2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் இந்தியா

Editorial   / 2022 மே 23 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும் இந்தியா

இலங்கை முகங்கொடுத்து கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டெழுவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்குமென தெரிவிக்கப்படும் நிலையில், தற்போதை பிரச்சினையில் இருந்து மீண்டெழுவதற்கு இந்தியாவினால் வழங்கப்படும் உதவிகளை என்றென்றும் மறந்துவிட முடியாது.

கேட்கும் போதெல்லாம் இந்தியா உதவுகின்றது. இலங்கையின் பிரச்சினையை தானாகவே உணர்ந்து உதவியளிக்கின்றது. கடனுதவியும் செய்கிறது. இந்நிலையில், தமிழக மக்களால் ​​சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள், இலங்கை மக்களுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு நேரடியாகவும், தமிழகம் தானாக முன்வந்தும் உதவிகளை செய்துவருகின்றன. இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியாவின் உதவி கிடைக்காவிடின், பல மாதங்களுக்கு முன்னரே நாட்டில் பெரும் பிரச்சினை ஏற்படும்.

மக்கள், உணவுப் பொருட்களுக்காக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வர். இதனால், பாரிய கலவரம் வெடிக்குமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை செய்துள்ள நிலையில், தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், கொழும்புத் துறைமுகத்தை நேற்று (22) வந்தடைந்தன.

இந்திய அரசாங்கத்தினால், இதற்கு முன்னரும் பெரும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள், மருந்து, உணவு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, இதுவரையிலும் 12க்கும் அதிகமான கப்பல்களில், 4 இலட்சத்துக்கும் அதிகமான மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் வழங்கியுள்ளது.

எரிபொருள்கள், இந்திய கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட:டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமனவிடம், இலங்கைக்கு தேவையான ஒரு தொகுதி மருந்து வகைகளை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,   ஏப்ரல் 29ம் திகதியன்று வழங்கியிருந்தார்.

கண்டி, பேராதனை போதனா வைத்தியசாலையில் அத்தியவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளிவந்த செய்தியை பார்த்ததும். அன்றையதினம், கொழும்பில் இருந்த இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி ​ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேயுடன் தொடர்பு கொண்டு, துரிதமாக மருந்துப்பொருட்களை விநியோகிப்பதற்கு ஆவணம் செய்திருந்தார்.

 அதேவேளை, இந்திய அரசாங்கத்தினால் இலங்கை முழுவதும் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் காலப்பகுதியில் மட்டுமன்றி, கொவிட் தொற்றிருந்த காலத்திலும், லங்கைக்கு தேவைப்பட்ட உயிர் காக்கும் திரவ ஒக்சிஜன் 1000 தொன்  இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்களின் மூலம் இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்டது.

அத்துடன், இந்தியாவினால் வழங்கப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நாணய பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவிருந்தது. எனினும், அந்த கால எல்லையை இந்திய ரிசர்வ் வங்கி நீடித்தது.

இதேவேளை, இந்திய உதவித் திட்டத்தின் கீழ் 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கைக்கு  ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு இந்த உதவித் திட்டம் வழங்கப்பட்டது.

இதன்படி, குறிப்பிட்ட ஒரு வார காலத்தில் மாத்திரம் 16,000 மெட்ரிக் தொன் அரிசி இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தேவையான எரிபொருள் உள்ளட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்தியாவால் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான மெட்ரிக் தொன் எரிபொருள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய அரசாங்கம் இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கி வருகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியில் இலங்கைக்கு பெருமளவிலான அத்தியாவசிய பொட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

இதன்படி, தமிழ்நாட்டினால் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகளை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல்கட்டமாக 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் முதல்கட்டமாக   சென்னையிலிருந்து கப்பல் வழியாக இலங்கைக்கு கடந்த 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பொருட்களைத் தாங்கி கப்பல், கொழும்பு துறைமுகத்தை மே. 22 ஆம் திகதி வந்தடைந்தது.  

 இந்த பொருட்களை பொறுப்பேற்ற இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், கோபால் பாக்லே, அந்த பொருட்களை   இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.   இதன்போது, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்​கேற்றிருந்தனர்.

 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பொருட்கள் அரச அதிகாரிகளின் ஊடாக, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொருளாதார நிவாரண உதவித் திட்டத்திற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரிசி, பால்மா, மருந்து உள்ளிட்ட 2 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான மனிதாபிமான நிவாரண உதவித் திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ட்விட்டர் பதிவொன்றில் ஊடாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய மக்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் அவர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .