Thipaan / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர், வடக்கில் பெரியளவிலான ஒரு மக்கள் பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. ‘எழுக தமிழ்’ என்ற பெயரில் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
இந்தப் பேரணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்களும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்களும் குறிப்பிட்டன.
இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான மதிப்பீட்டுக்குச் செல்வது இத்தருணத்தில் பொருத்தமற்றது; அநாகரீகமானது. ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் ஒரு நிகழ்வு நடத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை மட்டுமே வெளிப்படுத்தும் நோக்கில் - அரசியல் கலப்பற்றதாக இந்தப் பேரணி நடத்தப்படும் என்ற உறுதி ஏற்பாட்டாளர்களால் அளிக்கப்பட்டிருந்தது. இதன் வெற்றிக்கு அது முக்கியமான ஒரு காரணம்.
அரசியல் கட்சிகளின் பேரணியாக இது அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் தமிழரசுக் கட்சி போலப் பல அமைப்புகளும் கட்சிகளும் பின்வாங்கியிருக்கும்.
வடக்கில் இத்தகையதொரு பேரணியை நடத்தி முடித்து விட்ட திருப்தி, தமிழ் மக்கள் பேரவையிடம் காணப்படுகிறது. அமைதியான முறையில் இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டதும் அதிக கெடுபிடிகளற்ற சூழலில் இது முன்னெடுக்கப்பட்டதும் ஜனநாயக சூழலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் காட்டுகிறது.
பேரணி நடத்தியவர்கள் ஜனநாயக சூழலை மதிக்க வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையைப் போலவே, அரசாங்கமும் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயற்பட்டிருக்கவில்லை.
மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில் இதுபோன்றதொரு பேரணியை ஒருபோதும் நடத்தியிருக்க முடியாது. அதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்காது என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
இதுபோன்றதொரு பேரணியை நடத்தும் முயற்சிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல்கள், பொலிஸ் கெடுபிடிகள் மூலமே தடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். அதனையும் தாண்டி நடத்த முற்பட்டிருந்தால், புலனாய்வாளர்களும் இராணுவத்தினரும் களத்தில் இறக்கி விடப்பட்டிருப்பார்கள்.
ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள ஓரளவு ஜனநாயக சூழல், தமிழர்களின் பிரச்சினைகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. எந்த அச்சுறுத்தலும் இன்றிப் பேரணியை நடத்தக் கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
‘எழுக தமிழ்’ பேரணிக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு எதிரான எந்தக் கருத்துக்களையும் பேரணி நடக்கும் வரை வெளியிடவும் இல்லை. இது பலருக்கும் ஆச்சரியம்.
‘எழுக தமிழ்’ப் பேரணியைக் குழப்புவதற்கு இராணுவம், பொலிஸ் அல்லது புலனாய்வாளர்களை அரசாங்கம் மறைமுகமாக களமிறக்கி விட்டிருந்தால், அது ‘எழுக தமிழ்’ நிகழ்வுக்கு இன்னும் கூடுதல் பலத்தையே சேர்த்திருக்கும்.
அவ்வாறான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. அரசாங்கம் அதிகபட்ச பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடித்ததன் பின்னால் ஓர் அரசியல் திட்டம் இருக்கிறது.
அதாவது, இந்தப் பேரணிக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டால் அது சர்வதேச அளவில் அரசாங்கத்துக்கு கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும். ஜனநாயக ரீதியான தமிழர்களின் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதான குற்றச்சாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
அதேவேளை, பேரணிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் மற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்போது, அது இன்னும் வேகம் பெறும்; எழுச்சி பெறும். எங்கெல்லாம் போராட்டங்கள் அடக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் அதன் வீரியம் அதிகரிக்கும். அது வரலாற்றுப் பாடம்.
எதிர்ப்புத் தெரிவிக்காத - அடக்கப்படாத போராட்டங்களுக்கு எப்போதும், வீரியம் குறைவாகவே இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வை மேலும் வலுவானதாக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க விரும்பவில்லை.
இந்தப் பேரணி முடிந்த பின்னர், அமைச்சர்கள் பலரும் வெளியிட்டுள்ள கருத்து, இதனை அரசாங்கம் விரும்பவில்லை என்பதை அப்பட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, ‘எழுக தமிழ்’ நிகழ்வு நடப்பதை அரசாங்கம் விரும்பவில்லை என்று எவராவது கருதினால் அது முட்டாள்தனம். ஏனென்றால், இந்தப் போராட்டத்தின் மூலம் தமக்கு பெரியளவில் அழுத்தங்கள் வராது என்பது அரசாங்கத்துக்கு நன்றாகவே தெரியும்.
ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்தப் போராட்டம் நடப்பதற்கு அனுமதிப்பதும், தமக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் என்பதையும் அரசாங்கம் உணர்ந்திருந்தது.
தனது கடப்பாட்டை நிறைவேற்றுவதை இழுத்தடிப்பதற்கு இதுபோன்ற போராட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது.
ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியை சந்தித்திருந்தார்.
அப்போது அவர், வடக்கிலும் தெற்கிலும் உள்ள இனவாத, கடும்போக்குவாத சக்திகளின் அழுத்தங்கள் தமது அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சவாலாக இருப்பதாக ஜோன் கெரியிடம் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அணி திரண்டிருக்கும் இனவாத சக்திகளிடம் இருந்து கடுமையான அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது என்பது உண்மை.
இந்த அழுத்தங்கள் தனியே மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரானது மாத்திரமல்ல. மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிரான சவால்களாகவும் இருக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பின் அல்லது தெற்கிலுள்ள சிங்கள இனவாத சக்திகளின் சவால்களை கண்டு கொள்ளாமல், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடம் இருக்கிறது; சர்வதேச சமூகத்திடமும் காணப்படுகிறது.
ஆனால், தெற்கிலுள்ள இனவாத சக்திகளுடன் முரண்பட்டுக் கொண்டு தமிழர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படும் இணக்கப்பாடு நிலையானதாக இருக்குமா - நிரந்தர அமைதியைக் கொண்டு வருமா என்ற சிக்கலுக்கு அப்பால், அது தமது அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்குமா என்ற கவலையே அரசாங்க தரப்பிலுள்ளவர்களின் மேலான கவலையாக இருக்கிறது.
இதனால்தான், இலகுவாகத் தீர்க்கப்படக் கூடிய தமிழர்களின் பிரச்சினைகளைக் கூட அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது; அல்லது தீர்க்கும் விடயத்தில் மெதுநடை போடுகிறது.
தெற்கிலுள்ள இனவாத சக்திகளை மட்டும் குறைசொல்லிக் கொண்டிருந்தால், அது அங்கு அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை தீவிரப்படுத்தும்.
அதேவேளை, தமிழர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், அபிலாசைகள் அனைத்தையும் தீர்க்கின்ற எண்ணம் அரசாங்கத்துக்கும் கிடையாது.
காணிகள் விடுவிப்பில் அரசாங்கத்துக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. வடக்கு - கிழக்கு இணைப்பில் அத்தகைய முரண்பாடு உள்ளது. ஒற்றையாட்சியா - சமஷ்டியா என்பதில் முரண்பாடு உள்ளது.
இப்படிப் பல்வேறு விடயங்களில் - தமிழர்களின் அபிலாசைகளை அல்லது பிரச்சினைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகவே இல்லை.
அவ்வாறு நிறைவேற்றினால் அது அரசாங்கத்தின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்படியான நிலையில், அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்கு, தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இனவாத சக்திகளின் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக காட்ட வேண்டியுள்ளது.
வடக்கில் நடத்தப்படும் போராட்டங்களால், தெற்கில் இனவாத சக்திகளின் அழுத்தங்கள் அதிகரிப்பதாக காரணம் கூறிக்கொள்ள முடியும். அதனால்தான் தம்மால், கடப்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதிருப்பதாக நியாயப்படுத்திக் கொள்ள முடியும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், இந்தப் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் விட்டதன் மூலம், கூடுதல் சாதகத்தன்மையை அனுபவிக்க முனைந்துள்ளது.
‘எழுக தமிழ்’ நிகழ்வு தொடர்பாகவும் அதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாகவும் தெற்கில் பரவலாக எதிர்ப்புணர்வு தோன்றியிருக்கிறது.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் கண்டிக்கின்றனர்; அரசாங்கத்துக்கு வெளியே இருப்பவர்களும் கண்டிக்கின்றனர்; தெற்கிலுள்ள இனவாதிகளும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் எழுக தமிழுக்கு எதிரான ஒன்றுபட்ட உணர்வு ஒன்று தெற்கில் உருவெடுத்திருக்கிறது. இத்தகைய நிலை ஒன்று ஏற்படும் என்பதை அரசாங்கம் ஏற்கெனவே அறிந்திருந்தது.
அதனால்தான், இந்த நிகழ்வைத் தடுக்க விரும்பவில்லை; அல்லது எழுக தமிழ் நடப்பதற்கு முன்னரே, அதற்கு எதிரான கருத்துக்களை வெளியிட முனையவில்லை.
அவ்வாறு தடுத்திருந்தால் அது அரசாங்கத்துக்கு எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும்; இந்த நிகழ்வை மேலும் பலப்படுத்தியும் இருக்கும். எழுக தமிழுக்கு எதிரான ஒன்றுபட்ட உணர்வும் தெற்கில் அவ்வளவாகத் தோன்றியிருக்காது.
‘எழுக தமிழ்’ தொடர்பாக அரசாங்கம் கடைப்பிடித்த நீண்ட மௌனத்தின் பின்னால் அரசியல் சாணக்கியம் இருந்தது. ‘எழுக தமிழ்’ நடந்து முடிந்த பின்னர், அரசதரப்பில் இருந்து தொடுக்கப்படும் எதிர்ப் பாணங்கள் அனைத்துமே, முன்னைய மௌனத்தின் அர்த்தங்களை உணர்த்தி நிற்கின்றன.
இந்த நிலையில் தெற்கின் எதிர்ப்புணர்வைக் கிளறி விட்டுள்ள எழுக தமிழின் அடுத்த கட்ட நகர்வு எப்படி அமையப் போகிறது என்பதும், இதனை வைத்து அரசாங்கம் இன்னும் என்னென்ன நலன்களை அடையத் திட்டமிடுகிறது என்பதும் போகப்போகத்தான் தெரியவரும்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago