2026 மே 12, செவ்வாய்க்கிழமை

5,000 கலைஞர்களின் பங்கேற்புடன் கொழும்பில் பரதநாட்டிய நிகழ்வு

Janu   / 2026 மே 12 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக அரங்கில் இலங்கையின் கலாசாரப் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'சங்கமம் 2026' கலாசார நிகழ்வு மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சி குறித்து, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இது அமையவுள்ளது.

தென்னிந்தியாவில் நடைபெற்ற அயலகத் தமிழர்களின் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தியா-ஆசியா-இலங்கை வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத் தலைவர் மற்றும் சங்கமம் குளோபல் அகடமி நிர்வாகிகளுடன் பிரதி அமைச்சர் கலந்துரையாடினார். அந்தச் சந்திப்பின் போதே, இலங்கையின் கலாசாரப் பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், இந்த உலகச் சாதனை முயற்சியை இலங்கையில் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 2026 ஜூன் 14-ஆம் திகதி காலை 6 மணிக்குக் கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) நடைபெறவுள்ளது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பங்கேற்க உள்ளனர்.

இது குறித்துப் பிரதி அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில், “இது வெறும் உலகச் சாதனை முயற்சி மட்டுமல்ல; எமது கலாசாரம், ஒற்றுமை மற்றும் இலங்கை - இந்திய நட்புறவை உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு பெருமைமிகு நிகழ்வாகும். இந்த வரலாற்றுச் சாதனையை நேரில் கண்டுகளிக்கப் பொதுமக்களையும் ஊடகங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்,” எனத் தெரிவித்தார்.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, இந்தியாவின் சங்கமம் குளோபல் அகடமியின் நிறுவனர் மற்றும் தலைவர் K. தினேஷ்குமார் மற்றும் இலங்கையின் சங்கமிழ் லியா ஹொலிடேஸ் நிர்வாக இயக்குனர் சுமாலி தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .