2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம்: மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா?

Johnsan Bastiampillai   / 2022 ஏப்ரல் 28 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கும், தமக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார சுமைக்கும் அவசரமான தீர்வைக் காணுமாறு, நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், அதற்கான உடனடி வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதை ஒருபுறம் வைத்துவிட்டு, அரசியலமைப்பை இன்னுமொரு தடவை திருத்துவது தொடர்பான விடயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதை காணக் கூடியதாகவுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் சிபாரிசுகளை மீளக்கொண்டு வருவதுடன், அதனூடாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்கப் போவதாக, பிரதான எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம், தாம் கொண்டு வந்த 20ஆவது திருத்தமே, அநேகமான நெருக்கடிகளுக்குக் காரணம் என்ற தோரணையில், இப்போது அந்தத் திருத்தத்தை நீக்கும் யாப்புத் திருத்தத்தைக் கொண்டு வரவுள்ளதான தோற்றப்பாட்டை ஆளும் தரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இவை இரண்டுமே ஒன்றுதான்! அதாவது, அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை வலுவிழக்கச் செய்தும், 19 இனை பலப்படுத்தியும் 21ஆவது யாப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்மூலம், நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிகழ்கால நெருக்கடிகள் அனைத்துக்கும், அரசியலமைப்பின் ஏற்பாடுகளே காரணம் என்பதான தோற்றப்பாட்டை, ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு ஏற்படுத்த முனைகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் அரசியல் அல்லது ஆளுகையில், முறைமைசார் மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற கருத்துகள் இப்போது வலுப்பெற்றுள்ளன. ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு அனுப்பவதன் மூலம், அதைச் செய்யலாம் என்ற பார்வைதான் பொதுவாக மக்களிடம் உள்ளது. ஆனால், அவர்களை ஆட்சியில் இருந்து நீக்குவதால் மட்டும், முறைமை மாற்றம் முழுமையாக ஏற்பட்டு விடாது என்பதே யதார்த்தமாகும்.

முறைமை மாற்றத்தை ஏற்படுத்துதலின் ஒரு முக்கிய அங்கமாக, அரசியலமைப்பு மற்றும் சட்ட ஏற்பாட்டு திருத்தங்கள் அவசியமாகின்றன. ஆனால், இலங்கையைப் பொறுத்தமட்டில், அரசியலமைப்பில் பல நல்ல ஏற்பாடுகள் உள்ளன. ஆனால், அதனை ஆட்சியாளர்களும் பெருந்தேசிய கட்சிகளும், நாட்டுக்காக மக்களின் நலனுக்காகத் திறன்படப் பயன்படுத்தவில்லை என்பதுதான் சரியான உண்மையாகும்.

ஆக, இங்கே குறைபாடு அல்லது அதிகபட்ச தவறு என்பது, பெரும்பாலும் அரசியலமைப்பைச் சார்ந்ததல்ல. மாறாக, அரசியல் தரப்புகளைச் சார்ந்திருப்பதாகும்.  
எவ்வாறாயினும், நாட்டின் அடிப்படை சட்ட ஏற்பாடுகளைத் திருத்துவது, நிலைபேறான தீர்வுகளுக்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில், அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.  ஆனால், அதைச் செய்வதற்கு, இது பொருத்தமான காலமா என்பதுதான் இங்கு ஆராயப்பட வேண்டிய விடயமாகும்.

நாட்டின் பொருளாதாரம், இப்போது எல்லா மட்டங்களிலும் சீர்குலைந்துள்ளது. டொலர் நெருக்கடியும் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியும் தொடர்கின்றன. பொருட்களின் விலைகள், நூறு முதல் இருநூறு மடங்கால் அதிகரித்துள்ளன. மக்கள், பொருட்களைப் பெற்றுக் கொள்ள நீண்ட வரிசைகளில் நாள்கணக்காக நிற்க வேண்டி ஏற்பட்டுள்ளது. வரிசைகளிலேயே பலர் உயிரை விட்டுள்ளனர்.

இதற்கான தீர்வைத் தேடுமாறு, மக்கள் கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் கண்டு கொள்ளவில்லை. தான்பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற தோரணையில் செயற்பட்டது. அதன் பிறகுதான், மக்கள் வீதிக்கு இறங்கினர்.

இன்று, காலி முகத்திடலில் நடக்கும் முற்றுகைப் போராட்டத்தை, அரசாங்கம் எவ்விதம் சித்திரித்தாலும், அதன் மூலம் ஆட்சியாளர்களுக்கு உள்ளுக்குள் ஓர் உதறல் ஏற்பட்டிருக்கின்றது. அத்துடன், மிக நேர்த்தியான இந்த அமைதிப் போராட்டம், சர்வதேச சமூகத்தின் அவதானத்தையும் பெற்றுள்ளது.

எனவே, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் பதவி விலகி, புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இடமளித்திருக்க வேண்டும். இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக, மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு, உடனடியாகத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசாங்கம் என்ன செய்தது?

அமைச்சரவையை மாற்றினால் எல்லாம் சரியாகி விடும் என்பதாகக் காட்டிக் கொண்டு, புதிய அமைச்சரவை ஒன்றை நிறுவியுள்ளது. இருப்பினும், மறுநாளே இரு பிரதான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இன்றைய நிர்க்கதி நிலைக்கு, ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானங்கள் காரணமாக அமையவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அமைச்சர்களை மாற்றியமைத்தனர்.

சரியாக அதே பாணியிலேயே, இப்போது அரசியலமைப்பைத் திருத்துதல் எனும் தாரக மந்திரத்தை, குறிப்பாக, பிரதமர் தரப்பு ஓதத் தொடங்கியுள்ளது.  
அதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை, 20ஆவது திருத்தம் வழங்கிய அதீத அதிகாரம் ஆகியவையே இந்த நிலைமைக்குப் பிரதான காரணம் என்பதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது.

இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதை அப்போதைய எதிர்க்கட்சியான இப்போதைய ஆளும் அணி கடுமையாக எதிர்த்தது. பின்னர் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியமைத்த போது, பலரும் எதிர்பார்த்தபடி 19ஆவது திருத்தத்தை இல்லாமலாக்கும் வகையில், 20ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதுமட்டுமன்றி, இரட்டைப் பிரஜாவுரிமை, ஜனாதிபதியாகப் போட்டியிடுவதற்கான ஆகக் குறைந்த வயதெல்லை எனப் பல ஏற்பாடுகளில் நினைத்துப் பார்க்க முடியாத திருத்தங்கள், ராஜபக்‌ஷ குடும்பத்துக்குச் சாதகமான விதத்தில் கொண்டு வரப்பட்டன.
இவ்வாறான திருத்தங்களைக் கொண்டு வரவேண்டாம் என்று, துறைசார்ந்தவர்களும் சமூக சிந்தனையாளர்களும் ராஜபக்‌ஷர்களுக்கு அப்போது அறிவுறுத்தினர். இதன்மூலம் எடுக்கப்படக் கூடிய அதிகார துஷ்பிரயோக ​வகையிலான தீர்மானங்களால், எதிர்காலத்தில் நாட்டுக்கு ஆபத்தாக வந்து முடியும் என்று சுட்டிக்காட்டினர்.

ஆனால், அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. விஜயதாஸ ராஜபக்‌ஷ போன்ற சட்ட நிபுணர்கள் மட்டுமன்றி, 19இனை ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்களும் 20 இற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ராஜபக்‌ஷ குடும்பத்தின் திருப்தியைப் பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் பசிலும் எடுத்த தீர்க்கதரிசனமற்ற தீர்மானங்கள்தான், இந்தளவுக்கு மோசமான பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன என்பதை இன்று, ஆளும் தரப்பினரே ஏற்றுக் கொள்கின்றனர்.

அப்படியென்றால், இவர்களுக்கு ஆதரவளித்தவர்களும் 20 இற்கு கையுயர்த்தியவர்களும் முட்டாள்தனமான முடிவுகளை எடுத்தவர்களுமே இந்த விடயத்தில் குற்றவாளிகள் ஆவர். எனவே, அவர்கள் அதற்குப் பிராயச்சித்தம் செய்யத் தவறியுள்ளதால் பதவி விலக வேண்டும் என்றுதான் மக்கள் கூறுகின்றனர். அதன்மூலம் தமது கஸ்டங்கள் தீரும் என நினைக்கின்றனர்.

இதைத்தான் எதிரணியும் கூறி வந்தது. இப்போது, அரசாங்கம் தம்மீதான பழியை மறைத்து விட்டு, 19 திருத்தத்தின் முக்கிய ஏற்பாடுகளுடன் 20 இனை வலுவிழக்கச் செய்யும் 21ஆவது திருத்தம் கொண்டுவந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறும் பாணியில் செயற்படுகின்றது.
இதன்மூலம் தாம் செய்த தவறுகள், எடுத்த பிழையான தீர்மானங்களுக்கான பொறுப்புக்கூறலை, வேறு திசைநோக்கி திருப்பிவிட முனைவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அரசியலமைப்பில் ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்து அதைத் திருத்துவது, அவசியமான ஒன்று என்பதை மறுக்க முடியாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு காலம் எடுக்கும் என்றபடியால், குறைந்தபட்சம் 21ஆவது திருத்தத்தையேனும் கொண்டுவந்தால், நீண்டகாலத்தில் முறைமை மாற்றம் ஏற்படுவதற்கான அடித்தளமாக அது அமைவதற்கான ஏதுநிலைகள் பல உள்ளன.
ஆனால், இங்குள்ள பிரச்சினை அதுவல்ல!

மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு, வாழ்க்கைச் சுமை அதிகரிப்பு, கொள்வனவு சக்தி குறைவடைந்தமை போன்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு இந்த உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தீர்வைப் பெற்றுத் தருமா என்பதே இங்குள்ள வினாவாகும்.

இன்று மக்களின் உடனடித் தேவைப்பாடுகள் இரண்டு எனலாம். ஒன்று, அன்றாட வாழ்க்கைக்கான சூழலை ஏற்படுத்துதல்; இரண்டு, அதற்கு காரணமாக இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புதலாகும்.

அவர்களே தொடர்ந்தும் அதிகாரத்தில் இருந்து கொண்டு, சட்ட ஏற்பாடுகளை திருத்துவதன் மூலம் தமது தவறுகளை இன்னுமொன்றின் மீது போட்டுவிட்டு, காலத்தை இழுத்தடிப்பதை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆகவே, இன்று புதிய யாப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக, அரசாங்கத்தாலும் எதிர்த்தரப்பாலும் அவசரமாகச் செய்யப்பட வேண்டிய பணி, நாட்டு மக்கள் எல்லோரும் எதிர்கொண்டுள்ள குடும்பப் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்த்து வைத்து, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகும்.

திருத்தத்தை தயாரித்து, சட்டமூலமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து, வாதம் நடத்தி, நிறைவேற்றி, அதன்மூலம் கட்டமைப்பு மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி, அதனூடாக மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நீண்டகாலம் எடுக்கும். அதுவரையும், மக்கள் இந்த நெருக்கடிளை தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்பதை ஆளும், எதிர்க்கட்சிகள் மறந்து விடக் கூடாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .