2024 மே 08, புதன்கிழமை

ஒரே நாளில் சரிந்த ரூபாவின் பெறுமதி: இலங்கையில் என்ன நடக்கிறது?

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 15 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

என்.கே. அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

 

ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்று ($1) 1997ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில், 60 ரூபாய்; 2022 மார்ச் 11இல் மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ விற்பனைவிலை 260 ரூபாய். 25 வருடங்களில், இலங்கை ரூபாய் கண்டுள்ள பெருவீழ்ச்சி இது.

இந்த 260 ரூபாய் என்பது, மத்திய வங்கியின் விலைதான். ஆனால், இந்த விலைக்குக் கூட டொலரை வாங்க முடியாத நிலைதான் சந்தையில் காணப்படுகிறது. இந்தப் பெருவீழ்ச்சியின் பெருமளவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. 2019 நவம்பரில் $1, ஏறத்தாழ 180 ரூபாய்.  இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கை ரூபாய் இத்தனை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.

ஒரே நாளில் ஏறத்தாழ 200 ரூபாயிலிருந்து 260 ரூபாயாக டொலர் உயர்ந்த போது, எரிபொருள், கோதுமை மா, போக்குவரத்துச் சேவைகள் என எல்லாம் இரவோடிரவாக விலையேறியுள்ளன. இந்நிலையில், மக்கள் பலருக்கும் எழும் கேள்வி, டொலரின் பெறுமதி ஏன் கூடியது? ரூபாயின் பெறுமதி ஏன் குறைந்தது?

ஒரு பொருளின் விலை என்பது, அப்பொருளுக்கான கேள்வி, நிரம்பல் என்பவற்றில் தங்கியிருக்கிறது. எந்தவொரு பொருளுக்கும், அதற்கான வழங்கல் மாறாத நிலையில், கேள்வி அதிகரிக்கும் போது, அந்தப் பொருளின் விலை அதிகரிக்கும்.

இலங்கை தனது உற்பத்தியை ஏற்றுமதி செய்யும்போதும் டொலரில் பணம் செலுத்துவோருக்குத் தமது சேவைகளை வழங்கும் போதும்  வௌிநாட்டிலிருந்து டொலர்கள் இலங்கைங்கு அனுப்பி வைக்கப்படும் போதும் வௌிநாட்டுக் கடன்களை டொலர்களில் பெற்றுக்கொள்ளும் போதும் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்கிறது. இது டொலர் உட்பாய்ச்சலாகும்.

அதுபோல, இலங்கை தனக்குத் தேவையானவற்றை இறக்குமதி செய்யவும் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும்  தன்னிடமுள்ள டொலர்களைப் பயன்படுத்துகிறது. இது டொலரின் வௌிப்பாய்ச்சலாகும். டொலரின் உட்பாய்ச்சலை விட, வௌிப்பாய்ச்சல் அதிகமாகவுள்ள போது, டொலருக்கான தட்டுப்பாடு ஏற்படுகிறது. மிகச் சுருக்கமாகச் சொன்னால், இதுதான் இலங்கைக்கு நடந்துள்ளது.

இலங்கையின் உற்பத்தித்துறை பெருமளவு விரிவடையவில்லை. ஏற்றுமதிகள் பெருமளவு விரிவடையவில்லை. அதேவேளை, அந்நியக் கடன்கள், இறக்குமதிகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்தநிலையில், அந்நியச் செலாவணி வருவாய்க்காக இலங்கை சுற்றுலாத்துறையில் அதிகம்  தங்கியிருக்கிறது. கொவிட்-19 பெருந்தொற்றோடு, சுற்றுலாத்துறை உறைவடையவும், இலங்கைக்கான டொலர் உட்பாய்ச்சல் கணிசமாகக் குறைவடைந்தது.

இதுபோன்ற இக்கட்டான நிலையைச் சந்திக்கும் போது, மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் இயங்க வேண்டியது அவசியம். மத்திய வங்கி தன்னிடம் கையிருப்பிலுள்ள டொலரையும் தங்கத்தையும் கவனமாக முன்னுரிமை அடிப்படையில் பயன்படுத்த வேண்டும். அதற்கான கொள்கை முடிவுகளை சரியான முறையில், அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். அதனை இந்த அரசாங்கம் செய்ததா என்றால், பல தகுதியுடைய பொருளியல் நிபுணர்களும் இல்லை என்ற பதிலைத்தான் சொல்கிறார்கள்.

கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து, இலங்கையில் அந்நியச் செலாவணி சிக்கல்நிலை உருவாகத் தொடங்கியபோது, இலங்கை அரசாங்கம் எடுத்த ஒரே நல்ல முடிவு, வாகன இறக்குமதியை நிறுத்தியதுதான். இலங்கையிலிருந்து அதிகளவில் டொலர் வௌிப்பாய்ச்சல் அடையும் வழிவகைகளில் வாகன இறக்குமதி முக்கியமானது. ஆனால், அதோடு சேர்த்து இரசாயன உர இறக்குமதியையும் அரசாங்கம் தடை செய்தமை, முட்டாள்தனமான முடிவாகும்.

ஏலவே உணவுக்காக இறக்குமதியில் பகுதியளவில் தங்கியுள்ளது இலங்கை. இந்தநிலையில், இரசாயன உரம் தடைசெய்யப்பட்டால், உணவு உற்பத்தி கணிசமாக வீழ்ச்சியடையும். ஆகவே, உணவு இறக்குமதிகளை இன்னும் அதிகரிக்க வேண்டியதாக இருக்கும். அது, மேலும் அந்நிய செலாவணி வௌியேற்றத்துக்கு வழிவகுக்கும். இதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் எடுத்த முடிவு அது.

கையிருப்பிலுள்ள டொலரை, பொதுமக்களின் அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்குப் பயன்படுத்த வைத்துக்கொண்டு, கடன் மீளச்செலுத்துதல் தொடர்பில் கடன் வழங்குநர்களுடன் பேசி, கடன் மீளச்செலுத்தலை மறுகட்டமைப்புச் செய்துகொள்ளுதல்தான் உசிதமான முடிவாக இருந்திருக்கும்.

ஆனால், அதைச் செய்யாமல், ‘இலங்கை வாங்கிய கடனைக் கட்டாது விட்டுவிட்டது’ என்ற அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற வீம்பில், கையிருப்பிலுள்ள டொலர்களையும் தங்கத்தையும் கணிசமானளவில், கடன் மீளச்செலுத்தலுக்காக மத்திய வங்கி பயன்படுத்தியுள்ளது. இன்று கடன் மீளச்செலுத்தவும் போதியளவு கையிருப்பில்லை; அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கும் போதியளவு கையிருப்பில்லை.

ஆகவே, மீண்டும் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது இலங்கை. முட்டாள்தனம் என்பது ஆபத்தானது; ஆணவம் என்பதும் ஆபத்தானது. ஆனால், முட்டாள்தனமான ஆணவம் என்பது, நிச்சயம் அழிவுக்கே வழிவகுக்கக்கூடியது. அண்மைய மாதங்களில், இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட பொருளாதார முடிவுகள், ‘முட்டாள்தனமான ஆணவத்தின்’ வௌிப்பாடு என்றால் மிகையல்ல.

சரி! குறைந்த பட்சம் யதார்த்தம் நேரடியாகப் புரியத்தக்க வகையில், சந்தைப் பெறுமதியில் டொலரை மிதக்க விட்டிருந்தால், ரூபாயின் வீழச்சியானது படிப்படியானதாக இருந்திருக்கும். ஆனால், ‘முட்டாள்தனமான ஆணவத்தின்’ விளைவாக, டொலரின் பெறுமதியைப் பலவந்தமாக ஏறத்தாழ 200-203 ரூபாய்களாக மிக நீண்டகாலத்துக்கு மத்திய வங்கி கட்டுப்படுத்தி வந்தது. இதன் விளைவாக, இலங்கைக்கு அந்நியச் செலாவணி அனுப்புபோவோரும் அனுப்பாத, அல்லது சட்டபூர்வமான முகாந்திரங்களினூடாக அனுப்பாத நிலையே ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் டொலர் உட்பாய்ச்சல் இன்னும் வீழ்ச்சி கண்டது.

மறுபுறத்தில், 2019இல் கோட்டா ஆட்சிக்கு வந்ததும், 2020இன் ஆரம்பத்தில் வரிச்சலுகைகள் பலவற்றை அவர் தலைமையிலான அரசாங்கம் வழங்கியது. இது அரசாங்கத்தின் வருவாயைக் கணிசமாகப் பாதித்தது. அப்போது பல தகுதியுடைய பொருளியல் நிபுணர்கள், இந்த முடிவு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இன்று அரசாங்கத்துக்குத் தனது செலவுகளைச் சமாளிக்க, போதிய வருவாயில்லை.

மறுபுறத்தில், அரசாங்கம் பல நூறு பில்லியன்களை அச்சடித்து, புழக்கத்தில் விட்டுக்கொண்டிருக்கிறது. விளைவு ரூபாயின் பெறுமதி இன்னும் இன்னும் வீழ்ச்சி கண்டுகொண்டிருக்கிறது. இது நடக்கும் போதே, வட்டிவீதத்தையும் குறைவாகக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிறது மத்திய வங்கி.

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டியின் படி, தற்போது இலங்கையின் வருடாந்த பணவீக்கம் 16.8 சதவீதமாக இருக்கிறது. இன்றைய நிலையில், இலங்கை வங்கியின் சேமிப்புக்கான வட்டி வீதம், சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மூன்று சதவீதமாகவும், அதிகபட்சமாக ஐந்து வருட நிலையான வைப்புக்கு 9.25 சதவீதமாகவும் வட்டி வழங்குகிறது. சுருங்கக் கூறின், இன்றைய நிலையில் உங்களது பணத்தை சாதாரண சேமிப்பு கணக்கில் வைத்திருந்தால், அது வருடத்துக்கு 13.8 சதவீத மதிப்பை இழக்கிறது.

மறுபுறத்தில், டொலர் ஒரே நாளில் 203 லிருந்து 260 ஆக ஆனதில், தமது வாழ்நாள் சேமிப்பை ரூபாயாக சேமித்து வைத்திருந்தவர்களின் வாழ்நாள் சேமிப்பின் பெறுமதி, ஒரே நாளில் சரிந்துள்ளது. எவ்வளவு பெரிய கொடுமை! ‘முட்டாள்தனமான ஆணவம்’ மிக்க ஆட்சியாளர்களின் அக்கறையற்ற முடிவுகளால் ஏற்பட்ட நிலை இது.

இந்த நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள, ஒரு ‘பொருளியல் சபை’யை ஜனாதிபதி கோட்டா ஸ்தாபித்துள்ளாராம். உடனே இது சுதேச மற்றும் சர்வதேச பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஓர் ஆலோசனைச் சபை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஏமாற்றமே!

இந்தச் சபையில் உள்ளவர்கள் யாரென்று பார்த்தால், கோட்டா, மஹிந்த, பசில் ஆகிய ராஜபக்‌ஷ சகோதரர்கள். இலங்கையின் இன்றைய இந்தப் பொருளாதார நிலையை ஏற்படுத்திய, பலமுடிவுகளை எடுத்த மத்திய வங்கி ஆளுநர் கப்ரால், அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார ஆகியோராவர்.

இதில் ஆட்டில, நாணயக்கார ஆகியோர் பொருளியல் அறிவும் அனுபவமுமுள்ள மத்திய வங்கியாளர்கள். அமைச்சர் பந்துல குணவர்த்தன வௌிநாட்டு கற்கைகளுக்கான பீஜிங் பல்கலைக்கழகத்தில் சீன-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பு பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர். ஆனால், மாதம் 2,500 ரூபாயில் ஒரு குடும்பம் சீவிக்க முடியும் என்ற அரும்பெரும் தத்துவத்தையும் சொன்னவர். இந்தச் சபையால் ஏதேனும் நன்மை விளையும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X