Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 09 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முருகானந்தன் தவம்
‘‘கொடுக்கின்ற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்’’ என்பார்கள். அப்படி ஒரு அதிர்ஷ்டத்தின் வழியாகத் தமிழ் அரசியல்வாதியாக வடக்கிலிருந்து பாராளுமன்றத்திற்குள் நுழைந்து தனது கொள்கையில்லாத, தில்லாலங்கடி அரசியல் மூலமும் தனது சமூக ஊடகம் மூலமும் இன்று இலங்கையில் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்களினால் நன்கறியப்பட்டவராக , விமர்சனங்களுக்குட்பட்டவராக உருவெடுத்துள்ளார்.
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.துணிச்சலான அரசியல்வாதியாக, கோமாளித்தன அரசியல்வாதியாக, புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் செய்யும் அரசியல்வாதியாக, உண்மையை ஒளிவு, மறைவின்றி பேசும் அரசியல்வாதியாக, பொய், புரட்டுக்கள் நிறைந்த அரசியல் வாதியாக, கொள்கை இல்லாத அரசியல்வாதியாக, தமிழ் மக்களின் வலி உணர்ந்த அரசியல்வாதியாக, தமிழ்
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல்வாதியாக, ஏனைய அரசியல்வாதிகள் மீது சேறடிக்கும் இழிவான அரசியல்வாதியாக என பல கோணங்களில் பார்க்கப்படுகின்றார். விமர்சிக்கப்படுகின்றார்.
இலங்கை அரசியலில் அர்ச்சுனா எம்.பி. போன்று மிக இலகுவாக அரசியல்வாதியாக வெற்றி பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்று அடித்துக் கூற முடியும். அந்தளவுக்கு அவர் ஒரு அதிர்ஷ்டசாலி. ஆனால் அர்ச்சுனா எம்.பியின் கொள்கை ,கோட்பாடுகள் என்ன? அவரின் அரசியல் பாதை எது?அவரின் இலக்கு இலட்சியம் எவை?அவர் நல்லவரா, கெட்டவரா? நல்ல அரசியல்வாதியா அல்லது சிறந்த நடிகரா? அவர் கூறுவதில் எது உண்மை எது பொய்?அவர் தமிழ் தேசியவாதியா அல்லது தமிழ்த் தேசியத் துரோகியா ?அவர் யாருக்கு நண்பன் யாருக்குப் பகைவன்? என்பது தமிழ் மக்களுக்கும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
ஏன் இதில் தான் எந்த வகை என்பது அர்ச்சுனா எம்.பிக்கு கூட தெரியாமல்தான் உள்ளது. அதனால்தான் அவர் நித்தம் ஒரு அரசியல் செய்கின்றார். எப்போதும் பரபரப்புக்களை ஏற்படுத்துகின்றார். தனது சமூக ஊடகத்தை மட்டுமே நம்பியிருக்கின்றார்.இதற்கு தற்போது அவர் ஜெனீவா சென்று நடத்தும் ‘ரோட் ஷோ’ அரசியல் சிறந்த உதாரணம்.
அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய நிலையில், 2024 ஜூலை மாதம், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார்.
அதன்பின்னர் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் தலையிட்டு மக்கள் மனம் வென்றார். இதன் விளைவாக, அவர் அரசியலுக்குள் நுழைந்தார். ஆனால், ஒரு மருத்துவராக நேர்மையானவராக இருந்த அர்ச்சுனாவால் ஒரு அரசியல்வாதியாக நேர்மையானவராக இருக்க முடியவில்லை.
2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு, 27,855 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அவ்வாறு தெரிவாவதற்கு முன்னரே அர்ச்சுனா தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்குப் பொறுப்பான ஒருங்கிணைப்பாளரான பெண் ஒருவருடன் தேசிய மக்கள் சக்திக்குத் தான் ஆதரவளிக்க விரும்புவதாக பேரம் பேசினார், ஆனால், அந்த ஒருங்கிணைப்பாளர் “முதலில் நீங்கள் உங்களை மூளையை பரிசோதியுங்கள்” என கூறி நிராகரித்தார்.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியானது.
இதனையடுத்து, சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அழையா விருந்தாளியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக் கூட்டத்தில் அர்ச்சுனா மேடையேறியபோது, சஜித் பிரேமதாசாவினால் மேடையிலிருந்து இறக்கப்பட்டார்.
இதனையடுத்து, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகக்கூறி அதன் ஆடையையும் அணிந்து கொண்டு திரிந்தார். ஆனால், அவர்களும் ஏற்க மறுக்கவேதான் சுயேச்சையாகத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் போட்டியிட முன்னரே இவ்வளவு பேரம் பேசுதல்களையும் அர்ச்சகனா செய்தபோதும் அவர் மீது நம்பிக்கை
வைத்தே தமிழ் மக்கள் அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.
தேர்தலில் வென்றவுடனேயே தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதாகத் தானாகவே அறிவித்தார். பாராளுமன்றத்திலும் ‘‘உங்களுக்கு 159 எம்பி.க்கள் அல்ல. என்னுடன் சேர்த்து 160எம்.பிக்கள்” என்று பிரதமரிடத்திலேயே தெரிவித்தார். அரசு கொண்டு வந்த சில சட்ட மூலங்களையும் ஆதரித்தார். ஆனால், அரசு அவரைக் கண்டு கொள்ளவே இல்லை. தனது அரசுக்கான ஆதரவை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்திப் பார்த்தார். ஆனால், அவர் நினைத்து நடக்கவில்லை .
மாறாக, அவர் பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளைகளுக்கு முரணாக நடந்து கொண்டதினால் ஒரு மாதத்திற்கு அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் தடைவிதித்தார். இதனையடுத்து, தான் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக அர்ச்சுனா சபையில் அறிவித்தார்.
தமிழ் மக்களின் எந்த நலனையும் கருத்தில் கொண்டு அவர் அரசுக்கான ஆதரவை
வாபஸ் பெறவில்லை. தன்னை அரசு தண்டித்து விட்டது என்ற கோபத்திலேயே அரசு கேட்காமல் அவராகவே வலிந்து கொடுத்த ஆதரவை அவராகவே வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
அர்ச்சுனாவின் அரசியலே பொய், வாய்க்கு வந்ததை பேசுவது, ஏனையவர்கள் மீது சேறடிப்பத, தன்னை எதிர்ப்போரைக் கீழ்த்தரமாக சபையிலும் தனது சமூக ஊடகத்திலும் விமர்சிப்பது, தன்னை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஒரு வளர்ப்பாக காட்டிக் கொள்வது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசும் ஒரேயொரு தமிழ் மக்களின் பிரதிநிதி தானே என கூறிக்கொள்வது, தானே சிங்களம் பேசத்தெரிந்த தமிழ் பிரதிநிதி என்பதாக சுய தம்பட்டம் அடித்துக் கொள்வது தான்.
இவ்வாறாக வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறியும் பித்தலாட்டங்களைச் செய்தும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரையும் தனது சமூக ஊடகத்தையும் வைத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வரும் அர்ச்சுனா எம்.பி. இப்போது அணி சேர்ந்துள்ளது நாமல் ராஜபக்ஷவுடன்.
இதனை பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றும் போது, ‘‘நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால், நான் அவரை ஆதரிப்பேன். அதனை அவரிடம் நேரடியாகவே கூறினேன். உங்கள் தந்தை, சித்தப்பா தமிழ் மக்களுக்குச் செய்த வேலைகளைச் செய்ய வேண்டாம்.
என்று அவரிடம் கூறியுள்ளேன். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்’’ என்று கூறியதன் மூலம் நாமல் ராஜபக்ஷவுடன் தனக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நாமலுக்கு ஆதரவாகவும் ராஜபக்ஷக்களுக்கு ஆதரவாகவும் அர்ச்சுனா குரல் கொடுத்து வருகின்றார்.
அதுமட்டுமல்ல, தற்போது கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ராஜபக்ஷக்கள் சிக்கியுள்ள நிலையில், அந்த கொள்கலன்களில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பாராளுமன்றத்தில் பகிரங்கமாகக் கூறி பொய்த் தகவலைப் பரப்பியவரும் இந்த அர்ச்சுனாதான்.
அவ்வாறு பொய் தகவலைப் பரப்பி அந்த கொள்கலன்கள் விடயத்தைத் திசை திருப்ப அர்ச்சுனாவை ராஜபக்ஷக்கள் குறிப்பாக, நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் வெளியிடப்படுகின்றன.
ராஜபக்ஷக்களுடனான அர்ச்சுனா எம்.பியின் டீலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றத்தில் அர்ச்சுனா எம்.பி கைதானபோது பிணை எடுத்தவர் நாமல்ராஜபக்ச. இதன்போது அர்ச்சுனா எம்.பி கருத்துக்கூறுகையில், எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றி கூறுகின்றேன். ஆனால், சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக் கொடுத்துள்ளனர்.
எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால், இந்நாட்டு
மக்கள் தமக்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக்காட்டிக் கொடுத்துள்ளனர்.
மஹிந்த தமிழ் மக்களின் தலைவர் அல்லர். ஆனால், அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால், அவர்கள் மஹிந்தவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் என கூறியபோது, நானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது.
பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக்கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்’’ என்றார்.
மீண்டும் நாட்டில் மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சக்கள் தற்போது இந்த அர்ச்சுனாவை தேர்ந்தெடுத்து பிரபாகரன் புகழ் பாட வைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றார்கள்.
அதற்காகவே 2024 ஜூலை மாதம் வரையில் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றியோ விடுதலைப் புலிகளைப் பற்றியோ எங்கும் எப்போதும் ஒரு வார்த்தைகூடப் பேசாத,தமிழ் மக்களின் எந்த வித வெகுஜனப் போராட்டங்களிலும் பங்கேற்காத, இந்த அர்ச்சுனா இன்று ‘‘பிரபாகரன் எனது தெய்வம்’’என்பதும் ‘‘தமிழ் மக்களுக்காகவே நான் முன்நிற்கின்றேன்’’ என்றும் முழங்கி வருகின்றார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தெய்வமாக நினைக்கும் வழிபடும் ஒருவரினால் எப்படி அதே தெய்வத்தை அழித்த அந்த தெய்வத்தின் தமிழீழம் என்ற ஆலயத்தைத் தகர்த்தெறிந்த ராஜபக்ஷக்களை ஆதரிக்க முடியும்? அவர்கள் நல்லவர்கள், வல்லவர்கள் என்று எவ்வாறு கூற முடியும்? ராஜபக்சக்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் ஆதரிப்பேன் என எவ்வாறு அறிவிக்க முடியும்? எனவே, அர்ச்சுனா எம்.பியின் அரசியல் தொடர்பில் தமிழ் மக்கள்தான் அதிலும் குறிப்பாக சாவகச்சேரி மக்கள்தான் தெளிவடைய வேண்டும்.
52 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
3 hours ago
3 hours ago