2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அப்படி எதுவும் நடக்காது’

Editorial   / 2022 ஜனவரி 05 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இரு பிரதான முஸ்லிம் கட்சிகள் சார்பான முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்து, ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக, தகவலொன்று இப்போது உலாவ விடப்பட்டுள்ளது. இவர்கள் ஆளும் தரப்புக்கு ஆதரவளிக்கப் போவதாக அல்லது, அதற்காகவே இந்தக் கூட்டணி உருவாக்கப்படப் போவதாகவும் கூறப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல் பெருவெளியில், ‘முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி’, ‘முஸ்லிம் கூட்டமைப்பு’, ‘தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பு’ என்ற கருத்தியல்கள் நீண்டகாலமாவே பேசப்பட்டு வருகின்றன. சிலவேளைகளில் இதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

ஆனால், ‘தண்ணீருக்கு ஒன்றும் தவிட்டுக்கு ஒன்றும் ஓடுகின்ற’ அரசியல்வாதிகளாலும், எல்லோருக்கும் பதவியும் பணமும் தேவைப்பட்டதாலும், மேற்சொன்ன எல்லாக் கூட்டணிகளும், தேர்தல் கூட்டுகளாகவும் அரசியல் கூத்துகளாகவும்தான் இருந்தன.

அதைவிடுத்து, இவற்றால் முஸ்லிம் சமூகத்துக்கு எந்தவோர் அனுகூலமும் கிடைக்கவில்லை. தலைவர் பதவி, எம்.பி பதவி, அமைச்சுப் பதவி போன்றவற்றுக்கு பின்னால் சென்றுகொண்டு, மக்களின் நல்வாழ்வுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், சமூகத்துக்காகச் சிந்திக்காத வரை, முஸ்லிம் சமூகத்துக்கு நன்மைகள் கிடைக்கப் போவதும் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இந்தச் சூழலிலேயே, இப்போது முஸ்லிம் காங்கிரஸையும் மக்கள் காங்கிரஸையும் உள்ளடக்கியதாக, கூட்டணியை உருவாக்க முஸ்தீபுகள் நடப்பதாக, செய்தி வெளியாகியிருக்கின்றது. ஆனால், விசாரித்துப் பார்த்ததில், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

உண்மையில், முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில், மக்கள் எதிர்பார்க்கும் விதத்திலான கூட்டணி உருவாவதற்கான சாத்தியம் இல்லை. அப்படி அமைந்தாலும், ஒரு வருடம் அல்லது அடுத்த தேர்தலோடு அது முடிந்து விடும்.

ஆனால், அதற்கான முயற்சிகள் நடப்பதற்கு நிறையவே வாய்ப்புள்ளன; காரண காரியங்களும் உள்ளன. இதைப் புரிந்து கொள்வதற்கு, இன்றைய அரசியல் சூழலைக் கவனமாக நோக்க வேண்டியுள்ளது.

அரசாங்கம், கடுமையான ஆளுகைசார் தோல்விகளைச் சந்தித்துள்ளது மட்டுமன்றி, உள்ளக முரண்பாடுகளும் உச்சத்தைத் தொட்டுள்ளன. ஏற்கெனவே முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான எம்.பிக்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்தது முதற்கொண்டு, தொடர்ந்தும் அரசாங்கத்துடனேயே இருக்கின்றனர்.

இவ்விரு கட்சிகளின் எம்.பிக்களில் (தலைவர்கள் உட்பட) ஐந்து பேர் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டவர்கள். முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நஸீர் அஹமட்டும் மக்கள் காங்கிரஸ் சார்பில் முசாரப்பும் மட்டுமே அந்தந்தக் கட்சிகளின் நேரடி உறுப்பினர்களாவர்.

இப்போது, இவர்கள் எல்லோருக்கும் எதிராக, தலைவர்களான ஹக்கீமும் ரிஷாட்டும், ஒழுக்காற்று நடவடிக்கையை, ஆமை வேகத்தில் எடுத்துள்ளனர்; அல்லது, அவ்வாறான ‘படம்’ ஒன்றைக் காட்டுகின்றனர்.

சமகாலத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் சார்பாக அதன் தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி ஆகியோர், தமிழ்க் கட்சிகள் நடத்தி வருகின்ற சந்திப்புகளில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா ஊடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பொது ஆவணத்தில், முஸ்லிம் கட்சிகளும் ஒப்பமிடப் போவதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், முஸ்லிம்களின் அபிலாஷைகள் உள்ளடக்கப்பட்டிராத ஓர் ஆவணத்தில், முஸ்லிம் கட்சிகள் ஒப்பமிட முடியாது.

அதன்படி, இரு முஸ்லிம் கட்சிகளும் இதில் ஒப்பிடுவதற்குத் தடுமாறுவதுடன், சற்றுக் காலம் தள்ளிவைத்து, அதுபற்றி மீள் பரிசீலனை செய்யவுள்ளதாகவும் தெரிகின்றது. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஒப்பமிடவில்லை என்றால் கூட, தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றிணைந்திருப்பது பெருந்தேசியத்துக்கு மகிழ்ச்சியான செய்தியல்ல என்பது, இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

இந்த வேளையிலேயே, முஸ்லிம் கட்சிகளின் எம்.பிக்கள் ஒன்றிணைந்து, ஒரு கூட்டணியை அமைக்கப் போவதாக கதையொன்று உலாவுகின்றது. உண்மையில், அதற்கான முயற்சிகள் நடக்கலாம்; அல்லது, மேற்குறிப்பிட்ட களச் சூழலைக் குழப்புவதற்காகத் திட்டமிட்டுக் கிளப்பி விடப்பட்ட ஒரு புனைகதையாகவும் இருக்க வாய்ப்புண்டு.

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகள் கீரியும் பாம்புமாக இருப்பார்கள். ஆனால், தேசிய முக்கியத்துவம்மிக்க விவகாரங்களில் ஹக்கீமும் ரிஷாட்டும் கிட்டத்தட்ட ஒருமித்த நிலைப்பாட்டையே எடுத்து வருவதைக் காண முடிகின்றது.

அதுபோல, தலைவர்கள் தவிர்த்த ஏனைய ஐந்து எம்.பிக்களும் அரசாங்கத்துக்கு ‘கூஜா’ தூக்கும் விடயத்தில், இப்போது ஒருமித்த நிகழ்ச்சி நிரலிலேயே இயங்குவதாகவும் தெரிகின்றது. இரண்டு கட்சிகளைச் சார்ந்தவர்களிடையே ஒரு ‘நிழல் கூட்டணி’ இயங்கிக் கொண்டு இருப்பதாகவும் சொல்ல முடியும்.

அத்துடன், எம்.பிக்களில் ஆத்திரமடைந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதான ஒரு தோற்றப்பாட்டை தலைவர்கள் ஏற்படுத்தி இருந்தாலும், திரைமறைவில் எல்லோரும் ஒரு குடையின் கீழ்தான் இருக்கின்றார்கள். 

இவ்வாறான சூழ்நிலையில், இவ்விரு முஸ்லிம் கட்சிகளும் இணைந்து, ஒரு கூட்டணியை அமைக்கத்தான் வேண்டும் என்பதில்லை. அவ்வாறு அமைத்தாலும், அது நிச்சயமாக சமூகம் சார்ந்ததாக இருக்க மாட்டாது. முட்டுக் கொடுத்துவிட்டு, கிடைப்பதை சுருட்டிக் கொள்ளும் ஓர் உத்தியாகவே அமையும்.

ஒரு காலத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்த தமிழ் ஆயுத மற்றும் அரசியல் இயக்கங்கள், மக்கள் நலனை முன்னிறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றன. அவர்களால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை இன்னும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பது உண்மையே.

இருந்த போதிலும், தமது இனத்தின் பிரச்சினைகளை, விருப்பு வெறுப்புகளை சர்வதேச மயப்படுத்துவதிலும் முன்கொண்டு செல்வதிலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

இதனை முன்மாதிரியாகக் கொண்டு, இதனைவிடவும் சிறப்பான ஒரு கட்டமைப்புடன், முஸ்லிம் அரசியல் அணிகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற அவா, முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் ஓரீர் ஊடகவியலாளர்களுக்கும், நீண்டகாலமாக இருந்து வருகின்றது.

இதற்கான கருத்தியல் முன்வைப்புகளும் முயற்சிகளும் பல தடவைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வரிசையில் கடைசியாக, மூன்று வருடங்களுக்கு முன்னர், முஸ்லிம் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

முஸ்லிம் காங்கிரஸூம் தேசிய காங்கிரஸூம் இதில் இணைய விரும்பவில்லை. மக்கள் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு என்ற சிறு கட்சியுடன் இணைந்து, ஒரு கூட்டமைப்பை உருவாக்கியது. ‘ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இக் கூட்டமைப்பு, ஒரு தேர்தலோடு தூர்ந்து போனது என்பதே நிதர்சனமாகும். 

முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் கொண்டுவந்து, அதன்மூலம் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தேட வேண்டும் என்ற தேவை இப்போதும் இருக்கின்றது. ஆனால், முஸ்லிம் அரசியல் அணிகள் ஒன்றுபட வேண்டும் என்ற தீராத ஆசை, மக்களுக்கு இன்னும் நிறைவேறவில்லை.

ஆனால், முஸ்லிம் மக்களும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்களும் எதிர்பார்ப்பது போன்ற, மக்கள் நலனை மையப்படுத்திய கூட்டமைப்போ, கூட்டணியோ சாத்தியமில்லை. அப்படிச் சொல்லித்தான் அவர்கள் ஆரம்பித்தாலும், அப்படி எதுவும் நடக்காது. ஏனெனில், இன்று இருக்கின்ற முஸ்லிம் அரசியல் சூழ்நிலை, அப்படிப்பட்டதாக இருக்கின்றது. முஸ்லிம் மக்களும் அப்படித்தான் இருக்கின்றார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் என்கின்ற ஒரு புள்ளியில், முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் சந்திப்பார்கள் என்றால் மட்டுமே,  ஒருமித்த கட்டமைவுடன் செயற்படுவார்கள் என்றால் மாத்திரமே, முஸ்லிம் கூட்டமைப்பு பற்றிச் சிந்திக்கலாம். 

ஆனால், முஸ்லிம் அரசியலில் அதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது. எல்லோருக்கும் தலைவராக, செயலாளராக இருக்க வேண்டும் என்ற வேட்கைதான் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் அதன் ஊடான வருவாய்களும் அவசியமாகியுள்ளன. அமைச்சுப் பதவிகளுக்காக எதையும் செய்யத் தயாராக உள்ளனர்.

மக்களின் பிரச்சினைகள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, தங்களுடைய ‘கல்லாப் பெட்டி’ நிரம்பியிருக்க வேண்டும். அடுத்த முறையும் எம்.பியாக வரவேண்டும். அதற்காக எந்தப் ‘படத்தையும்’ காட்டுவதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

தேர்தல் வந்தால், கட்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டும், உணர்ச்சி அரசியலைப் பேசியும், இனவாதத்தைச் சுட்டிக்காட்டியும் வாக்குகளைக் கொள்ளையடிப்பது எப்படி என்பதை மட்டும், முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்றாகக் கற்றுக் கொண்டுள்ளனர். மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம், அவர்களுக்குக் கிடையவே கிடையாது.

ஆகவே ஒரு விடயம் மட்டும் தெளிவானது!

அதாவது, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளைப் பெருந்தேசியத்திடம் ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்லப் போவதாகக் கூறி, மக்களைப் பேய்க்காட்டி, ஒரு கூட்டு அமைக்கப்படலாமே தவிர, அந்தக் கூட்டு, முஸ்லிம் சமூகத்தின் நலனை முன்னிறுத்திய ஓர் அரசியல் கூட்டமைப்பாக இருக்காது.

அந்தக் கூட்டணி, தமது சொந்தப் பேரம்பேசல்களை மனதில் வைத்துக் கொண்டு செயற்படுமே தவிர, இதன்மூலம் முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால, குறுங்கால பிரச்சினைகள் எதுவும் தீர்ந்து விடும் என்று நம்பத் தேவையும் இல்லை.

முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்னிறுத்திய முஸ்லிம் கூட்டமைப்பு என்பது, நீண்டகாலமாக நிரப்பப்படாத இடைவெளிதான் என்பதை மறுக்கவில்லை. 

ஆனால், இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பற்றிய மக்களின் பட்டறிவின் பிரகாரம், அப்படியான அபூர்வங்கள் எதுவும் நடப்பதற்கான நிகழ்தகவுகள் இல்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .