Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜனவரி 20 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்ணனின் குசினியும் தம்பியின் குப்பையும் வெற்றுக் கடதாசியும்
நாடோடி
புத்தாண்டுக்குப் பின்னர், ஜனவரி 18ஆம் திகதியன்று இடம்பெற்ற இரண்டு சம்பவங்கள், கொழும்பு அரசியலில் பேசும் பொருளாகியது. ஒன்று, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரை.
மற்றொன்று, தமிழ்பேசும் கட்சிகளால் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்பட்ட கடிதமாகும்.
இலங்கை அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி, 13ற்கும் அப்பாலான அதிகாரப் பரவலாக்கத்தைக் கோருவதே, கடிதத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும் கடிதத்தின் உள்ளடக்கம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதில், கையொப்பமிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஏதாவது கசியவிட்டாலொழிய, உள் இருப்பவற்றை ஊகிக்கவே முடியும்.
இல்லையேல், இந்தியப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டதன் பின்னர், இந்திய ஊடகங்களால் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதுவரையிலும், அக்கடித்தில் எவ்வாறான விடங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் அச்சொட்டாகக் கூறமுடியாது.
எனினும், “எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை; இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என அமைச்சர் உதய கம்மன்பில எடுத்த எடுப்பிலேயே நிராகரித்துவிட்டார்.
வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து, இவ்வாறு பதிலொன்றை அளித்திருப்பதன் ஊடாக, அதனை அரசாங்கத்தின் பதிலாக எடுத்துக்கொள்ள முடியும். அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், அமைச்சரவை இணைப்பேச்சாளர்களில் ஒருவர் ஆகையால், அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பின் கீழ், கம்மன்பிலவின் பதிலை அரசாங்கத்தின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ளமுடியும்.
பிரதமர் மோடிக்கான கடிதம் பகிரங்கப்படுத்தப்படும் வரையிலும் அதனை ‘வெற்றுக்கடதாசி’ எனக் விளிப்பதில் எவ்விதமான தவறுகளும் இருக்கமுடியாது. மூடிய உறைக்குள் இருப்பவற்றை, வெளிப்படுத்தி, மக்களிடத்தில் விவாதிப்பதற்கான கருப்பொருளை திறந்துக்காட்டுவது அத்தரப்பினரின் பொறுப்பாகும்.
மோடிக்கான கடிதத்தை தயாரித்த தலைவர்களில் மிக முக்கியமானவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளார். அவரே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய அக்கிராசன உரையை ‘வெறும் குப்பை’ என வியாக்கியானம் செய்துள்ளார்.
தமிழர்களின், தமிழ் மொழி பேசுவோரின் பிரச்சினைகளுக்கு இப்புத்தாண்டிலாவது தீர்வு கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணங்களில், மண்ணை வாரியிறைத்தாற் போல, எதையும் அதிரடியாகக் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்கும் டிஜிட்டல் கேபிள்களை பற்றி அதிகம் பேசியிருந்தார் ஜனாதிபதி. பழைய பல்லவியை அப்படியே ஒப்புவிப்பதைப் போல, மக்கள் சார்பான அரசியலமைப்பை உருவாக்குவதற்காக குழுவொன்று நிமிக்கப்பட்டுள்ளது எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அதனை கிண்டல், செய்திருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “உங்கள் இனப்பிரச்சினையையும் கடலுக்கு அடியில் புதைக்கப் போகிறாரோ” என, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேலியாகக் கேட்டிருந்தார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது இழுத்தடிப்புச் செய்வதில், மிகச் சிறந்த தலைவர்களில் ரணிலும் ஒருவர்; மைத்திரி- ரணிலின் நல்லாட்சியின் போது, வடக்குக் கிழக்குத் பிரதேசங்களில், சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை அத்துமீறி வைத்தல், விஹாரைகளைக் கட்டுதல், காணிகளை அபகரித்தல், சொச்சமாக விடுவித்தல் என எல்லா வகையான தமிழர் விரோதப் போக்குகளும் மிக நாசுக்காக முன்னெடுக்கப்பட்டன.
அப்போதெல்லாம், தமிழ்த் தரப்பினர் களத்துக்குள் முழுமையாக இறங்கி, எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை. ஆனால், இவ்வரசாங்கம் மேற்கூறிய அபகரிப்புகளை பகிரங்கமாகவே செய்கின்றது. தமிழ்த் தரப்பினரும் களத்தில் இறங்கி பகிரங்கமாக எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன.
“யுத்தத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது. ஆதலால், அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்துவிட்டு, உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் (வடக்கு, கிழக்கு பிரதிநிதிகள்) உங்களது ஆதரவினை வழங்க வேண்டும்” என ஜனாதிபதி, தனது அக்கிராசன உரையின் ஊடாக கோரியிருந்தார்.
இதேபோலதான், முன்னாள் அமைச்சராக இருந்த அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் அழைப்பின் பேரில், 2003 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த, அந்நாள் எதிர்க்கட்சித் தலைவராக பதவியிலிருந்த இந்நாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் தீர்வு விவகாரத்தை தென்பகுதிச் சிங்கள மக்களின் குசினிப் பிரச்சினையோடு ஒப்பிட்டுக் கேலியாகப் பேசியிருந்தமை பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும்.
ஆக, பெரும்பான்மை இனத்தை கொண்டிருக்கும் எந்தவோர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிப்படையாகத் தீர்வு எதையும் வழங்காது என்பது மட்டுமே நிதர்சனமாகும்.
ஆக, அரசியல் தீர்வை, அண்ணன் குசினியோடு தீர்க்கவும், தம்பி வாழ்வாதார பிரச்சினையுடன் முடிச்சு போட்டுவிடவும் முயன்றுள்ளனர். இதற்கு முன்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அழைப்பு விடுத்திருந்தார். எனினும், அதற்கான திகதி இன்னுமே குறிக்கப்படவில்லை என்பதுதான் வெட்கக்கேடான விடயமாகும்.
ஜனாதிபதியின் இச்செயற்பாட்டை கடுமையாக விமர்சித்திருந்த, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, “கதவை மூடிவைத்துக்கொண்டு விருந்துக்கு அழைப்பதில் என்ன பிரயோசனம்” என கடிந்துகொண்டிருந்தார்.
மோடிக்காக தயாரிக்கப்பட்ட கடிதத்தை மும்மொழிகளிலும் தயாரித்து, ஏககாலத்தில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருந்தால், இன்றேல் பகிரங்கப்படுத்தியிருந்தால் பெரும்பான்மை சமூகத்தின் சந்தேகத்தை களைந்திருக்கலாம்.
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான அணி, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தமையை, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிந்திராமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இராஜதந்திரிகளும் பிரதிநிதிகளும் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்த நிலையிலேயே, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தை பொருளாதாரப் பிரச்சினையாக சித்திரித்திருக்கின்றார் ஜனாதிபதி கோட்டாபய.
வல்லரசுகளுக்கு இடையிலான மோதலில் சிக்கிக்கொள்ளாமல், சகல நாடுகளுடனும் நட்புறவுடன் பயணிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்திருக்கின்றார். நாங்கள் முந்திக்கொள்ளவேண்டும் என இந்தியாவும் வளங்களை இழுத்துப் போட்டுக்கொள்வதில் சீனாவும், ‘நான்முந்தி, நீ முந்தி’யென முண்டியடித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ் தரப்பினரின் கடிதத்தை இந்தியா எளிதில் அம்பலப்படுத்தாது.
அரசாங்கத்தை கைக்குள் வளைத்துப் போட்டுக்கொண்டும், கடன்களைக் கொடுத்தும், நன்கொடைகளை வழங்கியும் கூடுதலாக தம்பக்கம் வைத்துக்கொள்வதற்கே இந்தியா காய்களை நகர்த்தும். அதனைவிடவும் வேறு இராஜதந்திரங்களை கையாளமுடியாது. அதுவரையிலும், தேசிய பிரச்சினைக்கான தீர்வு அண்ணாவின் குசினியாகவும் தம்பியின் குப்பையாகவும் இருக்கும்; தமிழ்த் தரப்பின் கடிதம் வெற்றுக் கடதாசியாகதான் இருக்கும். (20.01.2021)
44 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago