Janu / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பிறகு கிழக்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரங்களை மீளக் கட்டியெழுப்புவதுடன், அந்த மக்களை ஆசுவாசப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் ஸ்திரப்படுத்த வேண்டிய ஒரு தேவையை இயற்கை ஏற்படுத்தியிருந்தது. அதேபோன்றதொரு நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கின்றது.
அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ளப்பெருக்கு, மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சுனாமி பேரலையால் பறிபோன உயிர்களை விட எண்ணிக்கையில் குறைவு என்றாலும், நாட்டின் பல பாகங்களிலும் பரவலாக ஏற்பட்ட அனர்த்தம் என்பதாலும், பௌதீக அழிவுகள் பரதூரமானவை என்பதாலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் மக்களையும் வழமைக்கு கொண்டு வருவதல் என்பது மிகச் சவாலான பணியாக இருக்கப் போகின்றது.
இலங்கையில் ஒவ்வொரு கால் நூற்றாண்டுக்கும் ஒரு தடவை பெரிய அனர்த்தமொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 1950களில் வெள்ளம், 1970 களின் பிற்பகுதியில் புயல், 2004 ஆழிப்பேரலை, இப்போது 'திட்வா' புயலும் மழையும் என்று மேலோட்டாகக் குறிப்பிடலாம்.
இவை எல்லாவற்றையும் நாடும் மக்களும் கடந்தே வந்திருக்கின்றனர்; ஆனால் அதற்காக நிறைய காலத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டியிருந்தது.
நமக்கள் பௌதீக ரீதியாக மீள்வதற்கும் மனநிலை அடிப்படையில் பழைய நிலைக்கு திரும்புவதற்கும் நீண்டகாலமெடுத்தது. எனவே இப்போது ஏற்பட்டுள்ள அழிவுகளை ஒரே மாதத்தில் சரிசெய்து விட முடியாது.
நாட்டின் தேசியப் பொருளாதாரத்திலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் தனிநபர்களின் வாழ்வாதாரத்திலும் முன்னெப்போதுமில்லாத பின்னடைவை இந்த அனர்த்தம் ஏற்படுத்தி இருக்கின்றது எனலாம்.
வீடுகள், ஆவணங்கள், நகைகள், பணம், வாகனங்கள், விளைநிலங்கள், பிற சொத்துக்கள் என தமது வாழ்நாள் முழுவதும் ஓடியோடு குருவி சேகரிப்பது போல ஒன்றுசேர்த்த அனைத்தையும் கணிசமான குடும்பங்கள் இழந்துள்ளன. இன்னும் சிலருக்கு ஒப்பீட்டளவில் சற்றுக் குறைவான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மரணித்தவர்களுக்காக மரணச் சான்றிதழைப் பெறுவதுடன் உயிருடன் இருப்பவர்களுக்கான அனைத்து ஆவணங்கள், வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஏற்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், கிட்டத்தட்ட பூச்சியத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்க வேண்டிய நிலை ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் மிகச் சிறப்பான நிவாரண, மீட்சித் திட்டங்களை அறிவித்துள்ளன. வெளிநாட்டு உதவிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆயினும், இந்த மக்களை மனவள ஆற்றுகைக்கு உட்படுத்துவதும் பாதுகாப்பான காணிகளை தெரிவு செய்து அதில் குடியமரச் செய்வதும் முக்கியமான சவாலாகும். இதில் நிறையவே நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. நிவாரணப் பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து விடும். ஆனால் இதுவரை ஒரு சில தொலைதூர, துண்டிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் செல்லவில்லை எனக் கூறப்படுகின்றது.
எது எப்படியோ நிவாரணப் பணிகள்; முடிவடைந்த பிறகும், பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை மீள நிலைநிறுத்துவதற்கான வேறு பல முக்கிய நீண்டகால தேவைகள் உள்ளன. அதற்காக அரசாங்கம் நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக வீடுகளை பகுதியளவில் இழந்த மக்களை அவற்றை புனரமைத்துக் கொடுப்பது முகக்pயமானது. அதைவிட இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன மக்களுக்கு மலையகத்திலேயே பாதுகாப்பான மாற்றுக் காணிகளை வழங்கி குடியேற்றுவது அதைவிடச் சவால்மிக்க பணியாக அமையலாம்.
பொதுவாக அரசாங்கம் அறிவிக்கும் நலத் திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைவதி;ல்லை. அதிகாரிகள் பக்கம் தவறுகள் நடக்கின்றன. அத்துடன், பாதிக்கப்படாத சிலரும் உதவி கோருவதும் உண்டு.
நலனோம்பு திட்டங்கள் மக்களைச் சரியாகச் சென்றடைவதில் சிக்கல்கள் உள்ளன என்ற விடயத்தை அண்மையில் ஜனாதிபதியும் அதிகாரிகளிடம் கூறியிருந்தார். எனவே, உண்மையி;ல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசின் முயற்சிகள் வீணாகி விடும்.
நாடு என்ற அடிப்படையில் சமூக, பொருளாதார ரீதியில் இந்த அனர்த்தம் பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றமை பட்டவர்த்தனமானது. இதில் இருந்து மீள்வது என்பது அரசாங்கத்திற்கு அவ்வளவு இலகுவான சவாலாக இருக்குமெனக் கூற முடியாது.
மலையகத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தோட்டப்புற தொழில்கள் உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட ஏனைய இடங்களில் மக்களின் வயல்நிலங்கள், தொழி;ல்துரவுகள் இருந்த இடம் தெரியாமல் அழிவடைந்துள்ளன. கடைகள், வாகனங்கள், உபகரணங்கள் என தொழில் சார்ந்த இழப்புகள் கணக்கிட முடியாதவை.
இது தேசிய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிச்சயம் தாக்கத்தை செலுத்தும். உள்நாட்டு உற்பத்தி, தொழில் முயற்சிகளில் இருந்தான வருமானம் குறைவடைகின்ற சமகாலத்தில் பாலங்கள், வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பெருந்தொகை நிதியை செலவிட வேண்டி உள்ளது.
உலக நாடுகள் உதவினாலும், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் நிதி உதவிகளை வழங்கினாலும் அரச நிதியில் கணிசமான பங்கை நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு செலவிட வேண்டிய நிர்;ப்பந்தமுள்ளது.
இதனால், ஏனைய புதிய முதலீடுகள், அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவடைய வாய்ப்பிருக்கின்றது. அதன் காரணமாகவே சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடாத்துமாறும், அதற்கான அனுபவமுள்ள தரப்புக்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன.
நாடு ஏதோ ஒரு அடிப்படையில் மிதமான பொருளாதார வளர்ச்சியுடன் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாட்டை அப்படியே சீர்குலைத்தது.
இதிலிருந்து மீள்வதற்கு இடையில் ஏற்பட்ட கொவிட் 19 வைரஸ் தொற்று 2020 – 2021 ஆம் ஆண்டுகளில் நாட்டை அப்படியே முடக்கிப் போட்டது. உலக நாடுகளைப் போலவே இலங்கையும் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. ராஜபக்சக்களின் அதிமேதாவித்தனமான ஆட்சியும் இதற்குக் காரணமாக அமைந்தது.
பொருளாதார வீழ்ச்சி அப்படியே நாட்டை ஒரு அரசியல் ஸ்திரமற்ற புள்ளிக்கு கொண்டு வந்து விட்டது. ஆட்சி மாற்றம் பற்றிய கோஷங்கள் அரகலய எழுச்சியாக உருப்பெற்றன.
கோட்டாபாய நாட்டை விட்டு ஓட, ராஜபக்சக்கள் ஒழிந்து கொண்டனர். நாட்டைப் பொறுப்பெடுக்க யாரும் முன்வராத ஒரு கட்டமாக அது இருந்தது.
அப்போது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பெடுத்து ஓரளவுக்கு நிலமைகளைச் சீராக்கினார். இருப்பினும், நாடு முற்றாக ஸ்திரநிலைக்கு வருவதற்கு இடையிலேயே தேர்தல்கள் இடம்பெற்று ஆ;;ட்சி மாற்றமும் ஏற்பட்டதை நாமறிவோம்.
இப்படி தொடர்;ச்சியாக 'சாண் ஏற முழம் சறுக்கியது போல' காணப்பட்ட இலங்கை தேசமானது தித்வா புயலின் விளைவுகளால் இன்னுமொரு பாரிய சறுக்கலைச் சந்தித்துள்ளது.
இது யாரும் எதிர்வுகூறியிராத அழிவு என்ற படியால் இந்த நிலைமைகளை மீளச் சீரமைப்பது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரும் சவாலாகவும் நீண்டகாலத்தை எடுக்கக் கூடியதாகவும் இருக்கும் எனபது வெளிப்படையானது.
வெள்ளப் பெருக்கும். மண்சரிவும் ஏற்பட்டு அந்த மக்கள் செய்வதறியாது நிர்க்கதியாகி நின்ற போது, கிழக்கில் இருந்தும் தெற்கில் இருந்தும் சாரைசாரையாக வந்த மீட்புப் பணியாளர்கள், நிவாரணத் தொண்டர்கள் 'உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கின்றோம்' என்ற செய்தியை அந்த மக்களுக்கு சொல்லாமல் சொன்னார்கள். இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பக்கட்ட தைரியத்தை ஏற்படு;த்தியது எனலாம்.
இப்போது மீதமுள்ள மீள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்கின்ற விடயத்திலும் முதலில் அவர்களுக்கு அப்படியான ஒரு செய்தியை அரச இயந்திரமும், ஏனைய மக்களும், வெளிநாடுகளும் குறிப்புணர்த்த வேண்டிய தேவையுள்ளது. அது அவர்களை மனநிலை ரீதியாக பலப்படுத்தும்.
அதேபோன்று, உள்நாட்டு அரசியல்வாதிகளோ சர்வதேச நாடுகளோ இலவு வீட்டில் அரசியல் செய்யாமல், அழிந்துபோயுள்ள இலங்கையின் கிராமங்களையும் மக்களின் வாழ்க்கையையும் கட்டியெழுப்பும் சவால்களை வெற்றிகொள்ள துணைநிற்க வேண்டும். சவால்களை கடந்து செல்வதே இலங்கையரின் தலையெழுத்தாகிவிட்டது.
2025.12.17
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025