2026 மே 12, செவ்வாய்க்கிழமை

ஏமாற்றங்களையே மிகுதியாக்கும் நினைவுகள்

Janu   / 2026 மே 11 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்ஸ்மன்

"தாமதிக்கப்படுகின்ற நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது" என்கிற உண்மை புரிந்துகொள்ளப்படாத வரையில், ஏமாற்றங்கள் மாத்திரமே மிகுதியாக இருக்கும் என்பதற்கு இலங்கையே மிகச்சிறந்த உதாரணமாகும். வடக்கு - கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினை ஆயுத ரீதியாக நடத்திக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டதுடன், அப்போராட்டமும் முடிந்துவிட்டது என்கிற மனோநிலைதான் அதற்குக் காரணம்.

தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டு 17 வருடங்கள் கடந்துவிட்டன. 5 ஜனாதிபதிகள் மாற்றமடைந்திருக்கிறார்கள்; அரசாங்கங்கள் மாறியிருக்கின்றன. ஆனால், இலங்கை அரசாங்கத்தினுடைய கொள்கையிலோ அல்லது நடவடிக்கைகளிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. தமிழர்கள் ஒரு சமூகமாக முன்னோக்கிப் பயணிப்பதற்கு, கடந்த காலங்களில் மீறல்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரிப்பதும், அவை தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதும் அவசியம் என்ற வலியுறுத்தல்கள் தொடர்ச்சியாக இருந்து கொண்டே இருக்கின்றன. நிலத்திலும் புலத்திலும் முயற்சிகள் நடக்கின்றன; போராட்டங்கள் நகர்கின்றன. ஆனால், "முடிவேதும் இல்லை" என்பதே பதிலாக இருக்கிறது.

உண்மையில், தமிழர்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், தமது தாய்நாட்டில் அமைதியாகவும் கௌரவத்துடனும் வாழ்வதற்கும் உரித்துடையவர்களாவர். நிலையானதும் சுபீட்சமானதுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு, கடந்த கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வது இன்றியமையாதது என்பதனைப் புரிந்துகொள்வதற்குத்தான் இலங்கை அரசினால் முடியாமலிருக்கிறது.

அதேநேரத்தில், பேரினவாதச் சிந்தனையாளர்களின் நிலைப்பாடாக இருக்கின்ற 'உள்ளக நீதிப் பொறிமுறை' அல்லது 'உள்ளக விசாரணை' என்கிற நிலைப்பாட்டையே சர்வதேச நிறுவனங்களும் மேலை நாடுகளும் கொண்டிருப்பது கவலையானது. இதற்கு உதாரணமாக, கடந்த வாரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலிருந்தும் குறிப்பிட்ட அளவிலான காணாமலாக்கப்பட்டோருடைய உறவுகளை அழைத்து நடத்திய மூடிய அறைக் கலந்துரையாடலைக் குறிப்பிட முடியும். யுத்த காலங்களிலும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது, இனிவரும் காலங்களில் நேரடியாகக் காணாமல் போனோர் விவகாரத்தில் செயற்படாது என்கிற முடிவொன்றினையும் வெளிப்படுத்தியிருப்பதாக அறிய முடிகிறது.

பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமானால்; நீதியின்பால் அக்கறையுடையோர், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையுடன் இணைந்து பணியாற்றுவோர் என அனைவரும் விழிப்புடன் செயற்படுவதன் மூலமே அது சாத்தியமாகும். மாறாக, இவ்வாறான நகர்வுகள் நீதியைக் கோரும் மக்களுக்கு மேலும் பாதகத்தினையே விளைவிக்கும்.

சர்வதேச நீதிக்கோரிக்கையை முன்வைத்தபடி இருக்கின்ற தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் ஊடாக, 'நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின்' மூலம் மீள நிகழாமையையேனும் அடைந்து கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் உருவாவதற்கான சூழலும் உருவாகிறது. இது ஒரு பாதகமான நிலையே தவிர வேறொன்றுமில்லை.

வடக்கு - கிழக்கில் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு நீதி கோரி நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் பயனற்றவைகளாகவே இருந்து வருகின்ற இன்றைய சூழலில், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் வரவிருக்கிறது. வடக்கு - கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெறும் இதற்கான நினைவு நிகழ்வுகள், தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராட்டம் ஒன்றை நடத்தினர் என்பதை நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு வருடத்திலும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்று வரும் இந்த நினைவுகூரல்கள், அதற்கு மாறாகப் பெரிய மாற்றங்கள் எதனையும் செய்துவிட்டதாக இல்லை.

வடக்கு - கிழக்கைப் பொறுத்தவரையில், மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின்னர், ஏற்கனவே இருந்து வந்த பாதுகாப்புத் தரப்பினரது கெடுபிடிகள், தடையுத்தரவுகள், அச்ச நிலை இல்லாத ஒரு சூழலில் இப்போது நினைவுகூரல்கள் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில், "இனப்படுகொலைக்கு நீதி வேண்டும்", "இனப்படுகொலைக்குச் சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்" என்று கோருவதுடன், தமிழ்த் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட்ட தீர்வே தேவை என்பதனைத் தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். அதேநேரத்தில், தமிழர்கள் தங்கள் அடுத்த சந்ததிக்குத் தமிழர்களின் போராட்ட வரலாற்றைக் கடத்துகின்ற செயற்பாடொன்றை முன்னெடுப்பதாக எண்ணிக் கொள்ள முடிகிறது. ஆனால், அது சரியாக நகர்கிறதா என்ற கேள்வியும் காணப்படுகிறது.

காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி கோரிப் போராட்டங்கள் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன. இனப்படுகொலைக்கான நீதி கோரப்படுகிறது; அரசியல் தீர்வு குறித்துப் பேசப்படுகிறது; முயற்சிக்கப்படுகிறது. வருடத்தின் இரண்டு தடவைகளில் ஐக்கிய நாடுகள் சபையினை நம்புவதும் ஏமாறுவதும் நடைபெறுகிறது. ஆனால், பயன் ஏதும் இல்லை.

புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் உறுதியளித்திருந்தாலும், தற்போது வரையில் அதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. மாறாக, ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் நடைபெற்று வருகின்ற செயற்பாடானது "அரசியல் பழிவாங்கலே" என்ற விமர்சனங்களே வெளிவருகின்றன.

முள்ளிவாய்க்காலுக்குப் பல்லாயிரமாய் அணிதிரள்வதும், இறுதி யுத்த முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்துவதும் தமிழ் மக்கள் அன்றைய காலத்தில் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படுத்தினாலும்; அவை தற்போது தமிழர்களாலேயே விமர்சனத்துக்குள்ளாக்கப்படும் விடயமாக மாறிவிட்டிருக்கிறது.

வடக்கு - கிழக்கு பிரதேசத்தில் நடைபெற்ற பேரினவாத அரசாங்கங்களின் அத்துமீறல்களுக்கு எதிராக நடைபெற்ற அஹிம்சை ரீதியான போராட்டங்களின் தோல்வி காரணமாகவே ஆயுத இயக்கங்கள் உருவாகின. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களின் இலக்கு ஒன்றாக இருந்தபோதிலும்; நடைமுறைகள், சித்தாந்தங்கள், கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள் காரணமாக இலக்கை மறந்தவர்களாகவும், சந்தேகங்கள் மற்றும் தவறான எண்ணங்களால் முரண்பட்டும் ஒரு எல்லைக்கு அப்பால் மோதல்களை நடத்தினர். இந்த மோதல்களில் துரோகிகள், விரோதிகள் எனப் பலரும் உருவாக்கப்பட்டனர். தற்போதும் தமிழ்த் தேசிய அரசியலை நடத்தி வருகின்ற கட்சிகளிடமும் இவ்வாறான முரண்பாடுகள் காணப்படுகின்றன.

"ஆயுதப் போராட்டம் மட்டுமே அரசியல் விடுதலைக்கான வழி" என்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, நீண்டகாலம் ஆயுதப் போராட்டமே நடைபெற்று வந்தது. இருந்தாலும், பல சந்தர்ப்பங்களிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண்பதற்காகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், அவை தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டங்களும், இலங்கை அரசாங்கத்தை இனப்படுகொலையாளியாக நிரூபிக்கும் முயற்சிகளும், ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களுடன் முடிந்து போகின்ற நிலைமையே உள்ளது.

எது எவ்வாறானாலும், வடக்கு - கிழக்கில் மக்களின் உணர்வு சார்ந்த விடயமாக இருந்து வருகின்ற முள்ளிவாய்க்கால் அவலமானது, சரியான வகையில் இலங்கை அரசாங்கங்களினால் கையாளப்படவில்லை என்பதே உண்மை. தமிழ் மக்கள் தங்களது மன வேட்கைகளை வெளிப்படுத்துகின்ற போது, அவற்றினை உணர்ந்துகொள்ளக்கூடிய நிலையில் அரசு இருக்க வேண்டும். ஆனால், இலங்கையின் அரசோ அல்லது அரசாங்கங்களோ திட்டமிட்ட தங்களது நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் மாத்திரமே செயற்படுகின்றன என்பதே உண்மை.

இந்த நிலைமை தொடர்வதானது, மேலும் மேலும் விரிசலையும் மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். இம்முறை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கான ஆதரவு வடக்கு - கிழக்கிலும் கிடைத்திருந்தது. இதற்கான காரணமாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மீது மக்கள் கொண்ட வெறுப்பைக் கூறமுடியும். அதே வெறுப்பு நிலையானது, தேசிய மக்கள் சக்தி மீதும் ஏற்படாதென்று யாராலும் கூறமுடியாது.

நம்பிக்கையீனங்களால் நிரம்பி வழிகின்ற வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் கடந்த கால வரலாறு, எதிர்காலத்திலேனும் களையப்படுவதற்கு இவ்வருட முள்ளிவாய்க்காலேனும் வழிசமைக்கட்டும். தமிழ் மக்களுடைய அரசியல் மற்றும் உரிமைக்கான சுயநிர்ணயப் போராட்டம் வெற்றிபெற்றதாக இல்லாவிட்டாலும், உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டதாகவேனும் மாறும் என்று நம்புவோம். இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருந்ததென்பது மறைக்கப்பட்டதாகவோ அல்லது மறுக்கப்பட்டதாகவோ அல்லாமல் வெளிப்படையான உண்மையாகட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .