Janu / 2026 மார்ச் 04 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
உலக அரங்கில் அரசியல், பொருளாதார தளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இலங்கையில் மீண்டும் சிறியதாகவோ பெரியதாகவோ ஒரு நெருக்கடி நிலையை கொண்டு வருமா என்ற அச்சம்தான் இப்போது மக்களிடையே பரவலாக மேலெழுந்துள்ளது.
2019ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து நாடு மீள எழுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்ற சூழலில் தொடர்ச்சியாக புதுப்புது சிக்கல்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு கொவிட்19 தொற்று, அரசியல் நெருக்கடி, மக்கள் எழுச்சி, பொருளாதார வீழ்ச்சி என தொடங்கி, இப்போது தித்வா புயலை தொடர்ந்து புதியதொரு நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டிருப்பதான அறிகுறிகள் தென்படுகின்றன எனலாம்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எல்லா விடயப் பரப்புகளிலும் இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டு விடவில்லை. அதற்குக் காலம் எடுக்கும். இந்தப் பின்னணியில், கடந்த சில நாட்களாகவே இலங்கiயில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.
ஆனால், அதனை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. எரிவாயு நிறுவனங்களின் ஒப்பந்தம் மற்றும் இறக்குமதி சார்ந்த பிரச்சினைகளின் காரணமாகவே சந்தையில் எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களின் நிரம்பலில் குறைவு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இப்போது அந்த நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் யுத்தம் இன்னுமொரு வடிவத்தை எடுத்துள்ளது. இந்த முரண்பாடு வரலாறு நெடுகிலும் இருந்து வருகின்றது. தம்மை விட யாரையும் வளர விடக் கூடாது என்ற எண்ணமும், தமக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நாட்டாமை மளப்பாங்கும்தான் இதற்குக் காரணமாகும்.
இஸ்லாமிய சமூகத்தை அழித்தொழிப்பதற்கான காட்டுமிராண்டித்தனங்களும் அரபு நாடுகளில் இருக்கின்ற வளங்களை கபளீகரம் செய்கின்ற திட்டங்களும் அவற்றை விட முக்கிய அடிப்படை காரணிகளாகும்.
ஆனால், அரபுலக நாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அத்துமீறிய நடவடிக்கைகளுக்குச் சொல்லப்படுகின்ற நியாயங்களை உலக தலைவர்களை, சர்வதேச சமூகம் என்கின்ற கூட்டம் நம்பினாலும், பகுத்தறிவுள்ள மக்கள் மத்தியில் இவை தோல்வி கண்டுள்ளன.
அமெரிக்க சார்பு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி என்ற காலம் எப்போதோ முடிந்து விட்டது. எனவே கருத்தியல் யுத்தத்தில் அமெரிக்காவும் நேசநாடுகளும் முன்னைய அளவுக்கு இப்போது வெற்றி பெறவில்லை. யதார்த்தங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு போதுமானளவுக்கு நவீன ஊடகங்கள் வழிசெய்கின்றன.
இன்னுமொரு உலக மகா யுத்தம் தோன்றி விடக் கூடாது என்பதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்;டதாக சொல்வார்கள்.ஆனால் அதற்குப் பிறகு பிரகடனப்படுத்தப்பட்ட உலகப் போர் ஒன்று இ;டம்பெறவி;ல்லை என்றாலும், பல நாடுகளுக்கு இடையில் பெரிய யுத்தங்கள் நடந்திருக்கின்றன. இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.
எனவே, ஐ.நா.வும் அதன் ஏற்பாடுகளும் குறிப்பாக அத்துமீறிய யுத்தங்களை தடுப்பதில் தோல்வி கண்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது, ஈரானுக்கும் அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையில் தொடங்கியுள்ள யுத்தம் இன்னுமொரு உலக மகா யுத்தமாக உருவெடுக்குமா என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது. அது உலக யுத்தமாக மாறுமா என்பது தெரியாது, ஆனால் ஏற்கனவே அது ஒரு பிராந்திய மோதலாக மாறும் நிலைக்கு வந்து விட்டது எனலாம்.
தற்போது ஈரானுக்கும் - அமெரிக்க இஸ்ரேலுக்கும் இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த ஒன்றுதான். ஆனால், அறிக்கை அரசியல், அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சில முக்கிய நகர்வுகள் போன்றவை இதற்கு உடனடிக் காரணமாக சொல்லப்படுகின்றது.
ஈரானின் உயரிய மார்க்கத் தலைவர் இமாம் அல் கொமைனியை கொன்றது இந்த களநிலைமைகளை எல்லாம் வேறு ஒரு திசைக்கு திருப்பி விட்டுள்ளது. தங்களுக்கு எதிராக பேசுகின்ற, தமக்கு முன்னால் நிமிர்ந்து நிற்கின்ற தலைவர்களை வேரறுப்பது அமெரிக்காவுக்கு புதிதல்ல.
இந்தப் பட்டியலில் இமாம் கொமைனி இப்போதைக்கு கடைசி இடத்தில் இருக்கின்றார். அவர் இஸ்லாமிய தலைவர் மட்டுமல்ல. ஈரானின் மறைமுக ஆட்சியாளராகவும் கருதப்படுபவர் என்ற வகையில் இவரை கொல்வது அமெரிக்காவுக்கு பெரிய கனவாக இருந்தது.
இதுவரை அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். ஆன்மீக ரீதியாகவும் இராஜதந்திர அடிப்படையிலும் கொமய்னியை அடிபணிய வைப்பதில் கடைசி வரையும் மேற்குலகம் தோற்றே விட்டது. எனவே அவரை கொன்றதை பெரும் வெற்றியாகவே அமெரிக்க நேச நாடுகளுகள் கருதுகின்றன.
ஆனால், அரபு நாடுகள் இன்னும் மௌனம் காக்கின்ற சூழலில், இது ஈரான் மற்றும் அதனது ஆதரவு நாடுகள் எவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு இட்டுச் செல்லும் என்பதும், இது ஒரு போராக தொடருமா என்பதும்தான் உலக மக்களுக்கு இப்போதுள்ளள அச்சம் நிறைந்த கேள்வியாகும்.
இந்த மாற்றங்கள் இலங்கையில் அடுத்த கணமே தாக்களை ஏற்படுடுத்த தொடங்கிவிட்டன. ஏற்கனவே இருந்த எரிவாயு நெருக்கடி இன்னும் தீரவில்லை. இதற்கிடையில் எரிபொருளுக்கான வரிசைகள் உருவாகி விட்டன.
ஈரானைச் சுற்றி ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினால், இ லங்கையின் விமானப் போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டு;ள்ளன. இது சுற்றுலா துறையி;ல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏப்ரல் வசந்த காலத்தில் இது ஒரு நல்ல நிலைமையல்ல.
மத்திய கிழக்கில் பயிபுரிகின்ற இலங்கையர் அனுப்புகின்ற பண வருவாய் குறைவதற்கான சாத்தியமுள்ளது. தொழில் இழப்;புகளும் ஏற்படலாம். இது உள்நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
என்னதான் அரசாங்கம் விளக்கமளித்தாலும், ஈரான் மீதான தாக்குதலின் பின்விளைவுகள், ஹேர்மூஸ் நீரிணை மூடப்பட்டமை, எண்ணெய் குதங்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எனப் பல காரணங்களால் மசகு எண்ணெய்;ச் சந்தையில் நெருக்கடி ஒன்று ஏற்படக் கூடும்.
அது இலங்கையிலும் தாக்கம் செலுத்தும். நிலைமை இப்படியே போனால், எரிபொருளின் நிரம்பலில் வீழ்ச்சி ஏற்படும். இலங்கையில் எரிபொருள் நெருக்கடி, பொருட்களின் விலையுயர்வு, பணவீக்கம் என்பன மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
இதனை சமாளிப்பதற்கு என்.பி.பி. அரசாங்கம் மெதுவான முயற்சிகளையே எடுக்குமாயின், நிச்சயமாக தருணம் பார்த்துக் காத்திருக்கின்ற எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகளில் களமிறஙகும் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது.
இப்போது நபாதுவாக நாட்டு மக்கள் வரிசைகளில் நின்று எரிபொருள் நிரப்புவதிலும். வெறுமனே ஈரான் செய்திகளை பார்ப்பதிலுமே நேரத்தைச் செலவிடுகின்றனர். அரசாங்கம் நெருக்கடி நிலை இல்லi என்று விளக்கம் அளித்துக் கொண்டிருக்கின்றது.
எனவே, ஏற்படக் கூடிய சாத்தியமுள்ள நெருக்கடியை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்றால் அரசாங்கமும் மக்களும் இந்த எல்லைகளைத் தாண்டி சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும்.
03.03.2026

2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago