாவது பதவிக்காலம் முடிந்த நிலையில், அப்பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து, கொத்தலாவல நாடு திரும்பினார், ஆனால், இரண்டாவது தடவையும் அப்பதவியில் கொபல்லவ தொடர டட்லி அனுமதித்தார். அதற்கொரு காரணமிருந்தது. இது, கொத்தலாவலவுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகியது. ஆனால், இக்காலத்தில் ‘அங்கிள்’ அரசியல், ஐக்கிய தேசிய கட்சியை மட்டுமல்ல, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் தொற்றிக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X