2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உணர்ச்சிவசப்பட்ட அஞ்சலிக்குப் பதிலாக அறிவு பூர்வமான அஞ்சலி

Thipaan   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன், அரசியல் கைதிகளின் பிரச்சினைக்காக உயிர் தியாகம் தெய்திருக்க வேண்டுமா என்ற கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். அவரது கோரிக்கையில் எவ்வித பிழையும் இல்லை. அது, நூறு சதவீதம் சரி தான். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதிலோ, அவற்றைப் பாராட்டுவதிலோ எவருக்கும் தடை இருக்க முடியாது. ஆனால், அவர் இந்த விடயத்தில், அதிலும் இந்த சந்தர்ப்பத்தில் உயிர் தியாகம் தெய்திருக்க வேண்டுமா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழ் அரசியல் கைதிகளையும் போரின் இறுதிக் கட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழர்கள், புலிகளின் வங்கிகளில் வைப்பீடு செய்திருந்த தங்கத்தையும் தமது அரசியலுக்காக பாவித்தாரேயல்லாமல் அரசியல் கைதிகளையோ அல்லது அந்தத் தங்கத்தையோ விடுவிப்பதில் நேர்மையாக ஆர்வம் காட்டவில்லை.

அக் காலத்திலும் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், மஹிந்த அவற்றை பொருட்படுத்தவில்லை. எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் கைதிகள் நடத்திய முதலாவது போராட்டத்தை அடுத்து ஜனாதிபதி அதில் தலையிட்டார். அதனையடுத்து, கைதிகளை மறுவாழ்வு திட்டமொன்றின் கீழ் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. இப்போது அந்த விடயம் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி, அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்கி அவர்களை விடுதலை செய்ய முடியாதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. அதுவும் நியாயம் தான். ஆனால், எதிர்க்கட்சியில் உள்ள மஹிந்தவின் குழு, அரசியல் கைதிகளின் பிரச்சினையை இனவாதத்தைத் தூண்டுவதற்காக பாவிக்க முற்பட்டுள்ள நிலையில், அதனை செய்ய அரசாங்கம் தயங்குகிறது போலும். எனவே, குறைந்த பட்சம் மறுவாழ்வுத் திட்டமொன்றின் மூலமாவது அவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருப்பது ஓரளவுக்கு திருப்தியை அளிக்கிறது.

ஆயினும், அத் திட்டமும் சட்டச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இருப்பதால், அதிலிருந்து திட்டத்தை முன்னெடுத்துச் செல்லச் செய்வதற்காக தனி நபர்களும் அமைப்புக்களும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளிலும் நெருக்குவாரங்களிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது என்பது உண்மை. ஆனால், கவன ஈர்ப்பு நடவடிக்கையாக எவரும் உயிர்த் தியாகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. செந்தூரன் அவ்வாறு செய்திருக்கக் கூடாது. அவர் செய்தது மாபெரும் தியாகம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர் வாழ்ந்திருந்து போராடியிருக்க வேண்டும்.

இல்லை, அவர் செய்தது சரி என எவராவது வாதிடுவதாக இருந்தால், அவ்வாறு வாதிடுபவரும் அவ்வாறு உயிர் தியாகம் செய்யத் தயாராக இருந்தால் மட்டுமே அவரது வாதம் நேர்மையானதாக இருக்கும். அவ்வாறு இல்லாவிட்டால், அது தாம் வாழ்ந்து மற்றவர்களை உயிர் தியாகம் செய்யத் தூண்டுவதற்குச் சமமாகும்.

செந்தூரனின் இறுதிக் கிரியைகள் புலிகளின் மாவீரர் நாளான நவம்பர் 27ஆம் திகதி கந்தன்காடு இந்து மயானத்தில் இடம்பெற்றது. அன்று வட மாகாண சபை அதிகாரிகளின் பணிப்பின் பேரில், வட மாகாணததில் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்டு இருந்தன. வவுனியாவிலுள்ள சிங்களப் பாடசாலைகளின் அதிபர்கள் தமக்கு தாமதித்தே பணிப்புரை வந்தது எனக் கூறி தவணைப் பரீட்சைகளை நடத்தினர்.

பாடசாலைகள் மூடியமை தொடர்பாக வெளிவந்த செய்திகளிலும் இனச் சாயல்களும் இன அரசியலும் காணப்பட்டன. 'செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்' பாடசாலைகள் மூடப்பட்டதாக சில தமிழ்ப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு இருந்த போதிலும் ஆங்கில மற்றும் சிங்கள பத்திரிகைகள் அதனை வேறு விதமாக விவரித்தன.

மாணவனின் இறுதிக் கிரியைகளைப் பாவித்து எவரும் 'கட்டுப்பாடற்ற சம்பவங்களில் ஈடுபடாதிருப்பதற்காக' பாடசாலைகள் மூடப்பட்டதாக, ஆங்கிலப் பத்திரிகைகையொன்று வட மாகாண கல்வி அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் ஏ.கே. சன்முகதாசனை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. அன்று புலிகளின் மாவீரர் நாள் என்பதால் அதனையொட்டியே பாடசாலைகள் மூடப்பட்டதாக சிங்கள பத்திரிகையொன்று கூறியது. இது, தத்தமது வாசகர்களை திருப்பதிப்படுத்தும் வகையில் போர் காலத்தில் தமிழ், சிங்கள ஊடகங்கள் செயற்பட்;ட விதத்தை நினைவூட்டுகிறது.

செந்தூரனின் மறைவு, புலிகளில் மாவீரர் வாரத்தில் இடம்பெற்று அவரது இறுதிக் கிரியைகள் புலிகளின் மாவீரர் தினத்தில் இடம்பெற்றது. எனவே, பொதுவாக அவரது மறைவு வட பகுதி மக்களது உணர்வுகளை தீவிரமடையச் செய்திருக்கும்.

குறிப்பாக, இம்முறை வரலாற்றில் முதன் முறையாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பகிரங்கமாகவே புலிகளின் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் தான், செந்தூரனுக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அரசியல் கைதிகளின் பிரச்சினை சம்பந்தப்பட்டதனால் செந்தூரனின் மரணமும் அரசியல் பிரச்சினையாகிவிட்டது. மாவீரர் அஞ்சலியும் அரசியல் பிரச்சினையே. இரண்டும் அரசியல் பிரச்சினைகள் என்பதால் அவை குறிப்பாக தமிழ் அரசியலிலும் பொதுவாக நாட்டின் அரசியலிலும் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை புறக்கணிக்க முடியாது.

புலிகள் இயங்கும் காலத்தில், நவம்பர் மாதம் 27 ஆம் திகதி புலிகளின் மாவீரர் தினமாகவே அனுஷ்டிக்கப்பட்டது. ஏனெனில், போர் நடவடிக்கையின் காரணமாக உயிரிழந்த தமது முதலாவது போரராளியான சங்கரை முதன்மையாக வைத்து, போரின் போது உயிர் நீத்த தமது ஏனைய போராளிகளை நினைவுகூரும் வகையில் புலிகள் வைத்துக் கொண்ட நாளாகும். அப்போதும் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதன் பின்னரும் அதனை அனுஷ்டிக்க அரசாங்கம் இடமளிக்கவில்லை. பல இடங்களில், மாவீரர் நாளாகவன்றி, போரின் போது உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூரும் போர்வையில், புலிகளின் ஆதரவாளர்கள் அந்நாளை அனுஷ்டிக்க முற்பட்ட போதும் அரச படைகள் அதற்கு இடமளிக்கவில்லை.

அந்தத் தடையை மீறியவர்கள் பலர், அப்போது கைது செய்யப்பட்டார்கள். யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டார்கள். 2011ஆம் ஆண்டு, அவ்வாறு யாழ். பல்கலைகழகத்தில் மாவீரர் நாளையொட்டி தீபமேற்ற முற்பட்ட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர்களது பெற்றோர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளையடுத்து பல வாரங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நாளிலும், புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கொல்லப்பட்ட மே மாதம் 18ஆம் திகதியும் தமிழ் பகுதிகளில் இவ்வாறு போரின் போது மரணித்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தப்படுகிறது. அப்போது பாதுகாப்புப் படையினர் அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுகின்றனர். அப்போதெல்லாம் நாம் புலிகளை நினைவுகூரவில்லை, போரில் இறந்த எமது உறவினர்களையே நினைவுகூருகிறோம், அதிலென்ன தவறு இருக்கிறது என்று பல தமிழ் அரசியல்வாதிகள் கேட்கிறார்கள்.

இது, புலிகளை நினைவுகூரல் பிழையென அவர்களே ஏற்றுக் கொள்வதற்குச் சமமாகும். அதேவேளை, உண்மையிலேயே பலர் அந்த இரண்டு நாட்களில் புலிகளையே நினைவுகூருகிறார்கள். இம் முறையும் பல இடங்களில், பிரபாகரனின் படமும் தமிழீழ வரைபடமும் பல நினைவஞ்சலி நிகழ்ச்சிகளின் போது காணப்பட்டன.

புலிகளின் போராட்ட இலக்கான தமிழ் ஈழத்தை இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியும் ஏற்றுக் கொள்வதில்லை. எனினும், அதனால் புலிகளின் தியாகத்தையோ அல்லது வீரத்தையோ எவரும் புறக்கணிக்கப் போவதில்லை. புறக்கணிக்கவும் முடியாது.

புலிகள் தவிர்ந்த ஏனைய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் ஒரு காலத்தில் புலிகளால் துரோகிகளாக வர்ணிக்கப்பட்டனர். அவற்றின் தலைவர்கள் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தனர். பின்னர், 1999ஆம் ஆண்டு இலங்கையின் சமாதானத் திட்டத்தில் நோர்வே சம்பந்தப்பட்டதை அடுத்து ஏதோவொரு திடீர் திருப்பம் ஏற்பட்டு, பல தமிழ்க் கட்சிகள், புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டன. அதேவேளை, அக் கட்சிகள் புலிகளின் கட்டளைக்கிணங்க செயற்படவும் நேர்ந்தது.

ஆனால், பாதுகாப்புப் படையினர் புலிகளின் தலைமையை அழித்ததன் பின்னர், சில அரசியல் கட்சிகள் தாம் ஒருபோதும் புலிகளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறின. புலிகளின் தலைமை அழிக்கப்பட்ட போது அந்த அரசியல்வாதிகள் உண்மையிலேயே வேதனையடைந்தார்களா அல்லது மகிழ்சிசியடைந்தார்களா என்பது அவர்களுக்குத் தான் தெரியும்.

எனவே, இன்று புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினாலும். சகல தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் புலிகள் மீது உண்மையாகவே பாசம் கொண்டவர்கள் எனக் கூற முடியாது. அதேவேளை, முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிட்ட போது அரசியல் கட்சிகள் மட்டுமன்றி வாக்காளர்களும் அவர்களை புறக்கணித்தனர்.

ஆனால், இத்தனைக்கும் புலிகள் தமது இலட்சியத்துக்காகச் செய்த தியாகத்தை எந்தவொரு கட்சியும் இயக்கமும் செய்யவில்லை. பூகோள அரசியல் நிலைமை காரணமாக, தமிழீழம் என்பது யதார்த்தபூர்வமானதா என்ற கோள்வியைத் தமிழ் தலைவர்களே இன்று எழுப்பிய போதிலும், தாம் சரியானது என ஏற்றுக் கொண்ட அந்த இலட்சியத்துக்காக, குண்டை உடம்பில் கட்டிக் கொண்டு போர் களத்தில் குதித்தமை தியாகம் அல்ல என்று எவராலும் கூற முடியாது.

புலிகளின் போர் நடவடிக்கைகள், போரியல் மற்றும் அரசியல் தந்திரோபாயங்கள் பிழையாக இருக்கலாம். புலிகள், பூகோள அரசியல் நிலைமையைப் புரிந்து கொள்ளாது இந்தியாவை பகைத்துக் கொண்டமை, சாதாரண மக்களைக் கொலை செய்வதன் மூலம் ஒரு காலத்தில் தம்மை ஆதரித்த சிங்கள் புத்திஜீவிகளை பகைத்துக் கொண்டமை மற்றும் வட பகுதியிலிருந்து முஸ்லிம்களை விரட்டியமை பிழை தான். ஆனால், அவர்கள் அரசியல் வியாபாரிகளாக இருக்கவும் இல்லை. அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது மரணம் என்பதை அவர்கள் அறயிந்திருந்தார்கள். பேரம் பேசி பட்டம் பதவிகளை பெறும் பல வாய்ப்புக்களை புலிகளின் தலைமை நிராகரித்தது. புலிகளின் தலைவர்கள், இறுதி நேரத்தில் சரணடைந்து தமது உயிரை காப்பாற்றிக் கொள்ள நோர்வே தலைவர்கள் செய்த ஏற்பாட்டையும் நிராகரித்தனர்.

இந்த முடிவுகள் பிழையாக இருக்கலாம். ஆனால் அவர்கள் இலட்சியவாதிகள் என்பதை இவையும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆயினும் இன்று அவர்களுக்கு செலுத்தும் அஞ்சலி மீண்டும் ஒரு போர் நிலைமையை வரவழைக்கக் கூடாது. உணர்ச்சிகளால் மட்டும் செலுத்தப்படும் அஞ்சலிகள் தீவிரவாதத்துக்கு இட்டுச் செல்லலாம்.

அந்த வகையில் செந்தூரனுக்கு அஞ்சலி செலுத்தும் போது சில அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துக்கள் பாராட்டுக்குரியவை. தாமும் செந்தூரனைப் போல் உயிரை கொடுத்து போராடியிருந்தால், தமிழ் மக்களின் பிரச்சினையை ஜெனீவாவுக்கு எடுத்துச் சென்றிருக்க மாட்டோம் என தீவிரவாதியாகவும் புலியாகவும் பார்க்கப்படும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியிருந்தார். மரணித்துத் தான் போராட வேண்டும் என்பதல்ல என்று தென் பகுதி மக்களால் தீவிரவாதியாகக் கருதப்படும் மற்றொருவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியிருந்தார். ஆம், உணர்ச்சிவசப்பட்ட அஞ்சலியை விட அறிவுபூர்வமான அஞ்சலியே பயன்தரும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X